தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால வடமராட்சிப் பகுதிப் பொறுப்பாளர்மேஜர் ஜேம்ஸ்...!

“இராசாத்தியின்” இராஜபாட்டையில் !……

நடுநிசி எங்கும் ஒரே இருட்டு. ஆனாலும் அந்த மண் உறங்கவில்லை. அது உறங்குவதுமில்லை. விடியலைத்தேடி நேரம் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் வல்வெட்டித்துறை மண்ணோ அந்த இரவிலும் தமிழ் இனத்தின் விடிவிற்காக போராடிக்கொண்டிருக்கும். எங்கள் ஈழமண் முழுமையாக அங்குலம் அங்குலமாக இந்திய வல்லாதிக்கத்தின் காலடியில் மிதிபட்டு எங்கும் பயப்பிராந்தியே குடிகொண்டிருந்த வேளையிலும் அந்த கடற்கரையோர மண் உறங்கவில்லை.
எந்த நேரத்திலும் எந்த வேளையிலும் எந்த வீடும் சுற்றிவளைக்கப்பட்டு எந்த வீட்டுக்கதவும் தட்டப்பட்டும் தட்டப்படாமலும் வேலிகள் வெட்டப்பட்டும் சுவரேறிக் குதித்தும் இந்திய இராணுவம் உள்நுழையலாம் எனும் அச்சுறுத்தல் நிலவிய போதும் அந்தவீட்டில் சிறு விளக்கொன்று எரிந்து கொண்டே இருக்கும். அதன் அருகில் சாய்மனைக்கதிரையில் படுத்திருந்தும் உறங்காது எப்பொழுதும் வரப்போகும் தனது பிள்ளைகளிற்காக விழித்திருப்பாள் அந்தத்தாய். எந்தநிலையிலும் இந்திய இராணுவத்தினர் உள் நுழையலாம் என எதிர்பார்த்து தத்தமது வீடுகளைப் பூட்டிவிட்டு மக்கள் ஒழிந்து கொள்ளும் நிலையிலும் இராணுவம் நுழையும் என எதிர்பார்க்கப்படும் அந்த வீட்டிலேயே குழுமி இருக்கும் சில அயலவர்கள் தமது பாதுகாப்பிற்கு அந்த தாயையே நம்பி அந்த வீட்டின் சில பகுதிகளில் உறங்கிக்கொண்டிருந்தனர்

டொக்……டொக்……டொக்……!!!

மூன்று தடவைகள் அந்த வீட்டின் கதவுகள் மெல்லத் தட்டப்படுகின்றன. பெரியசத்தமின்றி இடைவிட்டு ஒன்றன் பின் ஒன்றாக தொடராகவும் எச்சரிக்கையுணர்வுடன் அதேவேளை கூர்மையுடன் தட்டப்படும் அச்சத்தங்களினைத் தொடாந்து பபரபரப்புடன் எழுந்து கொள்ளும் அனைவரும் பார்த்திருக்கவே யாரடா அவன்? என்னும் கேள்வியுடன் பயமின்றியே கதவைத் திறக்கும் அந்த தாய்குப் பின்னாலேயே திபு திபு என ஆயுதங்களுடன் உள்நுழையும் ஐந்து ஆறு பேர்; “அது நாங்களனை” எனும் வாஞ்சையுடன் ஆயுதங்களைச் சுவரோரம் சாத்தி வைத்துவிட்டு அங்கிருந்த வாங்கில் அமர்ந்துகொள்ளவும் அங்கு குழுமி நின்ற பெண்கள் அவசர அவசரமாக உணவைப் பரிமாறுகின்றனர். சாப்பிடும் அவர்களின் அருகில் சென்று ஒவ்வொருவரின் தலையையும் தடவி அவர்களின் பெயரைச் சொல்லி அவர்களின் பிரச்சனைக்கு தீர்வையும் கூறுகின்றாள் அந்தத் தாய். சாப்பிடும் போதே சுகநலம் விசாரித்து சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே வந்தவழி தெரியாது மறைந்துவிடுகின்றனர்; அவ்விளைஞர்கள். அதன்பின் சிறிது நேரத்திலேயே இந்திய இராணுவத்தால் சுற்றி வளைக்கப்படுகின்றது அந்தவீடு.

