பூக்கச்செய்கிறது பொன்தாலி!

நிலவினை கிரகணம் தீண்டியது
மறுபடி பௌர்ணமி தோன்றியது
விதியும் புதியது கதையும் புதியது
காலத்தின் தீர்ப்பு இது
தெய்வத்தின் சேர்ப்பு இது

கல்யாணம் என்பது எங்கெங்கோ இருக்கும்  உறவுகளை இணைக்கும் சடங்கு மட்டுமல்ல,. அது இரண்டு மனங்களை இணைக்கிறது. அவர்களின் எண்ணங்களை இணைக்கிறது, உலகத்தின் சகல பந்தங்களை விடவும் திருமண பந்தமே உன்னதமானதாய் விளங்குகின்றது. மற்ற எல்லா உறவுகளும் ஒரு எல்லைக்குள் நிற்பவை. ஆனால் கல்யாணமோ ஒருவர் இறந்த பின்னும் மற்றவரை எண்ணங்களில் உறவாட வைக்கிறது.

 துணையை இழந்ததும் தீக்கங்குகள் போல எரிக்கும் நினைவுகளில் இருந்து மீளமுடியாது தவிப்பவர்கள் பலருள்ளனர். நினைவுத் தீயின் வேகத்தை இன்னொரு துணையால் அணைத்துவிட முடியுமா என்றால்  அதற்கு பல காயங்களைக் கடக்கவேண்டும். பல அவமானங்களைச் சகிக்கவேண்டும்.  இவை எல்லாவற்றிற்கும் மேலாக அளவில்லாத அன்புகாட்டத் தெரியவேண்டும்.

சுந்தர் – சுஜித்தா.  வாழ்விலும் அதுதான் நடந்தது. இருவருமே வாழ்வில் தமது முதல் துணையைப் பறிகொடுத்தவர்கள். பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு பிள்ளைகளின் எதிர்காலம் கருதி திருமணமும் நடந்துமுடிந்தது. இருவருக்குமே ஒவ்வொரு பிள்ளைகள். “கொஞ்ச நாள்தான் இப்படி வாழமுடியும்,” என பலரும் பலவிதமாய் கருத்துக்கள் சொன்னார்கள் தான், ஏன் அவர்களுக்கே கூட ‘எத்தனை நாள் பந்தம் இதோ’ என்ற எண்ணமே அதிகமாய் இருந்தது. கணவனின் வீட்டுக்குள் புதுமருமகளாய் அடியெடுத்து வைத்தாள் சுஜித்தா. வந்ததுமே பல விடயங்கள் அவளைக் கலங்க வைத்ததென்னவோ உண்மைதான்.

கணவனின் முகத்தில் தெரிந்த வெறுமையே அவனது மனதிலும் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டாள். சுந்தரின் ஒரே செல்ல மகன் ஆதவ், யாரோ சொன்ன சித்தி கொடுமையை அப்படியே மனதில் பதித்திருந்தான் என்பதை அவனது ஒவ்வொரு செயலும் சொல்லாமல் சொன்னது. மிரட்டும் பார்வையோடு வலம்வரும் மாமனாரைப் பார்க்கும் போது இதயம் ஒவ்வொரு முறையும் பல்டி அடித்துக்கொண்டது.

இவர்களுக்கிடையில் தன் தாய் வீட்டில் இருக்கும் மகள் அபித்தாவை எப்படி இங்கே கொண்டுவருவதென்பது மிகப்பெரிய மனப்போராட்டமாய் மாறிப்போனது அவளுக்கு. இத்தனைக்கும் இடையில் மாமியார் காட்டிய பரிவும் அன்புமே ஒருவித தைரியத்தை தந்தது எனலாம்.

முதலில் எங்கிருந்து ஆரம்பிப்பது என யோசித்தவள், மாமியாரிடமே யோசனை கேட்டாள். தன் அன்பென்ற ஏவுகணையை முதலில் ஏவியது ஆதவ்விடம் தான். அவனுக்கு பிடித்தவைகளைத் தெரிந்துகொண்டாள். பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் கவனித்துக்கொண்டாள். பத்து வயதுக் குழந்தை மனம் சட்டென்று ஒட்டிக்கொண்டது இவளிடம். மாமனாரிடம் மருமகளாய் அல்லாமல் ஒரு மகளாய் அன்பு காட்டினாள்.  பாசம் யாரைத்தான் கனியவைக்காது, இதில் அவளது மாமனார் மட்டும் விதிவிலக்கா என்ன? மைத்துனர்களிடம் அண்ணி என்ற உறவோடு நண்பியாகவும் நடந்துகொண்டாள். “அண்ணி அதைக்கண்டீங்களா? அண்ணி சாப்பாடு ரெடியா? அண்ணி அண்ணாட்ட பை கீயை வாங்கித்தாங்க” என்னுமளவிற்கு அவர்களின் மனதில் இடம்பிடித்திருந்தாள்.

