மன்னார் மண்ணில் நடந்தேறிய 'அமுதப் பிரவாகம்' நூல் வெளியீட்டு விழா.

வீட்டினை பலவிதமானோர் கட்டுகின்றனர். குடிசையும் வீடுதான். மாளிகையும் வசிப்பிடம்தான். கவிப்படைப்பும் அவ்விதமே. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் போகின்றனர். காலம் அதனைப் பதிவாக்கும்.  மொழி ஏதோவோர் வகையில் தக்கவைக்கப்படல் நிறைவே.


பெண் படைப்பாளி அன்பழகி கஜேந்திரா படைத்த இரண்டாவது நூலாகிய 'அமுதப் பிரவாகம்' கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது ஈழத்தின் மன்னார் மாவட்டத்தின் நகரசபை மண்டபத்தில் 10.08.2019 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது. நிகழ்வுக்கு மன்னார் தமிழ்ச் சங்க உறுப்பினர் ஜே.ஆர்.மயூரன் தலைமை வகித்தார். வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

முன்னதாக வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்ட பின்னர், தமிழ்மொழி வாழ்த்தினை மன்னார் சித்திவிநாயகர் தேசிய பாடசாலை மாணவிகள் இசைத்தனர். தொடர்ந்து அமரரான சித்த வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி எஸ்.லோகநாதன் அவர்களுக்கான மலர்வணக்கம் இடம்பெற்றது. மன்னார் தமிழ்ச் சங்கத் தலைவர் அருட்பணி தமிழ்நேசன் அடிகளார் உள்ளிட்டோர் வணக்கம் செலுத்தினர்.

வரவேற்பு நடனத்தினை மன்னார் கீரி அறநெறிப் பாடசாலை மாணவிகள் வழங்கினர்.  தொடர்ந்து கவிஞர் மன்னார் பெனில் வரவேற்புரை நிகழ்த்தினார். மன்னார் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மராமக் குருக்கள் அவர்கள் ஆசியுரை நல்கினார். தலைமையுரை, ஆசிரியர் ராஜ்மோகன் அவர்களின் நூலாசிரியர் பற்றிய அறிமுகவுரை, சுவாமி கைவல்யானந்தா பிரமச்சாரி இலக்கீசன் அவர்களின் மொழியியல் பார்வை, கவிஞர் வேலணையூர் ரஜிந்தன் அவர்களின் வாழ்த்துரை, மன்னார் தமிழ்ச் சங்கச் செயலாளர் சு.ச.மாக்ஸ் மில்லன் குரூஸ் அவர்களின் வெளியீட்டுரை என்பன முறையே இடம்பெற்றன.

நூலினை நிகழ்வின் பிரதம விருந்தினர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் வெளியிட்டு வைக்க, கிருபா லேணர்ஸ் அதிபர் 'சமூக திலகம்' அ.கிருபாகரன் சார்பாக யோ.புரட்சி முதற்பிரதியை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நூற்பிரதிகள் வழங்கப்பட்டன. பிரதம விருந்தினர் உரையினை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நிகழ்த்தினார். கலை மற்றும் நடைமுறை அரசியல் கலந்து அவருரை அமைந்தது. மன்னார் இந்துக் குருமார் ஒன்றியத்தினர் உள்ளிட்டோர் நூலாசிரியர் அன்பழகி கஜேந்திராவிற்கு மதிப்பளிப்பு வழங்கினர்.

நூலாய்வுரையினை கவிஞர் கு.வீரா நிகழ்த்தினார். கவிஞர் நெடுந்தீவு சபேசன் நிகழ்ச்சித்  தொகுப்பில் இடம்பெற்ற இவ்வெளியீட்டு விழாவில் கிராம அலுவலர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஏ.ராதா பெர்ணான்டோ, கவிப்புலவர் வேலணையூர் சுரேஷ், இந்து ஆலயங்களின் ஒன்றியத் தலைவர் மு.கதிர்காமநாதன் ஆகியோரின் பாராட்டுரை அளித்தனர்.

ஏற்புரையுடன் கூடிய நன்றியுரையினை நூலாசிரியர் அன்பழகி கஜேந்திரா வழங்கினார்.

நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மூத்த, இளைய படைப்பாளிகள் நிறைந்திருந்தனர். கவிஞர் அருட்பணி தமிழ்நேசன் அடிகளார், பெண் படைப்பாளிகளான வெற்றிச்செல்வி, தவமணிதேவி, சர்மிலா, வன்னியூர் இனியவள் மற்றும் இளைய படைப்பாளிகள் வை.கஜேந்திரன், பாரதிமைந்தன், தே.பிரியன், கபில் முகம்மது நஜீம், பொற்கேணி முளெஃபர், மன்னூரான் என பலரையும் காணக்கிடைத்தது.

நூல் அணிந்துரை: கவிஞர் வேலணையூர் சுரேஷ்.
பிற்குறிப்பு: யோ.புரட்சி.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.