மொழியற்ற நிலத்திலிருந்து ஒரு குரல்!!

எனது ஆன்மாவிலிருந்து நான் பேசுகிறேன்.
எனக்கொரு குரல் இருக்கிறது.
எனது பாதையில் நான் நடக்கிறேன்.
எனக்கு இரு கால்கள் இருக்கின்றன.
மனதின் அடியாழத்திலிருந்து கனவு காண்கிறேன்.
எனக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது.

எனது உடல் விற்பனை பண்டமல்ல.
எனது உடல் அவமானமல்ல.
எனது உடல் புனிதமல்ல.
எனது உடல் பண்பாட்டு அடையாளமல்ல.
எனது உடலில் எந்தக் கறையும் இல்லை.

இனியும்
குற்றவுணர்வுக்குள் தள்ளித்
திடுக்கிடச் செய்யும்
உங்கள் முயற்சிகள் தோற்றுத்தான் போகும்.
நான் குற்றவுணர்வு கொள்ளப் போவதில்லை.
எனது நம்பிக்கையைச் சிதைத்ததற்காக,
எனது நம்பிக்கையை இழந்ததற்காக
நீங்கள் வேண்டுமானால் கூனிக்குருகுங்கள்.

எனது வெற்றுடல் அவமானம் எனப் பேசுவீர்களெனில்
அது
உங்கள் தேசத்தின் அவமானம்
என்று வேண்டுமானால்
எழுதிக் கொள்ளுங்கள்
உங்கள் வரலாற்றில்.

எனது உடலைக் கொண்டாடத் தொடங்கியிருக்கிறேன்.
வண்ணங்களைச் சுமந்தபடி
பட்டாம்பூச்சியாகிப் பறப்பதை
நீங்கள் பார்த்துக் கொண்டேயிருப்பீர்கள்.
நான் உயர உயரப் பறப்பேன்
வானின் நீலத்தை எட்டிப் பிடிக்கும் வரை.

 - மனுஷி-

No comments

Powered by Blogger.