சேரனை மீட்க கிளம்பும் இயக்குநர்கள்: மன்னிப்பு கேட்ட சரவணன்!!
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விஜய் சேதுபதி, சேரனை வெளியே அழைத்துவர வேண்டும்; இல்லையேல் அத்துமீறி உள்ளே நுழைந்து அவரை வெளியே கொண்டு வருவோம்” என்று கூறியுள்ளார் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குத் தான் வந்த காரணத்தைச் சமீபத்தில் கூறிய சேரன், “பெரிய இயக்குநர், தேசிய விருது பெற்ற திரைப் பிரபலம் என்று என்னை குறிப்பிடுகின்றனர். ஆனால், என்னுடைய பிரச்சினை எனக்கு மட்டுமே தெரியும். ஆட்டோகிராஃப் மட்டுமே வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து இயக்கிய பல படங்கள் பெரியளவில் வெற்றி பெறவில்லை. இதனால் நான்கு வருடங்களாக நான் எந்த படத்தையும் இயக்கவில்லை. ஆனால், அந்த காலவரைக்குள் சினிமா எங்கோ சென்றுவிட்டது. இதனால் இளைய சமுதாயத்தினருக்கு என்னை தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.
இதுதொடர்பாக விஜய் சேதுபதியிடம் பேசியபோதுதான், இந்த நிகழ்ச்சி குறித்து அவர் என்னிடம் கூறினார். அவர் சொல்லிதான் இந்த நிகழ்ச்சிக்குள் வந்தேன். இந்த நிகழ்ச்சியின் மூலம் இளைய தலைமுறையினர் மனநிலையை நான் அறிய முயற்சி செய்து வருகிறேன்” என்று கூறியிருந்தார்.
இளைய சமுதாயத்தின் மனநிலையை அறிய பிக் பாஸ் வீட்டுக்குச் சென்ற சேரனுக்குத் தொடர்ந்து சக போட்டியாளர்களால் சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்தவண்ணம் உள்ளன.
நேற்று முன்தினம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் சரவணனுக்கும் சேரனுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. அதில் சரவணன், சேரனை ஒருமையில் பேசியது அவரது அபிமானிகளை அதிருப்தியடையச் செய்தது. இதனால் சேரன் வெளியேற வேண்டும் என இயக்குநர் வசந்தபாலன் உள்ளிட்ட பலரும் வேண்டுகோள் வைத்தனர்.
இந்த நிலையில் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சேரனுக்கு தமிழக மக்களிடையே எவ்வளவு மரியாதையும் அன்பும் இருக்கிறது என்று கூறிய அவர் சினிமாவுக்கு சேரன் ஆற்றிய பணிகளையும் நினைவுகூர்ந்துள்ளார்.
“எனது வெங்காயம் திரைப்படம் வெளியாகி சரியாக கவனிக்கப்படாதபோது, எந்த சம்பந்தமும் இல்லாமல் ஒரு சாதாரண பார்வையாளனாகப் படத்தைப் பார்த்த அவர், ஒரு நல்ல படம் மக்களைச் சென்றடையாமல் போய்விடக் கூடாது என்று அவருக்குத் தெரிந்த அத்தனை தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என்று எந்த கவுரவமும் பார்க்காமல் ஒவ்வொருவரிடமும் சென்று அந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க கெஞ்சியதை என் கண்ணால் பார்த்திருக்கிறேன்.
அவர் பணம் சம்பாதிக்க திரைத்துறைக்கு வந்தவர் என்றால் யாரோ ஒருவரின் படத்தைத் தூக்கிக்கொண்டு இப்படி எல்லோரிடமும் கெஞ்சி இருக்க வேண்டியதில்லை. தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்க வேண்டும், நல்ல திரைப்படங்கள் வர வேண்டுமென்பதில் அவரைப்போல அக்கறை கொண்டவர் வேறு யாருமில்லை.
சினிமாவில் சம்பாதித்த பணத்தை நிறுவனங்களிலும் ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்து தன் குடும்பத்தை வளப்படுத்திக் கொள்ளும் சிலருக்கு மத்தியில், C2H என்ற நிறுவனத்தைத் தொடங்கி சினிமாவை மாற்று வழியில் மக்களுக்குக் கொண்டு செல்ல முயற்சி செய்து அதனால் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளானவர்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், “இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று அங்கு நடக்கும் சம்பவங்களை நாடே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோ என்று சொல்லப்படுகிறது. அது உண்மையா, பொய்யா என்பதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. ஆனால் பார்க்கிற மக்கள் அதை உண்மை என்றே நம்புகிறார்கள்.
ஒரு பெண், அவர் தவறான எண்ணத்துடன் தன்னை தொட்டதாகச் சொல்கிறார். ஒரு நடிகர் அவரை வாடா, போடா என்று ஒருமையில் பேசுகிறார். ஒரு சராசரி மனிதனுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடந்தாலே அதை மிகப்பெரிய அவமானமாகக் கருதவேண்டி இருக்கும்போது, மக்களால் கொண்டாடப்படும் ஒரு கலைஞன் கூனிக் குறுகி நிற்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
விஜய் சேதுபதி சொன்னதற்காகத் தான் அங்கே போனேன் என்று சொல்கிறார். அவருக்கு ஏற்பட்ட அவமானங்கள் தனக்கு ஏற்பட்டதாக எண்ணி மரியாதைக்குரிய விஜய் சேதுபதி, சேரன் அண்ணனை இதற்கு மேலும் அவமானப்பட வைக்காமல் வெளியே அழைத்து வந்து விட வேண்டும்.
இல்லாவிட்டால் என்னைப் போல் அவரால் பயனடைந்தவர்கள் மற்றும் அவர் மீது மரியாதை கொண்ட பலரையும் ஒருங்கிணைத்து பிக் பாஸ் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை வெளியே அழைத்து வருவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
சேரனுக்கு ஆதரவாக இயக்குநர்கள் பலரும் குரல்கொடுக்கும் நிலையில் பிக் பாஸ் கமல்ஹாசனும் இதுகுறித்து பேசியுள்ளார்.
நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடையே உரையாடிய கமல் சரவணனிடம், “ஆரம்பத்திலிருந்தே உங்களுக்கும், சேரனுக்கும் சின்ன ஒரு உரசல் இருக்கிறதே அது என்ன?” என்ற கேள்வியைக் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த சரவணன், “அவர் ஓர் இயக்குநர், நான் ஒரு நடிகன்” என்று கூறினார்.
நேற்று முன்தினம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில், நீங்கள் ஏன் சேரனை ஒருமையில் பேசினீர்கள் என்று மற்றவர்கள் கேட்கும்போது நான் உச்ச நட்சத்திரமாக இருந்தபோது இயக்குநர் சேரன் ஒரு உதவி இயக்குநர். அதனால் அவரை அப்படிப் பேச உரிமை உள்ளது என்று சரவணன் கூறியிருந்தார்.
இதை நினைவுபடுத்திய கமல்ஹாசன், “உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் அப்படிப் பேசக்கூடாது என்பதுதான் எனது கருத்து” என்றார். அதை ஏற்றுக்கொண்ட சரவணன், சேரன் காலில் விழுந்து மன்னிப்பு கோரினார். அதற்கு, “நான் எப்போதும் உங்கள் முன்னால் ஓர் உதவி இயக்குநர்தான்” என்று சேரன் கூற, இருவருக்குமிடையே இருந்த மோதல் முடித்துவைக்கப்பட்டுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை