எழுக தமிழிக்கு அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம் ஆதரவு!


எழுக தமிழ் கோரிக்கைகள் வெற்றிபெற பெருந்திரளாக அணிதிரளுமாறு சென்னை பல்கலைக் கழக அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


தொடர்ச்சியான அடக்கு முறையாலும் கட்டற்ற அரசியல் ஒடுக்குமுறையாலும் உரிமையை இழந்த இனம், எழுச்சிமிகு மக்கள் போராட்டத்தால் மட்டுமே தனது உரிமையை நிலைநாட்ட முடியும் என்பதை நாம் உணர வேண்டிய நேரமிது. 1948 க்கு பிந்தைய சுதந்திர இலங்கையில் ஈழத் தமிழருக்கான சுயநிர்ணய உரிமை போராட்டம் என்பது பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு இடையிலும் மக்களின் எழுச்சியால் இன்றளவும் தொடர்ந்து வருகிறது.


ஈழத் தமிழ் மக்கள் தங்களின் உரிமைகளை நிலைநாட்ட பல்வேறு வழிகளில் போராடி வருகின்றனர். யுத்த காலத்தில் பல லட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதும், யுத்தத்திற்குப் பின்பு ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ் உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நிகழ்வுகளும் இவ்வுலகில் ஈழத்தமிழினம் உயிர்ப்புடன் உள்ளதா? எனும் நெஞ்சை உலுக்கும் கேள்வியாக 2009ல் எழும்பியது.


அதன் தொடர்ச்சியாக இன்றளவும் ஈழத்தமிழரின் பூர்வீக நிலங்களில் சிங்கள-பௌத்த குடியேற்றம் மற்றும் திட்டமிட்ட ராணுவ மயமாக்கல் என்பது வரலாற்றில் ஈழத்தமிழனின் நிலம் என்று ஒன்று இருந்தது என்பதை அழிக்க சிங்கள-பௌத்த பேரினவாத அரசு முன்னெடுக்கும் ஒரு கொடிய நிகழ்வாகவே நாங்கள் பார்க்கிறோம்.


யுத்தம் முடிந்து இன்றளவும் முறையான விசாரணை என்பது இல்லவே இல்லை.மேலும் “திருடன் கையில் சாவி” என்பதை போன்று போர்க்குற்றம் செய்த சிங்கள அரசிடமே விசாரணை அமைப்பு என்றால் “நீதி என்பது அநீதி”ஆகவே ஈழத்தில் இருக்கும். எம்தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற யுத்தகால போர்க்குற்ற நடவடிக்கைகளை விசாரிக்க சர்வதேச விசாரணை என்பதும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலையை வெளிக்கொணர்வதும், ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் கைதிகளாக உள்ள ஈழத்தமிழர்களின் விடுதலையும் இன்றியமையாதது ஆகும்.


உரிமையினை போதிக்காத பல்கலைக்கழகமும் !
போராடாத இனமும் வரலாற்றில் என்றும் பிழைகளே!!
எம் தாய் தமிழ் ஈழ மக்களின் மீதும் ஈழத்தமிழ் நிலப்பரப்பின் மீதும் நடத்தப்படும் சிங்கள பௌத்த இனவெறி அரசின் இன அழிப்பு நடவடிக்கைகளை எதிர்த்து தமிழ் மக்கள் பேரவை சார்பாக வரும் செப்டம்பர் திங்கள் 16ஆம் நாள் முன்னெடுக்கப்படும் எழுக தமிழ் பேரணிக்கு தமிழ்நாட்டின் தாய் பல்கலைக்கழகமான சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பாக ஆதரவுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க எழுக தமிழ் பேரணியில் தாயகத்திலுள்ள ஈழத் தமிழ் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு நம்தம் தாய் தமிழ் நிலத்தின் உரிமையை மீட்டெடுக்க சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக வேண்டுகிறோம்

தமிழ்மக்கள் ஒன்றாகட்டும் !

எழுக தமிழ் பேரணியின் உன்னத கோரிக்கைகள் வென்றாகட்டும்!! என அவ்வறிக்கையில் மேலும் குறிப்படப்பட்டுள்ளது.
Powered by Blogger.