தமிழ்த்தேசிய கட்சிகளிடம் யாழ். பல்கலை ஊழியர் சங்கம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வெற்றிடத்தை நிரப்பும் பொருட்டு முறையற்ற நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக கடுமையாக குற்றம்சாட்டியுள்ள யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் த. சிவரூபன் இதனால் வடமாகாணத்தைச் சேர்ந்த 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் விரைவில் தீர்வு காணப்படாதவிடத்து நாம் பாதிக்கப்பட்டவர்களை அணிதிரட்டிப் போராட்டத்தைப் முன்னெடுப்போம். இதுவும் பலனளிக்காவிடின் நாங்கள் விரும்பியோ, விரும்பாமலோ சிங்களக் கடும் போக்குவாதிகளின்  உதவிகளை நாட வேண்டியிருக்கும்.  இலங்கையில் சடுதியான மாற்றங்களை அண்மைக் காலங்களில் அவர்கள் ஏற்படுத்தி வரும் நிலையில் இவ்வாறானவர்களே தற்போது எங்களுக்கு மந்திரக் கோலாகவுள்ளனர். ஆகவே, சிங்களக் கடும் போக்குவாதிகளின் உதவியை நாம் நாட முன்னர் தமிழ்த்தேசியம் பேசுகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு , தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ்மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளும், அமைச்சர் மனோ கணேசனும் விரைந்து தலையிட்டு எமக்கு சரியான தீர்வைப் பெற்றுத் தர வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்க மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை(26) பிற்பகல் ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் காணப்படும் கல்விசாரா ஊழியர்களின் வெற்றிடத்தை நிரப்புவதற்காக வழமையான நடைமுறையின் அடிப்படையில் அமைச்சுப் பட்டியலிலிருந்து ஆட்களை நிரப்புவது வழமை.  அந்தவகையில் ரவூப் ஹக்கீம் உயர்கல்வி அமைச்சராகப் பதவியேற்ற நிலையில் அண்மையில் பதவி விலகுவதற்கு முன்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குப் பெயர்ப்பட்டியலொன்றை  அனுப்பியிருந்தார்.இதனடிப்படையில் சில பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் முயற்சிகளை முன்னெடுத்திருந்தது.  அந்தப் பட்டியலை ஆராய்ந்த போது ரவூப் ஹக்கீம் தன் இனம் சார்ந்தோரைப் பெருமளவில் அந்தப் பட்டியலில் உள்வாங்கியிருந்தார்.  யாழ்ப்பாணம் அல்லது வடபிராந்தியத்திலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்காகப் பதிவு செய்திருந்த 400 வரையானவர்களின் பெயர்கள் அந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது தெரியவந்தது. இந்நிலையில் எமது பிரதேசத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசுகளுடன் பதிவு செய்தவர்களின் பெயர்கள் ஏன் இடம்பெறவில்லையெனக் கேள்வியெழுப்பியிருந்தோம். இவ்வாறான அழுத்தங்கள் மூலமாக சில நெருக்கடிகள் பல்கலைக்கழகத்துக்கும், கல்வியமைச்சுக்கும் ஏற்படுத்தப்பட்டதன் அடிப்படையிலும், முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியதன் அடிப்படையிலும் இந்த நடைமுறை தாமதமானது. இந்நிலையில் நாங்கள் இந்த விடயம் முற்றுமுழுதாக நிறுத்தப்படுமென எதிர்பார்த்திருந்தோம். ஆனாலும் அது நிறுத்தப்படவில்லை. தற்போது மீளவும் உயர்கல்வியமைச்சர் பதவிக்கு வந்த பின்னர் இதுதொடர்பான கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகவும், மிக விரைவில் இந்தப் பணிகளை முன்னெடுத்து முடிக்குமாறு அவர் கோரியுள்ளதாகவும் அறிகிறோம். ஆனால், இதேபோன்ற பட்டியல் இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி  வைக்கப்பட்டுள்ளன.   எனினும்,வேறு எந்தப் பல்கலைக்கழகங்களிலும் இவை தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. ஏனைய பல்கலைக்கழகங்களில் இந்த விடயம் கிடப்பில் போடப்பட்டுள்ள போதிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாத்திரம் இதற்கான நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்படுகின்றன. எமது கோரிக்கைகளை யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் உதாசீனம் செய்துள்ளதுடன் முறையற்ற நியமனங்களுக்குப் பல்கலைக்கழக நிர்வாகமும் துணைபோகிறது.    அந்தவகையில் எதிர்வரும்-28, 30, 31, 01,02, 03 ஆம் திகதிகளில் நேர்முகப் பரீட்சைகளும், பரீட்சைகளும் நடைபெறவுள்ளன. எனவே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தைச் சேர்ந்தவர்களும், பல்கலைக்கழகத்தில் அக்கறையுள்ளவர்களும் இந்த விடயம் தொடர்பில் கூடிய கவனமெடுத்து இந்த முறையற்ற நியமனங்களுக்கெதிராக குரல் கொடுக்க முன்வர வேண்டும். இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களையும் உள்வாங்கி நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் ஊழியர் சங்கத் தலைவர் சி. கலராஜ்ஜூம் கலந்து கொண்டு கருத்துக்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி செ. ரவிசாந்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.