கோமாளி படத்தை சுற்றும் அரசியல்!

தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனைக் குழு முடிவை திருச்சி திரையரங்கு உரிமையாளர்கள் மட்டுமல்ல திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க உறுப்பினர்களும் ஏற்கவில்லை.



திருச்சி வட்டார திரையரங்கு உரிமையாளர் மற்றும் வினியோகஸ்தர்கள் தரப்பில் கூறும் போது, “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்பது அதிகார ஆளுமை மிக்க அமைப்பாக இருந்த பொழுது, தமிழகத்தில் உள்ள விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அதன் முடிவுக்கு கட்டுப்பட்டு நடந்தனர் .

ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைப்பு எடுக்கக்கூடிய முடிவுகள் அதிகாரம் கொண்டதாக இருக்கும். அது போன்ற ஒரு அமைப்பை, நீதிமன்ற நடவடிக்கை மூலம் அரசின் உதவியுடன் அகற்றிவிட்டு, கொல்லைப்புற வழியாக ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் என்ற முகமூடி அணிந்து கொண்டு நாட்டாமை தனம் செய்வதை எங்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்” என்றனர்.

மேலும், “பிரச்சனையை பேசித் தீர்க்க வேண்டும்; அதில் ஒரு நேர்மையும் ஒழுங்கும் இருக்க வேண்டும்; அதைவிட்டுவிட்டு ஆலோசனைக் குழு கூறுவதை அமுல்படுத்தாவிட்டால், திரையரங்குகளில் விற்கப்படும் டிக்கெட்டுகளுக்கு முறையாக ஜிஎஸ்டி செலுத்தப்பட்டு இருக்கிறதா என்பதை கண்டறிந்து சம்பந்தப்பட்ட திரையரங்குகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் முயற்சி எடுப்போம் என்று பேசுவது என்ன விதமான அணுகுமுறை என்று தெரியவில்லை.

ஆலோசனைக் குழு கூறுவதை அமுல்படுத்திவிட்டால் நாங்கள் செய்கிற தவறுகள் அனைத்துக்கும் ஆலோசனைக் குழு ஒத்துழைப்பு தரும் என்பதுதான் இதன் அர்த்தம். பிறகு எப்படி ஆலோசனைக் குழு நேர்மையான முடிவுகளை அறிவுபூர்வமாக எடுக்கும் என்று நாங்கள் நம்ப முடியும்.

அதனால் தான் தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் குழு எடுக்கின்ற முடிவுகள் அலட்சியப்படுத்த படுவதும் அதனை எதிர்க்க வேண்டிய கட்டாயமும் திரையரங்கு உரிமையாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது” என்கின்றனர் திருச்சி வட்டார திரையரங்கு உரிமையாளர் மற்றும் வினியோகஸ்தர்கள் தரப்பில்.

“முறைப்படி அவுட் ரேட் முறையில் ஒப்பந்தம் செய்துவிட்டு, வாங்கிய விலைக்கு மேல் தியேட்டர்களில் அட்வான்ஸ் தொகை வாங்கியது மட்டுமல்லாமல் தயாரிப்பாளரிடம் பேசிய தொகையில் 13 லட்ச ரூபாய் குறைவாக கொடுத்துவிட்டு தற்பொழுது படம் ஓடவில்லை என்றவுடன் நஷ்டத்தை தயாரிப்பாளர் தர வேண்டும் என்று கேட்பது நியாயமான வியாபார நடைமுறை இல்லையே” என்றபோது..

“கோமாளி பட விவகாரத்தில் திருச்சி வட்டாரத்தில் திரையரங்கு உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் வியாபார நடைமுறைகளுக்கு எதிராகவே செயல்படுகின்றனர்” என்கின்றனர் மூத்த விநியோகஸ்தர்கள்.

அதன் விளைவாக திருச்சி ஏரியா விநியோகஸ்தர்கள் சங்கம் இதுவரை இல்லாத அளவுக்கு தவறான முடிவுகளை எடுக்குமாறு ஒரு தரப்பும்; அவ்வாறு எடுப்பது நியாயத்துக்கு புறம்பான செயல் என்று சங்கத்தின் தலைவர் கேசவன் தலைமையில் ஒரு தரப்பும்; வாக்குவாதம் செய்ததன் விளைவு நேற்றைய தினம்(ஆகஸ்ட் 19) முழுமையாக நடந்து முடிந்திருக்க வேண்டிய விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாக குழு கூட்டம் முடிவு எடுக்காமல் பாதியிலேயே கலைந்து சென்றது.

கோமாளி படத்தின் தமிழ்நாடு விநியோகஸ்தர் சக்திவேலன் திருச்சி விநியோகஸ்தர் சங்கத்தில் உறுப்பினர். வருடந்தோறும் தொடர்ச்சியாக புதிய படங்களை வெளியிட்டும் வருகிறார். இதன் மூலம் திருச்சி ஏரியாவில் உள்ள திரையரங்குகளில், படங்களை திரையிட்டதன் மூலம் அவருக்கு வரவேண்டிய பங்கு தொகை சுமார் ஒரு கோடியே 25 லட்ச ரூபாயை திரையரங்கு உரிமையாளர்கள் கொடுக்காமல் பாக்கிவைத்துள்ளனர்.

இதனை வசூலித்து கொடுக்கவேண்டிய விநியோகஸ்தர் சங்கத்தில் பொறுப்பில் உள்ள பலரும் திரையரங்கு உரிமையாளர்களாக அல்லது திரையரங்குகளில் படங்களை திரையிடும் முகவர்களாக உள்ளனர்.

இந்தப் பிரச்சினையை முன்வைத்து சக்திவேல் அவர்களை விநியோகஸ்தர்கள் சங்க உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டார்கள். அவருக்கு தரவேண்டிய மொத்த பணத்தையும் ஏப்பம் விட்டு விடலாம் என்று திட்டமிட்டு காய் நகர்த்தி வருகின்றனர் ஒரு தரப்பினர். இச்செயலுக்கு பின்னால் இருக்கும் அரசியல் என்ன??
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.