நல்லூரான் மகிமை இவரல்லோ!

இந்திய பிரதமர் மோடி அவர்கள் யாழ்ப்பாணம் வந்தபோது, மேலாடையோடு ஆலயத்துக்குள் செல்ல அனுமதி அளிக்கோம் என்று ஆலய அறக்காவலர் மாப்பாணர் முதலியார் அவர்கள் கூறிவிட்டார். இந்தியப் பிரதமர் மேலாடை கழற்றி ஆலயத்துள் செல்வது இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அவ்வளவு உவப்பாகப்படாமையினால் கொஞ்சம் அதிகாரத் தொனியில் கேட்டுள்ளார்கள்.
அதற்கு மாப்பாணர் முதலியார் அவர்கள், நீங்களே அச்சகர்களைக் கூட்டிவந்து நீங்களே பூசைசெய்து, நீங்களே என்னவும் செய்யுங்கள்.ஆனால் முருகன் அடியார்களாகிய நாம் எதுவும் செய்யோம்.
எமது அந்தணரும் எதுவும் செய்யார்.
முருகன் விக்கிரகத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பதா இல்லையா என்பதை அவர் பார்த்துக் கொள்வார் என்று உறுதிபடக்கூறிவிட்டார்.

யாழ்ப்பாணத்திற்கு வரும் அரசியற் தலைவர்கள்,வெளிநாட்டுப் பிரமுகர்கள் எவர்பொருட்டும் ஆலயத்துள் எந்த சிறப்புப் பூசைகளும் இல்லை.சிறப்பு மரியாதைகளும் இல்லை.ஆனால்; யாழ்ப்பாணத்தின் அடையாளமாக நல்லூர் ஆலயமே விளங்குவதால், அனைத்து அரசியல்த் தலைவர்களும் ஆலயத்திற்குச் செல்வதை தமது வாடிக்கையாகக் கொள்வர். ஆலயத்துள் மேலாடையைக் கழற்றிவிட்டே சென்றுவருவர்.

ஒருமுறை இலங்கைப் பிரதமராக சிறிமா அம்மையார் அவர்கள் இருந்தபோது யாழ்ப்பாண வருகையின்போது நல்லூருக்குச் சென்றிருந்தார்.ஆலயம் பூட்டியிருந்தது. திறந்து பூசைசெய்யும்படி வேண்டினார்.ஆனால் மாப்பாணர் முதலியார் அவர்கள் மறுத்திடவே, பிரதமருக்காகக்கூட ஆலய விதிகளை மாற்றமுடியாது என்ற அவரைப் பாராட்டிச் சென்றார்.ஆக; இலங்கை பிரதமர் என்றாலும்,சனாதிபதி என்றாலும் பிச்சைக்காரன் என்றாலும் முருகன் முன்னால் ஒருவரே என்ற மாப்பாணர் முதலியாரின் உறுதி, பரம்பரை பரம்பரையாக அவர்கள் பேணிவரும் முருகபக்தியின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும்.

இலங்கைப் பிரதமராயினும் சனாதிபதியாயினும் ஆலயப் பூசை நேரத்துக்கு ஏற்பவே தமது நேர அட்டவணைகளை யாழ்ப்பாண வருகைகளின் போது கையாண்டு, மேலாடைகளைக் கழற்றிச் செல்வர்.
இவ்வழமை யாழ்ப்பாண ஆலயங்கள் அனைத்திலும் இருக்கின்றபோதும், இறுதியில் இந்தியத் தூதரக அதிகாரிகள் நகுலேசுவர ஆலய தற்போதைய பிரதம குருவும் ஆலய உரிமையாளருமான நகுலேசுவர குமாரசுவாமிக் குருக்களை நாடி, நகுலேசுவர ஆலய விதிகளைத் தளர்த்தி, இந்தியப் பிரதமர் அவர்களை மேலாடையோடு உள்ளே அழைத்துச் சென்றனர். குறித்த குருக்களோடு நாம் இதுபற்றி வினாவியபோது, மேற்கூறிய சம்பவக் கருத்துக்களை உரைத்து, மாப்பாணர் முதலியார் தவறிழைத்ததாகவும், தாம் ஒருவரே புத்தியோடு நடந்ததாகவும் கூறினார்.