படபட…… படபட……படபட…… எனப் பல தடவைகள் ஓங்கி அறையப்படும் அந்த வீட்டின் கதவுகளை சாவகாசமாக மீண்டும் திறக்கும் அந்தத் தாய். இது “இராசலக்ஸ்சுமி வாசா” எனக்கூறப்படும் அந்த வீட்டிற்கும் அந்தவீடு இருக்கும் “உடையாமணல்” ஒழுங்கைக்கும் அது அமைந்திருக்கும் “வேம்படி”ப்பகுதிக்கும் ஏன் “வீரஞ்செறிந்த வல்வெட்டித்துறை” மண்ணிற்கும் பழகிப்போன அன்றாடவிடயங்களே !………..

உறங்கும்போதும் ஆயுதங்களை அணைத்தவாறே உறங்கும் அந்த இளைஞர்களால் அந்த வீட்டில் எப்படி ஆயுதங்களை இறக்கி வைக்க முடிந்தது ?…… தனிமனிதர்களின் உயிரைப் பாதுகாக்க அல்ல !…… தமிழர்களின் மண்ணைப் பாதுகாக்க தூக்கப்பட்டவையே அவைகள். அதனால் தான் எதிரியிடமிருந்து ஆயுதங்களை கைப்பற்றுவதற்காகவும் தமது சிறு ஆயுதங்களைக் கூட தாம் உயிருடன் இருக்கும் போது எதிரியிடம் இழந்துவிடக் கூடாதென்பதற்காக தமது உயிரையே இழந்தவர்கள் பல விடுதலைப்புலிகள். அவர்களிற்குத்தான் தெரியும் “தொடராக மூன்று முறை” கதவைத்தட்டும் தொனியின் அடையாளமே தமது அடையாளம் என. இது அநத வீட்டிற்கு மட்டுமல்ல. தமிழீழத்தின் முதலாவது பொலிஸ் மாஅதிபரும் குறுகியகாலத்தில் விடுதலைப்புலிகளின் அரசியற்துறையை சர்வதேச இராஜதந்திர மட்டத்திற்கு உயர்த்திய நடேசனுடைய வீடு மற்றும் மேஜர் ஜேம்ஸ்சினால் வல்வெட்டித்துறைக்கு அழைத்து வரப்பட்டு பாதுகாக்கப்பட்ட “கடாபி” மாஸ்ரரின் (இவரே பின்னாட்களில் மாவீரர் பணியகப்- பொறுப்பாளரான பொன்தியாகம் ஆவார்) வீடு. மேற்படி வீடுகளிற்கும் விடுதலைப் புலிகளிற்குமான தகவல் தொடர்பாடல் குறியீடாக இந்திய இராணுவ காலத்தில் மூன்று முறை தொடராக கதவைத்தட்டும் அத்தொனியே விளங்கியது!……….ஆதனால்த்தான் எந்த நேரத்திலும் அந்தவீட்டை அவர்களால் தட்டமுடிந்தது. அத்துடன் அந்த நள்ளிரவு வேளையிலும் அவர்களால் நிம்மதியாக ஆயுதங்களை இறக்கிவைத்து விட்டு பகல் முழுவதும் பசியால் வாடிய வயிற்றிற்கு உணவு கொடுக்கமுடிந்தது. அந்த வீடு இந்திய வல்லாதிக்க இராணுவகாலத்தில் மட்டுமல்ல. அதற்கு முன்பு இலங்கை இராணுவம் நடமாடிய வேளையிலும் போராளிகளிற்காக காத்திருந்தது. ஏன்?….. ஆயுதப்போர் எமது மண்ணில் கருவாவதற்கு முன்பே 1956 இல் தமிழ்த்தேசிய உணர்வு எமது மண்ணில் சூல் கொண்ட வேளையில் இருந்தே அந்த “இராசலக்ஸ்சுமி வாசா” இனஉணர்வு கொண்டோரை வரவேற்க எப்பொழுதும் காத்திருந்தது. அதனால்தான் அந்த வீட்டில் அந்தத் தாயிடமிருந்து வெளிவந்த மகனால் ஈழத்தமிழரின் விடுதலைப்பாதைக்கு பெருவெளிச்சத்துடன் கூடிய மைல் கல்லாக வழிகாட்டமுடிந்தது. அந்ததாய் தான் போராளிகளிற்கெல்லாம் தாயாக விளங்கியரும் தமிழ்த்தாய் என்றும் வீரத்தாய் என்றும் போற்றப்படும் “கிட்டம்மா” என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட “இராசாத்தி” எனப்படும் “இராசலக்ஸ்மி சதாசிவம்பிள்ளை” ஆகும்.

