பல்கலைக்கழக நலனில் அக்கறை கொண்டோருக்கும் சமூக நலன் விரும்பிகளுக்கும் கல்விசாரா பணியாளர் ஆட்சேர்ப்பு!!

கௌரவ உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் பதவி விலகுவதற்கு முன் தினம் (2019 யூன் மாத முற்பகுதி)  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிலவும் கல்விசாரா பணியாளர்களின் வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு பெயர்ப்பட்டியல் ஒன்றினை அனுப்பி வைத்தமையும்,
அப்பட்டியலில் சில பதவி நிலைகளுக்கு தமது இனம் சார்ந்த ஆதரவாளர்களின் பெயர்களை பெருமளவில் புகுத்தியிருந்தமையையும் யாவரும் அறிந்ததே.
இதற்கு எழுந்த எதிர்ப்பின் காரணமாகவும், உயர்கல்வி அமைச்சர் பதவியில் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் இல்லாமையின் காரணமாகவும், இந்நியமனங்களை மேற்கொள்ளல் தாமதமடைந்த போதிலும் இவ்விடைக் காலத்தில் சில பதவி நிலைகளிற்கு இப்பட்டியலில் உள்ளோருக்கு எழுத்துமூல பரீட்சைகள் முடிவடைந்திருந்தன.
தற்போது கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் மீண்டும் உயர்கல்வி அமைச்சராக பதவியேற்றவுடன் குறித்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு எதிர்வரும் 31.08.2019 பேரவைக் கூட்டத்தில் அனுமதி பெற்று நியமனங்களை வழங்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளதாக அறிகின்றோம்.
இதனடிப்படையில் எதிர்வரும் 28, 30, 01, 02 மற்றும் 03ஆம் திகதிகளில் வெவ்வேறு பதவி நிலைகளுக்கான நேர்முக தேர்வுகள், எழுத்துப்பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.
இந்நிலையில் ஊழியர் சங்கத்தினரான நாம் பின்வரும் விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.
• உயர்கல்வி அமைச்சில் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டான பெயர்ப்பட்டியலில் தங்களையும் இணைத்துக் கொள்ள பதிவுகளை மேற்கொண்ட 400 வரையானோரின் பெயர்கள் அனுப்பப்பட்ட பெயர்ப்பட்டியலில் தவிர்க்கப்பட்டுள்ளமை.
• கிளிநொச்சி வளாகத்தில் ஒப்பந்த நிறுவனங்களின் பணியாளர்களாக வருடக்கணக்காக பணிபுரிந்து உயர்கல்வி அமைச்சில் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி பதிவுகளை மேற்கொண்ட பெயர்கள் அனுப்பப்பட்ட பெயர்ப்பட்டியலில் தவிர்க்கப்பட்டுள்ளமை.
• 2008-2014 காலப்பகுதியில் இவ்வாறான அரசியல் ஆட்சேர்ப்புகள் நடந்தபோது இடம்பெற்ற முறையற்ற ஆட்சேர்ப்புக்களின் விளைவுகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தற்போது அனுபவித்துக் கொண்டுள்ளது.
உதாரணமாக, மருத்துவபீட இறுதியாண்டு மாணவர்களின் குறித்த பாடப்புள்ளிகளை தவறாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பியதன் காரணமாக அவர்களின் நாடாளாவிய தரவரிசையில் குறைவு ஏற்பட்டு, அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டது.  இத்தவறு மாணவர்களின் முயற்சியினால் திருத்தப்பட்டது. எனினும் இது பற்றி எதுவித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
• இதே போல் மேற்படி பட்டியல் மூலமான ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஆய்வுகூட உதவியாளர் பதவி நிலைக்கான எழுத்துப் பரீட்சை இடம்பெற்றபோது ஒருவரை ஒருவர் பார்த்து எழுதியதாகவும், இது குறித்து நாம் ஆராய்ந்தபோது பரீட்சைக் கிளையின் பிரதிப்பதிவாளர் ஒருவரே பரீட்சை மேற்பார்வையாளராகவும் கடமையாற்றியதாகவும் நாம் அறிந்தோம். அவ்வாறு பரீட்சைக் கிளையின் பிரதிப்பதிவாளரே, பரீட்சை மேற்பார்வையாளராக கடமையாற்ற முடியாது.
• அத்துடன் முகாமைத்துவ உதவியாளருக்கான ஆட்சேர்ப்பில் கடந்தமுறை கணனிக்கான செய்முறைப்பரீட்சை இடம்பெற்றது ஆயினும் இம்முறை அவ்வாறில்லாமல் தகவல் தொழிநுட்பம் தொடர்பில் தனியே எழுத்துப்பரீட்சை மட்டுமே நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரியும், பீடாதிபதிகளும், பேரவை உறுப்பினர்களும் தரமான ஊழியர்களை உள்வாங்க உண்மையிலே விரும்பியிருந்தால் இவ்வாறான விடயங்கள் இடம்பெற வழிவகுக்க மாட்டார்கள்.

எனவே எதிர்வரும் 28, 30, 01, 02 மற்றும் 03ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள நேர்முக மற்றும் எழுத்துப் பரீட்சைகளை இடைநிறுத்தி, பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தருவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்றுமாறு தங்களை அன்புடன் வேண்டுகின்றோம்.

நன்றிகள்
சங்கச் சேவையில்

பல்கலைக்கழக ஊழியர் சங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.