விராட் கோலி தகர்த்த சாதனைகள்!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த விராட் கோலி, ஒருநாள் போட்டிகளில் பல சாதனைகளைத் தகர்த்தெறிந்துள்ளார்.




ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது. 125 பந்துகளில் 120 ரன்கள் எடுத்த விராட் கோலிக்கு ஒருநாள் போட்டிகளில் இது 42ஆவது சதமாகும். சச்சின் டெண்டுல்கரைத் தொடர்ந்து அதிக சதம் விளாசிய வீரர்களுக்கான பட்டியலில் விராட் கோலி இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார்.


ஒரு அணிக்கு எதிராக கேப்டனாக அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் முதல் இடத்தில் இருக்கிறார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக மட்டும் விராட் கோலி 8 சதம் அடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அதிகபட்சமாக நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 சதம் அடித்துள்ளார்.
ஒரு அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரைத் தொடர்ந்து கோலி இரண்டவது இடத்தில் இருக்கிறார். 


ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் மொத்தம் 9 சதம் விளாசியுள்ளார். இரண்டாவது இடத்தில் இருக்கும் கோலி இலங்கை, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராகவும் 8 சதங்கள் அடித்துள்ளார்.
கேப்டனாக ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர் என்ற சாதனையை மகேந்திர சிங் தோனியிடமிருந்து கோலி பறித்துள்ளார். தோனி கேப்டனாக 19 சதங்கள் அடித்துள்ள நிலையில் விராட் கோலி கேப்டனாக 20 சதங்கள் அடித்துள்ளார்.


ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களுக்கான பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியைப் பின்னுக்குத் தள்ளி எட்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார் விராட் கோலி. 238 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி மொத்தம் 11,406 ரன்கள் எடுத்துள்ளார். 311 போட்டிகளில் விளையாடியிருந்த கங்குலி 11,363 ரன்கள் எடுத்திருந்தார். 


முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் (18,426 ரன்) இருக்கிறார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாவேத் மியாண்டாட்டின் 26 ஆண்டு சாதனையையும் விராட் கோலி முறியடித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அதிக ரன் குவித்த வீரர்களுக்கான பட்டியலில் 1,930 ரன்களுடன் மிடாண்டாட் முதலிடத்தில் இருந்தார். இச்சாதனைக்கு அவர் 64 ஆட்டங்களை எடுத்துகொண்டார். ஆனால் விராட் கோலி 34 போட்டிகளிலேயே மியாண்டாட்டின் இச்சாதனையை முறியடித்துவிட்டார். சச்சின் டெண்டுல்கர் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 39 போட்டிகளில் 1,573 ரன்கள் எடுத்துள்ளார்.


நேற்றைய ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா - விராட் கோலி ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தது. கோலியும் ரோஹித்தும் இணைந்து 32 முறை ஜோடியாக 50 ரன்களைக் கடந்துள்ளனர். இந்திய அணிக்காக அதிக அரைசதம் கடந்த ஜோடியாக ரோஹித் - கோலி கூட்டணி இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சச்சின் - சேவாக் ஜோடி உள்ளது.


அதேபோல, பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன்கள் குவித்த இந்திய ஜோடியாக இரண்டாவது இடத்தில் கோலி - ரோஹித் உள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து மொத்தம் 4,729 ரன்கள் சேர்த்துள்ளனர். முதலிடத்தில் சச்சின் - கங்குலி ஜோடி (8,227 ரன்) உள்ளது.


உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சதம் எடுக்கவில்லை என்ற கோலியின் தாகம், உலகக் கோப்பைக்குப் பிறகான இத்தொடரில் தணிந்துள்ளது. இதற்கு முந்தைய 11 ஆட்டங்களில் விராட் கோலி சதம் அடிக்கவில்லை. இப்போட்டியில் சதம் அடித்தவுடன் கோலி கொண்டாடிய விதத்தைப் பார்க்கும்போதே இந்த சதத்துக்காக அவர் எவ்வளவு எதிர்பார்த்திருந்தார் என்பது தெரியும் என்று, இந்திய அணியின் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.