தளபதி கிட்டுவினால் உணவு கொடுத்து பயிற்சிப்பாசறையில் வளர்த்தெடுக்கப்பட்டவர் தளபதி பொட்டு. 1987 ஒக்டோபர் இறுதிப்பகுதியில் இந்திய இராணுவத்துடனான புலிகளின் மரபுசார் நேரடிமோதலில் யாழ்ப்பாண போர்முனையின் ஒருபுறத்தில் பலத்த காயமடைந்து மந்திகை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தார். இவருடன் வீதிகளினால் நகர முடியாமல் வீடுகளிற்குள்ளாலும் வாழைத்தோட்டங்களிற் குள்ளாலும் முன்னேறிவந்த இந்திய இராணுவத்தினரின் இரண்டு தாங்கிகளை அவர்களுடைய “பசுக்கா” வகை மோட்டாரினாலேயே ஒரே அடியில் தகர்த்து வல்லாதிக்கத்தின் முன்னேற்றத்தை திருநெல்வேலியில் தடுத்துநிறுத்திய மாவீரன் “மேஜர்; ஜேம்ஸ்” உட்பட இன்னும் பல காயமடைந்த போராளிகளளும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ந்த போரினால் காயமடையும் போராளிகளினதும் மக்களினதும் தொகை வேகமாக அதிகரித்து வந்தது. இதனால் வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறை பாரிய பிர்சனையானது. இதனைவிட எக்கணத்திலும் வடமராட்சிக்குள்ளும் இந்திய இராணுவம் உள்நுழையலாம் என களநிலமை மாற்றமடைய ஆரம்பித்தது. அவ்வாறான நிலையில் அவர்களின் முதல் இலக்கு வைத்தியசாலைகளாகவே இருக்குமென்பதால் அங்கிருந்த பொட்டு வல்வெட்டித்துறையில் கிட்டம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் படுகாயமடைந்த அவரையும் அவருடன் இணைந்த போராளிகளையும் குளிப்பாட்டி மருந்தூட்டி உணவுகொடுத்து ஒரு “மேரி கியூரி” அம்மையாராகவே கிட்டம்மா அக்காலத்தில் எமது மண்ணில் விளங்கினார்;.

