தனி ஈழத் தீர்வைதான் வலியுறுத்துகிறது காஷ்மீர் |

இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்தமையை இலங்கை பிரதமர் வரவேற்றுள்ளார். லடாக் பகுதியை தனியான மாநிலம் ஆக்கியுள்ளதாகவும் இது பௌத்தர்கள் அதிகம் வாழுகின்ற பகுதி என்றும், இந்தியாவில் ஒரு பௌத்த மாநிலம் உருவாகியிருப்பது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.  இலங்கையில் இனப்பிரச்சினை தீவிரமாகித் தொடரும் நிலையில் தமிழர்கள் தனி ஆட்சி கோரும் நிலையில் ரணில் இக் கருத்து விவாதத்திற்குரியது.


இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தின், மாநில அந்தஸ்து அல்லது சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டுள்ள விடயம் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா உருவாகுவதற்கு முன்பே, காஷ்மீர் ஒரு தனியாட்சிப் பகுதியாக காணப்பட்டது. பழமையான மன்னர் சமஸ்தானமாகும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உருவாகிய காலகட்டத்தில் பகிஸ்தான் படையெடுத்து, காஷ்ரின் ஒரு பகுதியைக் கைபற்றியது. அதற்கு ஆஷாத் காஷ்மீர் என்று பாகிஸ்தான் பெயரிட்டுக் கொண்டது.

இந்த நிலையில், அன்றைய இந்தியப் பிரதமர் நேரு காஷ்மீருக்கு இராணுவப் பாதுகாப்பு அளிப்பதாகவும் விரும்பினால் இந்தியாவுடன் இணையலாம் என்றும் கூறினார். அத்துடன் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து கொண்ட ஒரு மாநிலமாக காணப்படும் என்று வாக்களிக்கப்பட்டு, இந்திய அரசியல் சாசனத்தில் 370ஆவது பிரிவு உருவாக்கப்பட்டது. காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைவதா? பாகிஸ்தானுடன் இணைவதா என்பதற்கு பொதுவாக்கெடுப்பு நடாத்தட்டது. அத்துடன் காஷ்மீர் தனக்கென தனியான கெடி, அரசியலமைப்பு, சிறப்பு அந்தஸ்து என்பவற்றைக் கொண்டு ஒரு தன்னாட்சி மாநிலமாக இருந்தது வந்தது.

அண்மையில் இந்தியப் பிரதமர் மோடி இந்த சட்டப் பிரிவை இரத்துச் செய்திருப்பது இந்தியா காஷ்மீர் மக்களுக்கு இழைத்துள்ள வரலாற்று துரோகமாகும். இந்தியா சட்ட ரீதியாக – ஜனநாயக ரீதியாக ஒரு இனப்படுகொலையை செய்திருக்கின்றது. காஷ்மீர் மக்களுக்கும் ஈழத்து மக்களுக்கும் இடையில் சில ஒற்றுமைகள் காணப்படுகின்றன. சிங்கள அரசை நம்பி, ஈழத் தமிழர்கள் அரசியல் அதிகாரங்களை இழந்ததுபோல் இந்திய அரசை நம்பி காஷ்மீர் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

ஈழத் தீவுக்கு பிரித்தானியர்கள் சுதந்திரம் வழங்கியபோது,  தனித் தமிழ் நாடு ஈழத்தில் அமைவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டிருந்தன. ஈழத் தமிழ் மக்கள் செறிந்து வாழும் அவர்களின் தாயகப் பகுதியான வடக்கு கிழக்கை தனித் தமிழ் நாடாக பிரகடனப்படுத்தியிருக்கும் சூழல் ஏற்பட்டபோது, ஒன்றுபட்ட இலங்கைக்காக அன்றைய தமிழ் தலைவர்கள் பாடுபட்டனர். பின் வந்த வரலாற்றில் தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்டு, அவர்களின் நிலமும் அதிகாரமும் பறிக்கப்பட்ட நிலையில், தனித் தமிழ் நாட்டு வாய்ப்பை நழுவ விட்டதன் துர்பாக்கியத்தை உணர்ந்து கொண்டனர்.

பிரித்தானியர்களின் வெளியேற்றத்தின் பின்னர், சிலோன் சிங்கள நாடாக மாறியது. அன்று முதல் இன்று வரை ஈழத் தமிழ் மக்களை மெல்ல மெல்ல அழித்து ஒழிக்கும் வேலைகளில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகின்றது. இந்த சூழலில்தான் ஈழத் தமிழ் மக்கள் தனிநாடு கோரிய போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய இன்றைய காலத்தில், குறைந்த பட்சம் இலங்கை அரசு வடக்கு கிழக்கை இணைக்கும் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கும் என்று கூறியே எமது தலைமைகளால் இன்றைய அரசுக்கு ஆதரவு வழங்கப்படுகின்றது.