எல்லாவற்றையும் பார்த்து வார்த்தையில் மாமியார் பாராட்டினார் என்றால், கனிவோடு பார்த்து கண்களால் மெச்சினான் கணவன் சுந்தர்.
ஒரு விடயம் மட்டும் சுஜித்தாவிற்கு தெளிவாய் புரிந்தது. சுந்தர் என்பது ஒரு தனிமனிதன் கிடையாது. அம்மா, அப்பா, தம்பிமார், தங்கை இவர்களோடு தன் உயிராய் அவன் நினைக்கும் ஆதவ் என மொத்த குடும்பமும் தான் அவனது உலகம் என்பது. இவர்கள் அத்தனை பேர் மீதும் அவள் காட்டிய அன்பு அவனது உள்ளத்தை மெல்ல இளகவைத்தது. முதல் மனைவி  ஆரணி மீது கொண்ட நேசம் ஒருபோதும் மாறாது என்ற அவனது எண்ணச்சுவர் மெல்ல உடையத்தொடங்கியது. சுஜித்தாவை கண்டாலே விலகிப்போனவன் மெல்ல நெருங்கத்தொடங்கினான். அலுவலகம்  செல்லும் போது அம்மாவிடம் மட்டுமே சொல்லிவிட்டுச் சென்றவன் நேருக்கு நேர் பார்த்து அவளைத் திணறச்செய்தான். சிரிப்பையே மறந்திருந்தவன் மெல்லப் புன்னகைத்தான், நாட்களின் நகர்வில் வாய்விட்டே சிரிக்கத்தொடங்கினான்.

அவளுக்காக புத்தகங்கள், அலங்காரப் பொருட்கள் வாங்கிவந்து மேசையில் வைத்தான். அவள் அதனை எடுத்துப்பார்க்கும் அழகை மறைந்திருந்து ரசித்தான்.

 கண்ணுக்கு மை வாங்கிவந்தான், “ கண் மை போட்டுக்கொள்ளுங்கள், அழகாய் இருக்கும்” என்றான். நாளடைவில்,

"என் உலகத்தில் நீயும் வா"  என்றான். வெளியே சிரித்தாலும் மனைவியின் கண்ணில் ஒருவித வலியைக் கண்டான், காரணம் புரிந்து சுஜித்தாவின் மகளை தானே சென்று அழைத்துவந்தான். அபித்தாவின் மீது அப்பா என்ற பாசத்தைக் கொண்டினான், அவளுக்கும் தன் மீது உரிமை உண்டென் புரியவைத்தான்,  தன் மகன், தன் மகள் என இருவரையும் சமனாக நடத்தினான்.

நாட்கள் உருண்டன, மனைவியின் கைகளைப் பற்றிக்கொண்டு “என் வாழ்க்கையில் நீ தேவதையாய் வந்தாய்” என்றான்.
சுஜித்தாவின் இயலாமைகளில் அவன் துணையானான், முதல் திருமணம் அவளுக்கு தோற்றுப்போனதென்னவோ உண்மைதான்,

அவளது முதல் கணவன், அவளிடம் பாசத்தைக் காட்டவுமில்லை, விலக்கிவைக்கவுமில்லை, 'கிடைத்தது, இது போதும்' என்பதாகவே இருந்தது அவளது வாழ்க்கை, அவளுக்கென்று பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இதுவரை இருந்ததில்லை,

ஏனோ, இப்போதெல்லாம்,  எண்ணற்ற கற்பனைகள், ஏராளம் எதிர்பார்ப்புகள்  அவளுக்குள்,
இதில் விந்தை என்னவென்றால் அவளது கற்பனைகளை, ஆசைகளை  நிஜமாக்கினான் அவளது கணவன் சுந்தர். காலங்கள் கடந்தும் அழகான இல்லறம் இன்றுவரை அவர்களுக்குள்.

காதலித்து கல்யாணம் செய்யும் பல முதல் திருமணங்கள் தோற்றுப்போக மறுமணங்கள் சில வெற்றிபெறுகிறது. காரணம் புரிதலும் அன்பும்தான்.

கோபிகை

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.