1987 நவம்பர் 4 ந்திகதி வடமராட்சிப்பகுதியில் உள்நுழைந்த இந்திய இராணுவம் குறிப்பாக விடுதலைப்போராட்டம் கருக்கொண்ட வல்வெட்டித்துறையில் காயமடைந்த போராளிகளையும் போராளிகளிற்கு உணவு கொடுத்து ஆதரவு அளிக்கும் தன்மானத்தமிழர்களையும் குறிவைத்து வேட்டையாடிவந்தது. உயிராபத்து நிறைந்த அக்காலத்திலும் உடையாமணல் ஒழுங்கையில் அமைந்திருந்த கிட்டம்மாவுடைய வீடான “இராசலக்ஸ்சுமி வாசா” காயமடைந்த போராளிகளின் வைத்தியசாலையாவே இரவு பகலாக சேவையாற்றி வந்தது. 1984 ஆம் 1985 ஆம் ஆண்டுகளில் தமிழீழ மகளிரை நேரடியாக போராட்டத்தில் இணைக்கும் முயற்சியாக ஆரம்பத்தில் அவர்களிற்கு முதலுதவிப்பயிற்சிகள் வழங்கப்பட்டன. இப்பயிற்சியில் “கப்டன்” சுந்தரி போன்ற இளம்யுவதிகளுடன் இணைந்து அவாகளிற்கு வழிகாட்டியாக கிட்டம்மாவும் பயிற்சி பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தனது இனியமகன் களத்தில் ஒருகாலை இழந்துவிட்ட நிலையில் “மாவீரர்” எனப்பெயர் பெற்ற தமிழக அரசியல் தலைவாகளில் ஒருவரும் எப்பொழுதும் ஈழத்தமிழ் மக்களின் நெருங்கிய நண்பனுமான நெடுமாறனின் கேள்வியொன்றிற்கு “எனது மகனிற்கு ஒரு கால் போனால் என்ன ?….. அவனிற்கு இரண்டு கைகளும் இன்னும் ஒரு காலும் இருக்கு அவன் இனத்திற்காக இறுதிவரை போராடுவான்” என புறநானூற்றுத் தாய்மாரை புறமுதுகிட்டு ஓட ஓட விரட்டியவர் அல்லவா எங்கள் கிட்டம்மா !. தனதுமகனை, தலைவனின் தம்பியை எங்களின் அன்புத்தளபதியை இயக்க வேலைகளிற்காக தமிழகம் அனுப்பி வைத்துவிட்டு காயமடைந்த போராளிகளை பெற்றதாய்க்கும் மேலாக பராமரித்து வந்த வேளையில் ஒருநாள்………பொட்டுவைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராமல் வீட்டிற்குள் நுழைந்த இந்தியஇராணுவம் சத்தம் கேட்டு கிணற்றடிக்கு செல்ல முயன்றது. உடனே குளிப்பாட்டிக் கொண்டிருந்த கிட்டம்மா குளிக்கும் கிட்டம்மாவாக மாறி “யாரடா அவன் பொம்பிளை குளிக்கும் இடத்திற்குள் வருபவன் என ஆக்ரோசமாக சத்தமிட்டபடி வெளியே வந்ததைக் கண்ட வல்லாதிக்க இராணுவம் வந்தவழியே திரும்பிப் போனது. இவ்வாறான இக்கட்டான நேரங்களிலெல்லாம் சமயோசிதமாக செயற்படும் அதிசக்தி வாய்தவராக அவர் வாழ்ந்துகாட்டினார்.

மீண்டும் ஒரு சம்பவம்

இரவில் அமைதியைக் கழித்துக்கொண்டு இந்திய இராணுவத்தின் செல்லடியும் துப்பாக்கி வேட்டுச்சத்தங்களும் கேட்க ஆரம்பிக்கின்றன. 1987 நவம்பர்; முதல் வாரத்தில் வடமராச்சிக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தைத் தாக்காமல் கரந்துறைந்த விடுதலைப்புலிகள் 1988 ஒகஸ்டில் வடமராட்சியின் புதிய பொறுப்பாளராக மக்களின் அபிமானத்தைப்பெற்ற “மேஜர் ஜேம்ஸ்” பதவியேற்றதைத் தொடர்ந்து வல்லாதிக்க இராணுவத்தின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அதிரடித் தாக்குதல்களை தீவீரப்படுத்தி இருந்தனர். துப்பாக்கி வேட்டுச்சத்தங்களினாலும் செல்லடியினாலும் அந்த இரவின்அமைதி கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தத்தமது உயிர்களைப் பாதுகாப்பதற்காக கோயில்களை நோக்கி மக்கள் ஓடிக்கொண்டிருந்தனர்.

