கமல் படத்தில் முதன்முறையாக விவேக்!

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் நடித்து வரும் விவேக், இந்தியன் 2 படத்தில் முதன்முறையாக கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.



1987ஆம் ஆண்டு மனதில் உறுதி வேண்டும் படத்தின் மூலம் கே.பாலசந்தரால் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டவர் விவேக். சமூக கருத்துள்ள நகைச்சுவைகளால் தனக்கென ஒரு தனி அடையாளம் ஏற்படுத்திய விவேக், இதுவரை 220 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நாயகனாக நடித்த வெள்ளைப் பூக்கள் திரைப்படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.

ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு என தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்திருக்கும் விவேக், கமல்ஹாசன் உடன் மட்டும் நடிக்காமலிருந்தது ஆச்சர்யமே. கடந்த 2009ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற ‘கமல் 50’ என்ற கமல்ஹாசனின் 50ஆவது திரைப்பயணத்தைக் கொண்டாடும் விழாவில் இந்த வருத்தத்தை மேடையிலேயே பதிவு செய்திருப்பார் விவேக்.

இந்நிலையில், தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் விவேக் இணையவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு முன் விவேக், ஷங்கர் இயக்கத்தில் அந்நியன், சிவாஜி ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் ஆந்திராவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடர்ந்து வரும் நிலையில், ஆகஸ்ட் 26ஆம் தேதி கமல் படப்பிடிப்பில் இணையவுள்ளார்.

30 வருடங்களுக்கும் மேல் தமிழ் திரையுலகில் நடித்து வரும் விவேக், கமல்ஹாசனுடன் ஒரு படத்தில் கூட நடிக்கமுடியாமலிருந்த மனக்குறையை இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 மூலம் போக்கியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.