திறந்தவெளி நியாயங்களுக்கு இடமில்லை.

ஏப்ரல் 21. இலங்கையின் எட்டு இடங்களில் குண்டுவெடிப்பு நடைபெற்று உயிர்ச்சேதங்களையும் நாட்டின் பாதுகாப்பையும் பொருளாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியது. இந்தக்குண்டு வெடிப்பு பற்றி முன்னரே வந்த எச்சரிக்கைகளை அரசாங்கத்தின் துறைசார்ந்த பொறுப்பு வாய்ந்தோர் தட்டிக்கழித்தமையும் அம்பலமாகியது. இது இவ்வாறிருக்க மே. 15 தீவிரவாத தாக்குதலை மேற்கொண்டோரால் ஒரு பகிரங்க அநாமதேய கடிதம் நல்லூர் ஆலயத்தை தாக்கப்போவதாக  வடமாகாண ஆளுநருக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டு யாழ்ப்பாண நல்லூர் முருகன் ஆலயம் பலத்த பாதுகாப்புக்கு உள்ளாகியது.

மே.15 இல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஆலயம்
ஓகஸ்ட்- 6 தான்  கொடியேற்றத்தோடு திருவிழா கண்டது.
ஆலயத்தின் பாதுகாப்புக்காகவும் இந்துசமய மக்களைப்பாதுகாப்பதாகவும் துணிந்து பாதுகாப்பில் ஈடுபட முன்வந்த 700 பொலீசாருக்கு
20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து யாழ் மாநகரசபை உணவுச்செலவு இதர செலவுகளோடு வரவேற்றது.

மக்களுக்காக மக்களின் நலனுக்காக என பாதுகாப்பை  வழங்க முடிவு செய்த
யாழ். மாநகரசபை மக்களின்  கௌரவத்தை கருத்தில் கொண்டு இலத்திரனியல் கருவிகளை பயன்படுத்தி மக்களை சோதனையிட முயற்சிக்காதது வருந்தத்தக்கதே.

ஆறுமுகநாவலரின் ஆசார ஒழுக்க நியதிப்படி குளித்து துவைத்து புனிதமாக நீராடியே ஆலயத்திற்கு பக்தர்கள் வருவது வழமை. அவ்வாறு புனிதத்தோடு வரும் மக்களை பாதுகாப்பு காரணத்தை காரணமாக்கி கைகளால் பரிசோதித்து ஆலயத்துக்குள் அனுமதிக்கும் நடைமுறையே இருந்து வருகிறது. இது கண்டிக்கத்தக்கதென ஒரு சாரரும் வரவேற்கத்தக்கதென ஒருசாரரும் வாதப்பிரதிகளில் ஈடுபடுவது வேறுகதை. ஆனாலும் கைகளால் பரிசோதனை செய்யும் அளவுக்கு பக்தர்களின் கௌரவ ஆசாரத்தை,  அசௌகரியத்தை உரியவர்கள் சிந்திக்காமல் போனதன் காரணம் என்ன? நாட்டின் எந்தப்பாகத்திலும் சோதனையிடும் இலத்திரனியல் கருவிகள் இல்லாமல் போனதா?   அல்லது வடக்குக்கு அந்த இலத்திரனியல் கருவிகளால் பரிசோதிக்கத்தான் முடியாதா?
மே. 15 தொடக்கம் ஓகஸ்ட்-6 வரையான காலப்பகுதியில் பொலீசாருக்காக நன்கு திட்டமிட்டு இருபது லட்சத்தை ஒதுக்கிய மாநகரசபையால்,  பாதுகாப்பை உறுதிசெய்ய நன்கு வடமாகாணத்துக்காகவே பாடுபடும் வடக்குமாகாண ஆளுநரால் முற்கூட்டியே மக்களுக்காக இலத்திரனியல் பரிசோதனைக் கருவிகளை குத்தகைக்கோ உரிய வகையிலோ தருவிக்க முடியாது போனது நிர்வாக திட்டமிடல் குறைபாடா?
அல்லது மக்களின் பிரச்சனைகளுக்கு மக்களிடமே தீர்வு காண கலந்தாலோசிக்காத வெற்றிடமா? உண்மையில் மக்களின் நலன் தொடர்பாக மக்களோடு கலந்துரையாடி முடிவெடுக்க எந்த பொறுப்பு வாய்ந்தவர்கள் தயாராக இருக்கிறார்கள்?