வீட்டில் இருக்கவும் பயம். கோவில்களிற்கு தனியாக போகவும் பயத்தினால் பக்கத்து வீட்டை நோக்கி ஓடிய அந்தப்பெண் வல்லாதிக்கத்தின் துப்பாக்கி வேட்டிற்கு பலியாகி கொத்தங்கலட்டி ஒழுங்கையில் அமைதி ஆகின்றார். சில நிமிடங்களின் முன் தனது குழந்தைகளுடன் ஆனந்தமாக இருந்த அந்தப்பெண் அநாதரவாக வீதியில் வீசப்பட்டிருந்தார். துப்பாக்கி வேட்டுச்சத்தம் கேட்டவுடனேயே எட்டிப்பார்க்கவும் அஞ்சி அயலவர்களும் வீடுகளைப்பூட்டி வீடுகளிற்குள்ளேயே முடங்கிக்கொண்டனர். சம்பவம் நடந்ததை அறிந்து கொண்டதும் எதற்கும் அஞ்சாத கிட்டம்மா சம்பவ இடத்திற்கு விரைந்து அயலவர்களைத் தட்டியெழுப்பி அலங்கோல நிலையில் கிடந்த பெண்ணின் உடலை வீட்டிற்குள் கொண்டுவந்து அலங்கரித்து அவரின் இறுதிக்கிரியைகளை நடத்துவதில் முன்னின்றார். போர்க்களங்களில் முன்னிற்கும் வீரனைப்பெற்ற கிட்டம்மா அந்த வீதியையே களமாக்கி வேட்டொலிகளிற் கிடையிலும் வெறுங்கையுடன் அந்த இரவில் நடந்தது ஆச்சரியமன்று.

1981 ஆம் ஆண்டு மார்ச் 25 ந்திகதி நீர்வேலியில் நடந்த மக்கள் வங்கியின் 81இலட்ச ரூபாய் பணப்பறித்தெடுப்பும் அதனுடன் நடந்த பொலிஸ் கான்ஸ்டபிள் முத்துபண்டா, அபயேரத்தினா ஆகியோரது படுகொலைகளின் பின்னான பலத்ததேடுதல் வேட்டையில் எதிர்பாராத விதமாக பருத்தித்துறை மணற்காட்டுக்கடற்கரையில் போராட்டத்தின் முன்னோடிகளான குட்டிமணி. தங்கத்துரை, தேவன் ஆகியோர் கைதாயினர். இதனைத்தொடர்ந்து யாழ் குடாநாடு எங்கும் போராளிகளைத் தேடி பெருவேட்டையொன்று சிறிலங்கா காவற்துறையால் மேற்க்கொள்ளப்பட்டது. தலைவர் பிரபாகரனது மறைவிடங்களும் தொடர்சியாக மாறிமாறி முற்றுகையிடப்பட்டன. ஆனாலும் அவர் பொலிசாரின் முற்றுகையினை உடைத்துக்கொண்டு தப்பிக்கொண்டிருக்கின்றார். என்னும் செய்திகளும் பத்திரிகைகளினூடாகவும் செவிவழி புகுந்து வாய்வழியாக வதந்திகளாகவும் பரவிக்கொண்டிருந்தன. அவ்வாறான நாளொன்றில் நண்பகலிற்கு பின்னான ஒருசில மணித்தியாலங்களில் எங்களுடைய இராசலக்ஸ்சுமி வாசா வின் முன்னால் கிரீச்சிட்டப்படி நின்ற ஜீப்பில் இருந்த குதித்தோடி வந்த பொலிசார் வீடு முழுவதையும் சல்லடை போட்டு தேடினர். இறுதியில் இவ்வளவையும. அமைதியாக பார்த்துக் கொண்டு உணவருந்திக் கொண்டிருந்த கிட்டம்மாவிடம் வந்த அதிகாரி எங்கே உனது மகன் என அதட்டலாக கேட்டார்;?…… அத்துடன் கிட்டம்மாவிற்கு அருகாமையில் உணவருந்த ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இருந்த உணவுத் தட்டைக் காட்டி யார் ?…..சாப்பிட்டது !……. என உறுமினார். எதற்கும் கலங்காத கிட்டம்மா அமைதியாக நான் உணவைபோட்டு ஆறவைத்துள்ளேன் !…..எனக்கூறி அவர்களை முட்டாளாக்கியதையும் பின்னாட்களில் நினைத்துச் சிரிப்பார்; எங்கள் கிட்டம்மா. ஏனெனில் அவருக்குத்தானே தெரியும் வாசலில் ஜீப்வந்து நிற்கும்வரை அந்தத் தட்டில் உணவருந்திக் கொண்டிருந்தவன். அன்று காலையில் பருத்தித்துறை வடஇந்து மகளிர் கல்லூரியில் கல்விப் பொதுத்தராதரப்பத்திர உயர்தரப்பரீட்சையில் இந்து நாகரீகம் பாடத்தின் முதல்ப்பகுதிக்கு விடையளித்து விட்டு வந்த தனதருமை மகன் குமார்; என்றும் கிருஸ்ணகுமார் என்றும் அழைக்கப்பட்ட “தளபதி கிட்டு” என்பது அவருக்குத்தானே தெரியும். அன்றிலிருந்து இலங்கை இந்தியப் படைகளினால் அந்த வீடு சூழ்ந்து கொள்ளப்படும் போதெல்லாம் வீட்டிற்குள் காலணியுடன் படையினரை ஏறவிடாது தடுக்கும் போராட்டத்தையும் இயன்றவரை தொடர்ந்தவர்;. ஆதனால்தான் போலும் தனது வீட்டிற்குள் காலணியுடன் நுழைவதை எதிர்த தாய்போல தமிழ் மண்ணாம் யாழ்ப்பாண குடாநாட்டிற்குள் அந்நியர் காலடிபடுவதை தடுத்து நிறுத்தியவன் எங்கள் கிட்டு. தாயிலிருந்து தாரத்தை நாடுபவர்கள் வாழும் காலத்தில் தாயிலிருந்து தமிழ்த்தரணிக்கு வந்த “தங்கமகன்” வந்த வழியல்லவா கிட்டம்மா!……..

