காஞ்சிபுரம் மருத்துவமனையில் சிதறிக் கிடந்த மலர்களின் வாசம்.!

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரணத்திற்கு நாள் குறிக்கப்பட்டு 2011 ஆகஸ்ட் 30 செவ்வாய் அன்று இறுதி மேல்முறையீடு வரவிருக்கிறது.

வழக்கறிஞர்கள் கயல், வடிவாம்பாள், சுஜாதா ஆகிய மூவரும் சாகும் வரை உண்ணாவிரதம் கோயம்பேட்டில் மேற்கொண்டிருக்கிறார்கள்.

தமிழகம் முழுதும் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைத்தால் மட்டுமே தடுக்க முடியும் என்று அரசியல் தலைவர்கள் என அனைவரும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவோ தூக்கை ரத்து செய்ய தனக்கு அதிகாரமில்லை என்று சட்டமன்றத்தில் அறிவிக்கிறார். எல்லாம் முடிந்துவிட்டதோ என எண்ணி எல்லோரும் அதிர்ச்சியடைந்திருந்த சமயம் அது. ஈழத்திலே இழந்துவிட்டோம், இந்த மூவரையும் பலி கொடுத்தோமென்றால் இனி தமிழனென்று சொல்லிக் கொள்ள நமக்கு எந்த தகுதியுமில்லை என்ற எண்ணம் மட்டும் அனைவருக்குள்ளும் இருந்தது.

அப்போது 27 ஆகஸ்ட் சனிக்கிழமை தோழர் திருமுருகன் கோயம்பேடு உண்ணாவிரதப் பந்தலில், ஆகஸ்ட் 30ம் தேதி காலை வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு வரும் போது தமிழகம் முழுதுமிருந்து தமிழ் உணர்வாளர்கள் லட்சக்கணக்கில் உயர்நீதிமன்ற வாசலில் திரண்டு நிற்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார். பிரிந்து சென்று வீடு வீடாக சென்று கதவை தட்டி செவ்வாய் கிழமை காலை நீதிமன்றத்தில் கூட வேண்டியதன் அவசியத்தை சொல்லி அழைப்போம் என அழைப்பு விடுத்தார். அப்போது நான் மே பதினேழு இயக்கத்தில் பெரிதாக என்னை இணைத்துக் கொண்டிருக்கவில்லை. அந்த இடத்தில் உச்சகட்ட கோபத்துடன் தோழர் திருமுருகன் விடுத்த அழைப்பு மற்றவர்களின் பேச்சிலிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டியது. பல குழுக்களாக பிரிந்து புறப்பட்டோம்.

ஞாயிறு மாலை தான் எவரும் எதிர்பார்க்காத அந்த அதிர்ச்சி செய்தி வந்தது.
எதோ ஒரு பெண் காஞ்சிபுரத்தில் மூவர் தூக்கை ரத்து செய்யக் கோரி கடிதம் எழுதிவிட்டு தீக்குளித்து விட்டார் என்ற செய்தி.

”தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல் என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரைக் காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையில் செல்கிறேன்” என எழுதி வைத்திருந்தார்.

முத்துக்குமாரின் இறுதிக் கடிதத்தை படித்து அரசியல் படிக்க ஆரம்பித்தவன் என்பதால் இந்த மரணச் செய்தி இடியாய் எனக்குள் இறங்கியது. கோயம்பேடு அரங்கத்தில் பல தோழர்கள் மூலைகளில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார்கள். உயிர்த்தியாகம் செய்த பெண் யாரென்று தோழர்களிடம் கேட்ட போது 21 வயது பெண் செங்கொடி, காஞ்சிபுரத்தில் மக்கள் மன்றத்தில் இருந்தவள் என்றும், தொடர்ந்து இந்த போராட்டத்தில் இழந்து நம்முடன் தான் முழக்கமிட்டுக் கொண்டிருந்தார் என தெரிவித்தனர். அப்போது என் வயதை ஒட்டிய ஒரு பெண் எப்படி இந்த முடிவினை எடுத்தாள் என்ற அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. எவருடன் செல்வதென்றெல்லாம் தெரியவில்லை. காஞ்சிபுரம் புறப்பட்டேன். காஞ்சிபுரத்தில் தோழர் செங்கொடி உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனையை அடைந்தேன். மக்கள் மன்றத் தோழர்களும், பொதுமக்களும், பல இயக்கங்களின் தோழர்களும் அங்கு குழுமியிருந்தனர்.

