ஏழு பெண்களை மணந்த போலி காவல் அதிகாரி கைது!

ஏழு பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றிய போலி காவல் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ராஜேஷ் பிரித்வி என்ற அந்த ஆடவர் 20 பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சித் தகவலும் வெளியாகி உள்ளது.


காணாமல் போன ஒரு பெண் குறித்து தீவிர விசாரணையில் அப்பெண்ணை அவர் வேலை பார்த்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ராஜேஷ் பிரித்வி, 29, கடத்திச் சென்று திருமணம் செய்திருப்பது தெரியவந்தது. ராஜேஷ் பிரித்வியின் சொந்த ஊரான திருப்பூர் அருகே ஒரு வீட்டில் அப்பெண்ணைச் சிறை வைத்திருப்பதாகவும் தகவல் கிடைத்தது. அதிகாரிகள் சிறைவைக்கப்பட்ட  பெண்ணை மீட்டனர். அப்போது அங்கு தங்கியிருந்த ராஜேஷ் பிரித்வி அதிகாரிகளின் பிடியில் சிக்காமல் தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து ராஜேஷ் பிரித்வியைக் கைது செய்ய அதிகாரிகள் ராஜேஷ் பிரித்வியின் கைபேசியில் தொடர்புகொண்டு மீட்கப்பட்ட பெண்ணைப் பேசவைத்து,  வீட்டிற்கு  வரவழைத்தனர். ராஜேஷ் பிரித்வியும் வீட்டிற்கு வந்தபோது அதிகாரிகள்  ராஜேஷ் பிரித்வியைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.

தீவிர விசாரணை நடத்தப்பட்ட போது ராஜேஷ் பிரித்வி பல  பெயர்களில் பல்வேறு படிப்புகளை படித்துள்ளதாகக் கூறி பல பெண்களைக் காதல் வயப்படச் செய்து ஏமாற்றி வந்திருக்கிறார் என்பது தெரியவந்தது. வெவ்வேறு ஊர்களில்  தினேஷ், ஸ்ரீராமகுரு, தீனதயாளன், ராஜேஷ் பிரித்வி என்ற பெயர்களில்  இருந்திருக்கிறார். பட்டதாரி, பொறியாளர், மருத்துவர் என்றெல்லாம் கூறியுள்ளார்.

ஆறு பெண்களை ஏற்கெனவே ஏமாற்றித் திருமணம் செய்துள்ளார். இது தொடர்பில் திருச்சி, கோவை, திருப்பூர், ஆந்திரா, திருப்பதி, காளஹஸ்தி ஆகிய இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் இவர்மீது வழக்குகளும் உள்ளன. கோவையில் கைதானபோது காவலிலிருந்து தப்பித்தார். ஏழாவது திருமணம் செய்ய காவல் அதிகாரி  வேடத்தில் சென்னைக்கு வந்ததுடன் 20க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார்.

இவரிடம் 100க்கும் மேற்பட்ட ‘சிம்’ அட்டைகள், போலி அடையாள அட்டைகள், போலி ‘இன்ஸ்பெக்டர்’ அட்டை, போலி வாக்காளர் அட்டை மற்றும் கைதிகளுக்கான கைவிலங்கு, காவல் சீருடை ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவரை தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துவிட்டு, மீண்டும் போலிஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்படும்.

இதுபோன்ற குற்றங்களில் இவர் ஈடுபடாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.