இன்றைய அரச தலைவர்களோ, வடக்கு கிழக்கை இணைக்க மாட்டோம், சமஸ்டி – தன்னாட்சி அதிகாரத்தை வழங்க மாட்டோம் என்று மீண்டும் மீண்டும் அடித்துச் சொல்லுகின்றனர். தமிழர்களின் ஆதரவில் ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டு, தமிழர்களுக்கு எதிராகவே இவ்வாறு பேசுகின்றது இன்றைய அரசு. தமிழ் தலைமைகளும் இதைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

இந்த சூழலில்தான் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்தமைக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். உண்மையில் காஸ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்தமை ஈழத்தில் வடக்கு கிழக்கை இரண்டாக பிரித்தமைக்கு ஒப்பானது. நிலங்களை துண்டாடி தனிநாட்டுக் கனவுகளை இல்லாமல் செய்ய மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகளே இவை. ஆனாலும் லடாக்கை பிரித்து தனியாக்குவதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் ரணில், வடக்கு கிழக்கை தனி மாநிலமாக – தேசமாக்குவதற்கும் எமது சுய நிர்ணய உரிமையை எம்மிடம் கையளிக்கவும் குழந்தை தனமான காரணங்களைக் கூறுகிறார்.

லடாக் பகுதி தனி மாநிலமாகியாக ரணில் கூறுகின்றார். ஆனால் லடாக் பகுதி சட்டப் பேரவையற்ற யூனியன் பிரதேசம் ஆக்கப்பட்டுள்ளது. காஷ்மீரை தனி நாடாக்க வேண்டும் என்றும் இந்தியாவில் இருந்து காஷ்மீரை விடுவிக்க வேண்டும் என்றும் அங்கு குரல்கள் எழுந்து வந்துள்ள நிலையில், வரலாற்று ரீதியாக –சட்ட ரீதியாக அளிக்கப்பட்ட வாக்குறுதி அல்லது ஒப்பந்தம் அங்கே மீறப்பட்டுள்ளது.

இது தனித்தேசம் கேட்டு போராடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையை அல்லது விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. குறையான தீர்வுகள் ஒருபோதும் பிரச்சினைக்கு தீர்வாகுவதில்லை. அத்துடன் அவை பாரிய ஆபத்துக்களாகவும் அமையும். உள்ளக தன்னாட்சி தற்காலிக விடுதலைதான். தனிநாடே நிரந்தரமான விடுதலை என்பது ஈழத் தமிழர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கை அனுபவத்தில் தற்காலிக சுயாட்சியின் மூலம், சிங்களப் பேரினவாதம் தன்னை உருமறைத்து, உறங்கு நிலையில் இருக்குமே தவிர, அழிந்து ஒடுங்கிவிடாது. இதுவே காஷ்மீரில் நடந்திருக்கிறது.

இன்று இலங்கையில் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்த நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வதை கோருகின்ற செயல் எவ்வளவு ஆபத்தானது என்பதையே இன்றைய காஷ்மீர் நிகழ்வு உணர்த்துகின்றது. இது நாளை தமிழகத்திற்கும் இடம்பெறலாம் என்ற அச்சமும் தமிழ்நாட்டில் தோன்றியுள்ளது. ஈழத் தமிழ் மக்கள் வடக்கு கிழக்கில் தனி இராச்சியத்தை கொண்டிருந்தவர்கள். சிங்கள அரசு எமது உரிமைகளை தர இணங்காது என்றபோதே தனிநாடு கோரிய போராட்டம் துவங்கப்பட்டது.

இன்றைக்கு ஒன்றிணைந்த நாட்டுக்குள்கூட ஒரு அதிகாரப் பகிர்வை முன்வைக்க சிங்கள அரசுக்கு துளியளவும் விருப்பம் இல்லை. இப்படிப்பட்ட நாட்டில், இப்படிப்பட்ட ஆட்சியாளர்களின் மத்தியில் ஒன்றிணைந்த நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வை கோருவது மிகவும் ஆபத்தானது. நாளை பாராளுமன்ற சிங்களப் பெரும்பான்மை அதிகாரத்தை வைத்து தமிழர்களுக்கு வழங்கும் கொஞ்ச அதிகாரங்களையும் பிடுங்கிக் கொள்ளலாம். தலைவர் பிரபாகரன் எப்போதும் வலியுறுத்தியதைப் போல தனித் தமிழீழமே இப் பிரச்சினைக்கு தீர்வாகும். இன்றைய காஷ்மீரின் நிலைகூட தனிஈழத்தையே எமக்கு அவசியப்படுத்துகின்றது.

நன்றி   தீபச்செல்வன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.