பானையில் குழந்தையின் சடலம்: தம்பதி மீது கொலைக் குற்றச்சாட்டு!!

கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 10) சின் சுவீ சாலையின் புளோக் 52ல் உள்ள ஒரு வீட்டில் பெண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, குழந்தையின் பெற்றோர்மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இருவரும் 2014ஆம் ஆண்டில் தங்களது மகளைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.


செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தம்பதி, 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் தங்களது இரண்டு வயது மகளைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இருவரின் பெயரையும் வெளியிடக்கூடாதென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குழந்தையின் சடலம் ஓர் இரும்புப் பானைக்குள் கண்டெடுக்கப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.  செப்டம்பர் 10ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு உதவி கேட்டு அழைப்பு வந்ததாக போலிசார் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. விரைந்து சென்ற அதிகாரிகள், எட்டாவது மாடியிலிருந்த ஓரறை வாடகை வீட்டில் குழந்தையின் சடலத்தைக் கண்டெடுத்தனர்.

குழந்தையின் பெற்றோர் சென்ற ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து வேறு குற்றங்களுக்காகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் போலிசார் தெரிவித்தனர்.  குழந்தையின் தந்தைமீது முன்பு போதைப்பொருள் தொடர்பான இரு குற்றச்சாட்டுகளும் கலகம் செய்ததாக ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது. இவ்வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

குழந்தையின் தாய்மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதற்கு முன்பாக, செப்டம்பர் 9ஆம் தேதி போதைப்பொருள் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளையும் ஒரு திருட்டுக் குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்ட அவருக்கு ஐந்து ஆண்டுகளும் இரண்டு மாதங்களும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.  இந்தத் தம்பதியருக்குத் திருமணமாகி குறைந்தது மூன்று பிள்ளைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட வாடகை வீட்டின் குடியிருப்பாளர்களாக இவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் கடந்த வியாழக்கிழமை அவ்வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, வீட்டில் யாரும் இல்லை. வீடு பூட்டிக்கிடந்தது.

குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்படுவதற்குக் குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே “ஏதோ அழுகுவது” போன்ற வாடை பொது நடைவழியில் வீசியதாக அண்டைவீட்டார்கள் கூறினர்.  அந்த வீட்டில் கடந்த மூன்று அல்லது நான்கு மாதங்களாக 20 வயதுகளில் உள்ள ஓர் ஆடவர் தனியாக வாழ்ந்து வருவதாகவும், அவருக்கு முன்பாகப் பிள்ளைகளுடன் ஒரு தம்பதி அவ்வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும் அண்டைவீட்டார்கள் தெரிவித்தனர்.

போலிசார் கடந்த செவ்வாய்க்கிழமை அவ்வீட்டுக்குச் சென்றபோது வீட்டில் ஓர் ஆடவர் இருந்ததாகத் தெரிய வருகிறது. ஆனால் அவருக்கும் அவருக்கு முன்பாக அவ்வீட்டில் வசித்த தம்பதிக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெரியவில்லை.  கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை விதிக்கப்படலாம் அல்லது ஆயுள் தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.  தம்பதி மீதான வழக்கு செப்டம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.