ஜெர்மனி சுவேபியன் யூரா - தொல்லியல் தடையங்களும் பயணமும் - 2




முதலில் ஹோலென் ஃபெல்ஸ் குகையைப் பற்றி சில தகவல்கள் அறிந்து கொள்வோம். ஆஹ் பள்ளத்தாக்கில் இருக்கும் குகைகளில் முக்கியத்துவம் பெறும் குகை இதுவாகும். 30 மீட்டர் உயரம் உள்ள குகை இது. மிக விரிவான, ஏறக்குறைய 300 பேருக்கு மேல் உள்ளே வசிக்கக்கூடிய அளவில் அமைந்திருக்கும் குகை இது.

குகையின் முன்பகுதியில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே செல்ல கட்டணம் 3 யூரோ வசூலிக்கப்படுகிறது. வெள்ளை நிற சுண்ணாம்பு மலை. உட்பகுதியின் இரண்டு பக்கங்களிலும் இங்கு அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரும்பொருட்கள் கண்ணாடி அலமாரிக்குள் காட்சி படுத்தப்பட்டுள்ளன.

இங்கு முதல் அகழாய்வுப் பணி 1870ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்டது. அதன் பின்னர் 1958ம் ஆண்டு தொடங்கி இங்குத் தொடர்ச்சியாகப் பல அகழாய்வுப் பணிகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இவை டூபிங்கன் பல்கலைக்கழகத்தினால் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுப் பணிகளாகும்.

2008ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட அகழாய்வுப் பணி அரியதொரு கண்டுபிடிப்பை வெளிப்படுத்தியது. ஹோலென் ஃபெல்ஸ் வீனஸ் என்ற பெண் தெய்வ வடிவம் இங்கு அப்போது கண்டெடுக்கப்பட்டது. கார்பன் டேட்டிங் சோதனைகள் இது ஏறக்குறைய 35,000லிருந்து 40,000 ஆண்டுகள் பழமையானவை என்பதை வெளிப்படுத்தியது.



மனித இனம் நாடுகளாக, இனங்களாக, சமயங்கங்களாகப் பிரிந்து கிடந்தாலும், அடிப்படையில் ஒரே வகையான குண இயல்புகளைத் தான் கொண்டிருக்கின்றது என்பதை உலகம் முழுவதும் நடைபெறும் அகழாய்வுப் பணிகளும் அங்கு கண்டெடுக்கப்படும் அரும்பொருட்களும் நமக்கு காட்டிக் கொண்டேயிருக்கின்றன.
தொடரும்...
சுபா

கருத்துகள் இல்லை