யாழ்ப்பாண ஆலயங்களுக்குள் மேலாடை கழற்றிச் செல்லும் வழமை இந்தியப் பிரதமர் அவர்களுக்காகவே முதன்முறை, அதுவும் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான நகுலேசுவரத்தில் கைவிடப்பட்டிருந்தது. சிவபெருமானை நீலநிறக் கடவுளென்ற ஆகமத் தெளிவற்றார்களுடைய கைகளுக்கு ஆலய உரிமையும் பிரதம குரு பொறுப்பும் சென்றால் அது அரசியல்வாதிகளுக்காய் ஆடும் களமாக மாறிவிடும் என்பதற்கு இதுவே சான்றாகும். இக்குருக்கள் ஆலய சம்பிரதாயங்களை மாற்றமுடியாதென்று தெளிவாகக் கூறியிருப்பின், இந்தியப் பிரதமர் அவர்களுக்கு இந்தியத் தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாண சம்பிரதாய வழமையைக் கூறியிருப்பர்.நிச்சயமாக அவரும் மேலாடையைக் கழற்றிவிட்டு ஆலயத்துக்குச் சென்றுவந்திருப்பார்.
வரலாற்றுத் தவறிலிருந்து தப்பியிருப்பார்.அவருடைய பெயரும் மாசடைந்திராது.

இப்படி,
ஆலயத்தினை தொன்றுதொட்டு முருகன் அனைவரும் சமம் என்கின்ற பாவனையில் நிர்வகித்துவரும் மாப்பாணர் முதலியார் அவர்களின் பரம்பரையின் முருகபத்தியின் சிறப்புத்தான் நல்லூரில் முருகன் விரும்பி அருள்பாலிக்கும் அற்புதத்தின் ஆதாரம்.

சைவர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவராயினும் அவர்க்கு கோயில் என்றால் சிதம்பரம்தான். பாக்கிஷ்தான் நாட்டுச் சைவராயினும், ஜேர்மனிக்காரர் ஒருவர் சைவ சமயத்தினை ஏற்பினும், ஒரு இரசிய நாட்டவர் சைவசமயத்தினை ஏற்பினும் அவருக்குக் கோயில் என்றால் அது சிதம்பரமேயாம். எனவே ஒரு கோயில் எந்தவொரு நாட்டினதும் சொத்தல்ல! அது சிவன் சொத்தாகும். அடியார் அனைவருக்கும் உரியது. நாமார்க்கும் குடியல்லோம் என்று அப்பர் பெருமான் காட்டிய அறமும் இதுவே. ஆனால் ஆகம முறைக்கு முரணாக, சிதம்பரத்தில் நாட்டின் தேசியக்கொடி ஏற்றப்படுவது ஏற்கப்பட்டிருக்கும் இக்காலகட்டத்தில், எந்தவொரு அரசியல்வாதிகளுக்கும் அடிபணியோம் என்ற நல்லூர் மாப்பாணர் முதலியாரின் முருகபத்தி, தமிழரின் நல்வினைப் பயனாகும். முருகன் உள்ளான் என்பதனை உலகுக்கு உணர்த்தும் அருமையுமாகும்.

மாப்பாணர் முதலியார் அவர்களை எப்போதும் ஆலயத்துள் பார்க்கலாம்.சாவிக்கொத்தோடு எங்கேனும் ஒருமூலையில் அமர்ந்திருப்பார்.அவருடைய மேனி சிவப்பொலிவோடு மினுங்கியபடி இருக்கும். முதுமையிலும் முருகன் பணிகள் ஒழுங்காய் நடக்கிறதா என்பதை மூலையில் இருந்து பார்த்தபடி இருக்கும் அவர், ஒரு சுவாமியாரின் அருட்பொலிவோடு காண்பார் கண்களுக்குத் தோன்றிடுவார். ஆடம்பரம் இல்லாது,பேச்சு மூச்சு இல்லாது, முருகனின் பணிகளை தனது கடைக்கண்களால் நோட்டமிட்டபடி அமர்ந்திருக்கும் அவர்கோலம் முருகனின் அருளாட்சியின் சாட்சியாகும்!

வறுமைப் பிணிக்கு மருந்தொன் றிருக்குது
வந்து பாருங்கள் நல்லூரில்
வந்து மருந்தை அருந்திய மாதவர்
வாழ்ந்தார் வாழ்ந்தார் வாழ்ந்தாரே
-சிவயோக சுவாமிகள்

மருந்தென்று சொன்னால் புளிப்பு, கசப்பு இருக்கத்தான் செய்யும்.மருந்தைக் குடிப்பதும் குடிக்காமல் இருப்பதும் அவரவர் விருப்பம். மருந்தை ஏன் புளிப்பாக உள்ளது என்று சாடுவதால் மருந்துக்கு எந்தப் பாதகமும் வராது...

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.