தமிழ் மக்களின் பிரச்சினையை வன்னிக்குள் மட்டும் சுருக்க முடியாது-சிவசக்தி ஆனந்தன்!!

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் ஊடகமொன்றின் கேள்விக்கு பதிலளிக்கையிலே மேற்கண்டாவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்

வன்னி மக்களின் பிரச்சினை தொடர்பில் மகிந்தராஜபக்ச தரப்பினர் அதிகம் கரிசணை காட்டிவருவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

தேசிய இனப்பிரச்சினை என்பது வடக்கு-கிழக்கு வாழ் மக்கள் அனைவரதும் பிரச்சினை. இதனை வன்னி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு திருகோணமலை என்று பிரித்துப்பார்க்க முடியாது. ஆனால் சிங்கள ஆளும் வர்க்கங்கள் அனைத்துமே தமிழ் மக்களைப் பல்வேறு கூறுகளாக்கி அவர்களை ஒற்றுமைப்படவிடாமல் தடுப்பதில் கைதேர்ந்தவை. எமது மத்தியிலும் அவர்களின் மகுடிக்கேற்ப தலையாட்டும் சக்திகள் காலத்திற்குக் காலம் உருவாகிவருவதையும் பார்க்க முடிகிறது.

இந்தப் பின்னணியிலேயே மகிந்தராஜபக்ச தரப்பினரின் வன்னி மக்கள்மீதான கரிசனையை நோக்க வேண்டியுள்ளது. இறுதி யுத்தத்தின்போது பெருமளவில் பாதிக்கப்பட்டது வன்னி நிலப்பரப்பே. அப்பாதிப்பை முன்னின்று நடத்தியவர்களே அம்மக்கள் மீது அக்கறை இருப்பதுபோல் நடிப்பதுதான் வேடிக்கை.

அடுத்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதும், அமைய உள்ள புதிய அரசாங்கம் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு பதின்மூன்றாம் திருத்தத்திற்கு அமைய அரசியல் தீர்வு காணப்படும் என்று மகிந்த தரப்பினர் கூறிவருகின்றனர். ஆனால் 10.08.2019ஆம் திகதியிட்ட தமிழ் நாளேடு ஒன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியில் 'தமிழ் மக்கள் காஷ;மீரில் இன்று ஏற்பட்டுள்ள நிலையைக் கருத்தில்கொண்டு அரசியல் தீர்வை நோக்க வேண்டும்' என்று மகிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான தீர்வு எதனையும் வழங்கமாட்டோம் என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் என்றே கருத வேண்டியுள்ளது. மேலும் போர்க்குற்றச் சாட்டு தொடர்பில் எத்தகைய நடவடிக்கையையும் மேற்கொள்ள மாட்டோம் என்றும் உறுதிபடக் கூறியிருக்கின்றார்.

ஆகவே, பாதிக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்திற்கு நீதியும் கிடைக்காது, பரிகாரமும் கிடைக்காது, அரசியல் உரிமைகளும் கிடைக்காது என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்.
இத்தகைய ஒருவர் வன்னி மக்கள் தொடர்பாகவோ அல்லது ஒட்டுமொத்த வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தொடர்பாகவோ அக்கறையுடன் வெளியிடும் கருத்துக்கள் நம்பத்தகுந்தவை அல்ல என்பது நிரூபணமாகிறது. தமிழ்த் தேசிய இனத்தைப் பொறுத்தவரையில் சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் எதுவுமே தமிழ் மக்கள் நலன்சார்ந்து செயற்படாது என்பதே யதார்த்தம் என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.