எம் கண்ணீருக்கு ஓய்வே இல்லையா?

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக தமிழீழ தாயகத்தில் போராடும் அன்னை தந்தையர்கள் ஒவ்வொருவராக இறக்கப் பார்த்துக் கொண்டிருப்போமா இனியும்?


வவுனியாவில் தனது 26 வயதுடைய மகனைத் தேடி தொடர் போராட்டம் மேற்கொண்ட தந்தை ஒருவர் நேற்று இரவு நோயுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை இன்று‌ அதிகாலை உயிரிழந்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் தமது மகனைத் தேடி சுழற்சி முறையிலான தொடர்போராட்டம் இன்றுடன் 913 ஆவது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு ஓமந்தை இராணுவச் சோதனைச்சாவடியில் வைத்து இராணுவத்தினரிடம் கையை உயர்த்தி ஒப்படைக்கப்பட்ட தனது 26 வயது மகனை மீட்கும் போராட்டத்தில் இணைந்திருந்த வேலாயுதம் செல்வராசா 56வயது மகிழங்குளம் ஓமந்தை இடத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு நேற்று இரவு 10மணியளவில் வைத்தியசாலையில் உயர் குருதி அழுத்தம் காரணமாக‌ அனுமதிக்கப்பட்டு இன்று உயிரிழந்துள்ளார்.

இவருடைய மனைவி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இதேவேளை வவுனியா போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இவருடன் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

வடகிழக்கு மாவட்டத்தில் போராட்டம் மேற்கொண்டு வரும் உறவுகள் இன்றுவரையிலும் 39பேர் தமது பிள்ளைகளைத் தேடிய போராட்டத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட். 30- அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் நாளில் எம் மக்களுக்கு நீதி கிடைக்க போராடுவோம்!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.