மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணைய மசோதா மக்களவை, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் கடந்த வியாழன் அன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது. தமிழகத்தில் நேற்று முன்தினம் வகுப்புகளைப் புறக்கணித்து அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மத்திய அரசின் கீழ் இயங்கும் எய்ம்ஸ் மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவமனை மருத்துவர்கள் மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துத் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் (ஆகஸ்ட் 3) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சுகாதாரத் துறை உத்தரவின் பேரில், மேற்குறிப்பிட்ட இரு மருத்துவமனை நிர்வாகங்களும் மருத்துவர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், “போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் சங்கத்தினர் தங்களது துறை சார்ந்த பணிகளுக்கு உடனடியாக திரும்ப வேண்டும். இல்லையெனில் பணியிடை நீக்கம், விடுதியிலிருந்து வெளியேற்றம் உள்ளிட்ட கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஃப்தர்ஜங் மருத்துவமனை இயக்குநர் சுனில் குப்தா, “வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பணிக்குத் திரும்பவில்லை என்றால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சகம் என்னைக் கேட்டுக்கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். எனினும் போராட்டம் தொடரும் என்றும், இந்த மசோதாவில் குறிப்பிடத்தக்க சில திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.