திரிசங்குநிலையில் தமிழர்களின் அரசியல் பலம்!!

அரசியல் என்பது பொதுவாக மக்கள் குழுக்களில் முடிவெடுக்கும் முறைமையைக் குறிக்கும் சொல் என வரையறுக்கப்படுகின்றது.

அரசியலும் மனித வாழ்க்கையும் பின்னிப் பிணைந்த ஒரு கொள்கை எனலாம், அரசியல் என்பது நாம் வாழும் வாழ்க்கை அல்லது வாழும் முறைமை எனலாம். அரசியல் என்பது நிசப்தம் எனலாம்,

இனங்கள் கூடி வாழவும் பொருளாதார ரீதியிலான முன்னேற்றங்களுக்கும் அரசியலே பாதை வகுக்கிறது. அதன் தத்துவங்கள் எல்லாம் மனித வரலாற்றின் தடங்களில் இருந்துதான் உற்பத்தியாயிற்று.

ஈழத்தமிழினம் தனக்கென பழமையான ஒரு அரசியல் வரலாற்றைக் கொண்டது. எனினும் அது சரியான ஆய்வுகளின் மூலம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

ஒரு இனத்தின் தனித்துவத்தை ஆயுதபலம் நிர்ணயிக்கமுடியாதவிடத்து அரசியல் பலத்தால் நிர்ணயித்துவிடுதலே சாமர்த்தியம். அத்தகையதொரு சிந்தனைத் தெளிவின் அத்திவாரமாகவே தமிழர் தரப்பில் எமது தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் எமக்கான அரசியல் சக்தியாக கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

எமது புனிதப்போர் நசுக்கப்பட்ட வேளையில் அரசியல் என்ற காப்பரண் எமது காவலாக, எமது குரலாக ஒலிக்கும் என்பதே தமிழ் மக்களாகிய அனைவரினதும் எதிர்பார்ப்பாக இருந்தது.

யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட முதல் தேர்தல் களத்தில் எம் மக்களின் நம்பிக்கைச்சக்தியாக கூட்டமைப்பு மிளிர்ந்தது. அதன் விளைவாக அது தனக்கென ஒரு இடத்தினையும் தக்கவைத்துக்கொண்டதுடன் தமிழர்களின் அரசியல் பலமாகவும் ஒளிர்ந்தது.  ஆனால்,

அதன் பங்குதாரர்கள், மக்களின் அந்த நம்பிக்கையை வெறும் நம்பிக்கையாக இருக்கவைத்துவிட்டு, சரணாகதி அரசியலுக்குள் சாணக்கியமாய் நகர்ந்துகொண்டனர். எம் மக்களின் நம்பிக்கையை விலைபேசி, செல்வச் செழுமையில் குளிக்கமுற்பட்டனர், குளிக்கவும் செய்தனர்.
எந்த வார்த்தைகளை அவர்கள் கேடயங்களாக உபயோகித்தனரோ, அந்த வார்த்தைகளை அர்த்தமற்றதாக எண்ணத் தலைப்பட்டனர், முந்நாள் போராளிகளையும் மாவீரர் கனவுகளையும் தம் வெற்றிக்கென முழங்கியவர்கள், முந்நாள் போராளிகள் வாழ்வின் ஆதாரமின்றித் தவித்தபோது பேசாமடந்தைகளாக மௌனித்தனர்.

போர்க்காலத்தில் தம் பிள்ளைகளை வெளிநாடுகளிலும் அயல்தேசத்திலும் தங்கவைத்து கற்பித்தவர்களுக்கு அன்றாட அவலம் எங்கே புரியப்போகிறது, நடந்தவைகளை காணொளிகளாகவும், வாய் வார்த்தையாகவும் கேட்டுத் தெரிந்து கொண்டவர்களால், வேறு என்னதான் செய்யமுடியும்?

தமது வீடுகளுக்கு அருகிலிருந்த சிறைச்சாலைகளுக்குச் சென்று, முந்நாள் போராளிகளின் நிலைவரம் பற்றி அறியமுற்படாத இவர்கள், அவர்களின் வாழ்வாதாரம் பற்றியா சிந்திக்கப்போகின்றனர்?

அண்மையில் மைத்திரி எங்களை ஏமாற்றிவிட்டார் என சேனாதி ஐயாவும், ஒன்றுபட்ட பிரிக்கமுடியாத நாட்டுக்குள், உயர்ந்தபட்ச அரசியல் பகிர்வு என்பதை நிலைநிறுத்தி புதிய அரசமைப்பு உருவாக்க இழுத்தடிப்பிற்கான கடும் கண்டனத்தைச் சம்பந்தன் ஐயாவும், இன்னொரு பிரபாகரன் உருவாகுவதை தவிர்ப்பது அரசின் கையில்தான் உள்ளதென சுமந்திரனும் கூறிக்கொள்வதென்பது நகைப்பிற்குரியதொன்றாகவே உள்ளது.
அதுவும் சம்பந்தன் ஐயாவின், அன்றைய ஆக்ரோசமான உரையைக் கேட்க அங்கே முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இருக்கவில்லை என்பது விந்தையான செய்தி.

தமிழ் மக்களின் வாக்குகள் என்பது இலங்கையின் அரசியல் ஆதிக்கத்தில் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக இருக்கும் இந்நிலையில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தாமாகவே தீர்மானித்து தமது விருப்பத்திற்கும் தேவைக்குமாக ஆளுக்கொருவருக்கு ஆதரவளிப்பதென்பது மக்களின் எண்ணத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் பற்றிய கேலித்தனத்தையே உறுதி செய்திருக்கிறது.
எமது மக்களின் விடிவிற்காக கூட்மைப்பினர் எதையும் செய்துவிடப்போவதில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரியும் இக்கணத்தில், பிரிந்து நிற்கும் தமிழ் அரசியல் கட்சிகளால் எதைச் சாதிக்கமுடியும்?  எமது மக்களின் மனங்களில் தேர்தல் பற்றிய கணிப்பீடு என்னவாக இருக்கப்போகிறது?

தமது இனத்திற்கான குரலாகச் சென்றவர்கள் தமது குடும்பத்திற்காக உழைக்கின்ற இந்நிலையில் தமிழ் மக்களின் எதிர்காலம், என்பது  அரசியல் களத்தில் பெரும் கேள்விக்குறியே.

காலகாலமாக சிங்கள அதிகார வர்க்கம் தமிழர்களுக்குத் தந்த ஏமாற்றம் புரியாதது போல சொல்லிக்கொள்வதன் மூலம் மக்களை ஏமாற்ற நினைக்கும் மடமைத்தனத்திற்கு மக்களின் முடிவுதான் என்ன?

தமிழரசி,
அசிரியர்பீடம்,
தமிழருள் இணையத்தளம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.