பல தோழர்கள் துப்பாக்கிக் குண்டுகளை தாங்குவதற்கும் தயாராக இருந்தனர். 2009 க்கு பிறகு அப்படி ஒரு எழுச்சியை பார்த்ததில்லை. ”நம்ம வீட்டு பொண்ணு போயிடுச்சிய்யா, இன்னும் என்னையா போலிஸ்காரனுங்களுக்கு பாத்துகிட்டு இருக்கீங்க, தூக்கு முடியுற வரைக்கும், சென்னையை நோக்கி நம்ம பொண்ணை தூக்கிட்டுப் போவோம், அடிப்பானா, சுடுவானா என்ன பண்ணுவானா பண்ணட்டும்” என 80 வயது மதிக்கத்தக்க ஒரு தோழர் மருத்துவமனை வாயிலில் தழுதழுத்த குரலில் கத்திக் கொண்டிருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் காஞ்சிபுரத்தை நோக்கி திரள ஆரம்பித்தது.

திங்கள் மதியம் காஞ்சிபுரம் மருத்துவமனயிலிருந்து செங்கொடி உடல் வெளியே கொண்டுவரப்பட்டது. கோபமும், கண்ணீரும் கலந்த சமூகத்தின் பெரும்பகுதி அங்கு திரண்டிருந்தது. அந்த மொத்த நிகழ்வும் இன்னும் மனதில் சேமிக்கப்பட்ட வீடியோ காட்சிகளைப் போல் மனதில் இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளின் நடுவே, காஞ்சிபுரத்தின் வீதிகளில் செங்கொடியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுகிலும் காங்கிரஸ் கட்சியின் கொடிகள் எரிக்கப்பட்டன. ஜெயலலிதாவை பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற பேச்சுக்களையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு, வழி நெடுகிலும் ஜெயலலிதா எதிர்ப்பு முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. தமிழகம் முழுதும் இந்த முழக்கங்கள் பரவ ஆரம்பித்தன.

செங்கொடியின் உயிர்த்தியாகத்தின் பின்னர் ஏற்பட்ட எழுச்சி ஜெயலலிதாவை அச்சுறுத்தியது. அதன் விளைவாகத்தான் சட்டமன்றத்தைக் கூட்டி, மூவர் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். அடுத்த நாள் நீதிமன்ற வாயிலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டிருக்க தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை என்று அறிவிக்கப்பட்டது. மரணத்தையும், தோல்வியையும் மட்டுமே தொடர்ந்து சந்தித்த தமிழினம் முதன்முறையாக தன் கண் முன்னே நிகழ இருந்த பச்சைப் படுகொலையை தடுத்து நிறுத்தியது. செங்கொடியின் உடல் வீரவணக்கம் செலுத்தி அடக்கம் செய்யப்பட்டது. செங்கொடியின் தியாகம் வரலாற்றில் மறக்க முடியாதது.

ஒருவேளை அன்றைய செவ்வாய்க்கிழமை வேறொன்றாக மாறியிருந்தால், இன்று தமிழ்நாட்டின் வரலாறு வேறாகவும் மாறியிருக்கவும் கூடும்.

யாரென்றே அறிந்திராத முத்துக்குமாரும், செங்கொடியும் என் வாழ்க்கையின் முக்கியமான அங்கமாக மாறிப்போனார்கள். செங்கொடியை உயிருடன் நான் கண்டதில்லை. செங்கொடி தன் வாழ்க்கையில் என்ன கனவுகளையெல்லாம் வைத்துக் கொண்டிருந்திருப்பாள் என எண்ணிப் பார்க்கையில், செங்கொடியின் உடல் மீது போர்த்தப்பட்ட மாலைகளிலிருந்து, காஞ்சிபுரம் மருத்துவமனையில் சிதறிக் கிடந்த மலர்களின் வாசம் தான் நினைவிற்கு வருகிறது.

மூலம்: நவீன் (28.08.2007)
காஞ்சிபுரம்,
தமிழகம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.