1961 ஆண்டில் சாத்வீகவழியில் தமிழரின் உரிமைக்காக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் யாழ்ப்பாணத்தின் பலபகுதிகளில் இருந்தும் கால்நடையாக வந்த சத்தியாக்கிரகிகள் யாழ் கச்சேரி முன்பாக ஒன்று கூடினர். அக்காலத்தில் வல்வெட்டித்துறையில் இருந்து புறப்படும் குழுவினருடன் ஒருவயதுக் குழந்தையான கிட்டுவையும் தூக்கிக்கொண்டு “குண்டாந்தடிக்கு அஞ்சமாட்டோம்” எனக் கோசம் இட்டபடி முன் நடந்தவரும் கிட்டம்மாவே !……… அதனால்தானே குண்டு மழைக்குள்ளும் அவர் மைந்தனால் சென்றுவர மட்டுமல்ல வென்றுதரவும் முடிந்தது.

இன உணர்வினால் அகிம்சைப் போராட்டங்களில் முன்னின்ற சதாசிவம்பிள்ளை காந்திய பக்தராக இருந்து தனது மூத்தமைந்தனிற்கு “காந்திதாசன்” எனப்பெயரைச் சூட்டினார். அத்துடன் ஆரம்பகாலங்களில் இடதுசாரி இயக்கங்களையே பெரிதும் ஆதரித்து செயற்பட்டவர். எனினும் 1956இல் இலங்கை முழுவதும் ஏற்பட்ட தமிழுணர்வினால் உந்தப்பெற்று வடமராட்சிப்பகுதியில் தமிழரசுக்கட்சியின் மூளையாக உருவெடுத்தார். வல்வெட்டித்துறையில் “குமார் அச்சகம்” எனும் இவருடைய ஸ்தாபனமே அன்றைய தமிழரசுக்கட்சியின் காரியாலயமாக இயங்கியது. இவர் வாழ்ந்த இராசலக்ஸ்மி வாசாவிலேயே அன்றைய இனவுணர்வு படைத்தகட்சியினரின் சந்திப்புகளும் கூட்டங்களும் நடைபெற்றன. அன்று பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினரான துரைரத்தினத்தின் வலதுகரமாகவும் அவருடைய வெற்றிக்கும் காரணமாக சதாசிவம்பிள்ளையே விளங்கினார். அகிம்சை வழியில் இவருடைய மகன் ஆயுதப்போராட்டத்தில் நம்பிக்கையுடன் பல வெற்றிகளைப்பெற்று “கேணல் கிட்டு” என்னும் பெயருடன் வங்கக்கடலில் வெந்தணல் வேங்கையாகினான். அதேபோல திரு. துரைரத்தினத்தின் மகன் “வண்டையலூர் பரமேஸ்வரன்” மேஜர் கமலாகி நெல்லியடியில் மில்லருடன் சங்கமமாகினான். அறப்போரில் உரிமை வேண்டிப்போராடிய பெற்றோர்கள் ஏமாற்றப்பட்டனர். காலம் காலமாக ஏமாற்றப்பட்ட இனத்தின் விடுதலைக்காக ஆயுதப்போரைத் தேர்ந்தெடுத்து களத்தில் தம்மை அர்ப்பணித்தனர் இவர்களுடைய பிள்ளைகள். தமிழீழத்திற்காக மண்ணிலும் வங்கக்கடலிலும் விதைக்கப்பட்ட மாவீரர்களாகிய இவர்களின் முன்னால் இவர்களை வித்தாக்கிய வீரத்தாய் தந்தையருக்கு உதாரணபுருசர்களாக இராசலக்ஸ்சுமி அம்மாவும் சதாசிவம்பிள்ளையும் விடுதலைவானில் வலம் வருகின்றார்கள்.

