பால்மாவின் தரம் உயர் ஆபத்து வகைக்குள்!!

இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகள் உயர்ஆபத்து (High Risk) வகைக்குள் உள்ளடங்குவதாக ‘இறக்குமதி பால்மாவின் தரம்’ தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று(20)சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை இது தொடர்பான விசாரணையை முன்னெடுத்துள்ளதோடு இதில் இறக்குமதி செய்யும் பால்மா வகைகள் தொடர்பாக மேற்பார்வை ​செய்வதற்கு தேவையான தீர்மானங்களும் விதப்புரைகளும் உள்ளக்கப்பட்டுள்ளன.

கடந்த பெப்ரவரி மாதம் இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பில் பிரதி அமைச்சர் புத்திக பதிரண சபையில் கருத்து வெளியிட்டிருந்தார்.பால்மாவில் உடல்நலத்துக்கு கேடான திரவியங்கள் இருப்பதாக அவர் கூறியிருந்த நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டது. அறிக்கையின் அவதானிப்புகளில், பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் திரவப் பால் மற்றும் தொற்று நீக்கப்பட்ட போத்தலில் அடைக்கப்பட்ட பால் பயன்படுத்தப்படுத்தப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். திரவப் பால் தொடர்பில் எதுவித ஒழுங்குபடுத்தல்களும் பரிசோதனைகளும் இடம்பெறவில்லையென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாலில் பதிலீட்டு கொழுப்புகள் உள்ளடக்கப்பட்டிருந்தால் அது தொடர்பில் பரிசோதனை நடத்தப்பட வேண்டும். குறைந்த விலையில் பால்மா வழங்குவதற்காக பால்மாவில் பாம் எண்ணெய் சேர்க்கப்படுவது தொடர்பில் அவதானிக்கப்பட்டுள்ளது.

பால்மா மூலம் நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் போன்ற நோய்களுக்கு சிறுவர்கள் குறைந்த வயதில் இரையாகின்றனர். பால்மா தொடர்பான பரிசோதனைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான பால்மா வகைகள் சந்தையில் ஏமாற்றகரமான வகையில் சந்தைப்படுத்தப்படுகிறது.பால்மா வகைகளிலுள்ள கலப்படங்களை இனங்காண தொழில்நுட்ப முறையெதுவும் கிடையாது. 3 மாதத்திற்கு ஒரு தடவையாவது இது தொடர்பான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பால்மா உற்பத்திக் கம்பனிகள் விஞ்ஞான ரீதியிலான சுரண்டல்களை மேற்கொள்வதோடு பால்மாவின் தரம் குறைக்கப்படுதல் தொடர்பாக தொழில் நுட்ப அறிவு போன்ற இரகசியங்கள் கம்பனிகளிடமே உள்ளன.அவை வியாபார நோக்கத்தில் மாத்திரம் பயன்படுத்தப்படுகின்றன எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே பால்மா அத்தியாவசிய உணவல்ல என்பதனையும் அதற்கு பதிலாக மரபுரீதியான உள்நாட்டு உணவு வகைகளுக்கு பழக வேண்டும். பாடசாலை மாணவர்களுக்கு அறிவூட்ட வேண்டும்.அதற்காக பாடத்திட்டத்தினூடாக கற்பிக்க வேண்டும்.

பால்மாவில் பால் கொழுப்பைத் தவிர வேறு கொழுப்புகள் இல்லையென பரிசோதனை அறிக்கைகளில் மேலோட்டமாக கூறப்பட்டாலும் பால்மாவின் தரம் குறைக்கப்படுவது குறித்து பொருத்தமான பொறிமுறையின் கீழ் பரிசோதனை நடத்த வேண்டும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

பால்மா தொடர்பில் காணப்படும் சிக்கலை தீர்ப்பதற்காக சகல கட்சி எம்.பிக்களையும் உள்ளடக்கி பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமித்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளதோடு பாவனையாளர் அதிகார சபையின் கீழ் சுயாதீன சான்றிதழ் ஆய்வு கூடம் அமைக்கப்பட வேண்டும்.

இறக்குமதி செய்யும் பால்மா உயர் ஆபத்தை கொண்டது என்பது தொடர்பில் மக்களை அறிவூட்ட வேண்டும் எனவும் கொழுப்பு நிரப்பப்பட்ட பால்மா வகைகள் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் உடல்நலத்துக்கு ​கேடானவைகளும் உள்ளடங்குவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கை குறித்து முழு நாள் விவாதம் நடத்த வேண்டும் எனவும் ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். விவாதம் நடத்த தயார் என சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அறிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.