இருள் சூழ்ந்த அரவமற்ற பொழுதில்..!!


நெறி கட்டிக்கொண்ட
தொண்டைக் குழிக்குள்
வார்த்தைகள்
அடைத்துக்கிடக்கிறது...

தனிமையும்
அறையின் மௌனமும்
பேரிரைச்சலாய்
இதயத்தைக் குடைகிறது...

இருள் சூழ்ந்த அரவமற்ற பொழுதில்
இறுதியாய் நீ உரைத்த வார்த்தை
கதவிடுக்கின் வழியே
கசிந்து கொண்டிருக்கிறது..

ஒரே இரவில்
வறண்ட பாலையென
காட்சியளிக்கிறது
என் சமுத்திரம்...

அந்த கணத்துடன்
கனத்த மனதை
மடித்து வைக்கிறேன்
நாம் இணைந்து ரசித்த
ஒர் பாடலுக்குள்.

மீண்டும் ஒர்நாள்
இந்த சஹாராவில் பூக்கள்
பூக்குமென்ற நம்பிக்கையில்...

-சங்கரி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.