கிட்டுவின் தாய்……சதாசிவம்பிள்ளையின் மனைவி…… ஈழத்தமிழினத்தின் கிட்டம்மா என்னும் நிலைகளிற்கு முன்பாக பொன்னுக்கண்டு வள்ளியம்மா என்பவர்களின் மகளாக அஞ்சாது வலம்வந்தவர் எங்கள் கிட்டம்மா!

இரண்டு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் என்பவர்களை தனது உடன்பிறப்புகளாக பெற்ற கிட்டம்மா இரண்டு ஆண்பிள்ளைகளாக காந்திதாசன், கிருஸ்ணகுமார் (கிட்டு) என்பவர்களையும் சதாலக்ஸ்சுமி, தயாலக்ஸ்சுமி எனும் இரண்டு பெண்பிள்ளைகளையும் பெற்றெடுத்தவர் கிட்டம்மா, கிட்டம்மாவின் தந்தையார் கப்பல் ஓட்டும் மாலுமியாக கடல்மீது பணியாற்றியவர். இந்திய கரையோரப் பட்டினங்களான நாகபட்டினம் விசாகபட்டினம், மசூலிப்பட்டினம், காக்கநாடு, காரைக்கால், சிதம்பரம் என்னும் இடங்களில் பெற்றுக்கொள்ளும் உடுபுடவைகள், மற்றும் துணிகள், கண்ணாடிகள் என்பவற்றை அந்தமான், நக்கவாரம் (நிக்கோபார்) போன்ற இடங்களில் தேங்காய்க்காக மாற்றி அத்தேங்காய்களிற்கு பண்டமாற்றாக பர்மாவில் நெல், அரிசி என்பவற்றை கொள்வனவு செய்து அவற்றை எம்மண்ணிற்கு எடுத்துவந்து எமது மக்களின் பசியாற்றியவர். எங்கள் கிட்டுவோ அதே நிக்கோபார் கடற்பாதையிலேயே வஞ்சகர் வலையை அறுத்து 16 தை 1993 இல் வீரவரலாறு படைத்தார்;.

மகளாக மனைவியாக தாயாக, தமிழ்த்தாயாக நடமாடிய எங்கள் கிட்டம்மாவின் வாழ்கை எழுதுவதற்கு அரியது. எங்கள் கண்முன்னால் ஒரு விடுலைச் சாம்ராச்சியத்தை கட்டியெழுப்புவதற்குத் தன்னாலான பணிகளைக் காலம் காலமாக ஆற்றிய அவர் 28 மார்கழி 1996 இல் இடம் பெயர்ந்து வன்னியில் வாழ்கையில் இயற்கை எய்தினார். அவர் வாழ்ந்த காலத்திலேயே நாங்களும் வாழ்கின்றோம் என நினைக்கையிலேயே எங்கள் தலை சாய்கின்றதல்லவா !

“கிட்டம்மாவின்” நினைவு தினத்தை முன்னிட்ட சிறப்புக் கட்டுரை.
பொன்.சிவகுமாரன்



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.