இந்தப்பாதுகாப்பு கரிசனை தொடர்பாக குண்டு வெடித்தாலும் என்ற அநாமதேய  ஊகத்து அறிவிப்பை நம்பி பாதுகாப்பை பலப்படுத்தியவர்கள் குண்டு வெடிப்பு காரணமாக கூட்டமாக கூடுவது தொடர்பாகவும் குண்டுதாரிகள் தொடர்பாகவும் பொறுப்பு வாய்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்களா?

 கோயில்களையும் தேவாலயங்களையும் விருந்தினர் விடுதிகளையும் தான் குண்டுதாரிகள் தாக்குகிறார்கள் என்ற காரணத்தால் கோவில்களுக்கு பாதுகாப்பு என கருதினால் அண்மையில் திருவிழா கண்ட மாவைக்கந்தனுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது ஏன்? அங்கு வழிபடப்போகும் பக்த அடியார்களின் உயிர் பெறுமதியற்றதா?
இன்னும் நல்லூர் முருகனுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பெருகி வருகிறார்கள் என்ற காரணத்தால் பலத்த பாதுகாப்பு என்றால் அடுத்தடுத்து திருவிழா காண இருக்கும் செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் வல்லிபுர ஆழ்வார் கோவில் என நாட்டின் எல்லாப்பகுதிகளுக்கும் இவ்வாறான நடைமுறை பின்பற்றப்படுமா?
நல்லூர் ஆலயத்துக்கு தான் மிரட்டல் வந்ததால் அந்த ஆலயம் கருத்தில் கொள்ளப்பட்டதென கதை கூறப்படுமா?
நாட்டின் எல்லாப்பாகத்து திருவிழாவுக்கும் பொலிசாரின் பாதுகாப்பு தேவை எனின் பாதுகாப்புக்காகவே நிதியின் பெரும்பகுதியை அரசாங்கம் செலவிடப்போகிறதா?
இப்போதே 1500 கோடி பாதுகாப்பு செலவீனத்துக்கு ஒதுக்குவதாக குறிப்பிடும் அரசாங்கத்துக்கு இவ்வாறான நெருக்கடி நிலமைகள் பணவீக்கத்தை ஏற்படுத்தாமல் விட்டு விடுமா?

1500 கோடியை பாதுகாப்புக்காக செலவழிக்கும் அரசாங்கம் ஒரு கோடியை வடபகுதி நல்லூர் ஆலயத்துக்கு வழங்கி நாட்டின் மீதான கரிசனையை வெளிப்படுத்தாதது ஏன்?

 சாதாரண கோவில்களில் மட்டுமா மக்கள் ஒன்று திரள்கிறார்கள்?  மருதடி, மாவிட்டபுரம்,  கீரிமலை என எல்லாக்கோவில்களிலும் தானே மக்கள் ஆயிரக்கணக்கில் திரள்கிறார்கள்? நல்லைக்கந்தனுக்கு மட்டும் இவ்வளவு பாதுகாப்பும் பறை தட்டலும் ஏன்? அங்கு
பாதுகாப்பு பணியில் பொலீசார் மட்டும் ஈடுபடவில்லை. இராணுவமும் கோயில் வளாகத்தை சுற்றி நிற்கிறது. பொலீசார் சப்பாத்துக்களை அணியாமல் நிற்கிறார்கள். பொலீசாரில் சிங்கள முஸ்லீம் பொலீசாரும் கடமையில் ஈடுபடுகிறார்கள். பொலீசார் மாமிசம் புசிக்காது கடமையில் ஈடுபடுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.  ஆனால்  இராணுவம் கோவிலின் உள்வீதிக்குள் சப்பாத்துக்களுடன் நடமாடுகிறார்கள். பாதுகாப்பு காவலில் ஈடுபடுகிறார்கள். இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்குவது பற்றியோ கோவிலுக்குள் நடமாடுவது பற்றியோ பொறுப்பு வாய்ந்தவர்கள் வெளிப்படுத்தி அறிவிக்காமல் இருப்பது ஏன்?
   நல்லூர் ,மடு போன்ற  பெரும் கோவில்களை பாதுகாக்கவே அரசாங்கம்  முயற்சி செய்கிறதா?  அப்படியான ஒரு செய்திதான் வெளிப்படுத்தப்படுவதாயின் பயங்கரவாதிகளின் இலக்குக்கு இவர்களே தூபம் போடுகிறார்களா?  அடிநிலை மக்களின் பாதுகாப்பு என்பது எப்போதும் அல்லோல கல்லோலம் தானா?
இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்பதும் இலங்கை மக்கள் ஜனநாயகவாதிகள் என்பதும் அவசரகால சட்டத்துக்குள் அமிழ்ந்து போய் விட்டதால். திறந்தவெளி நியாயங்களுக்கு இனி இடமில்லை என்பதே உண்மை.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.