அம்மாவின் கடிதம்!!


அன்பு மகள் அனித்ராவுக்கு!  அம்மா எழுதும் அன்பு மடல். 


உன் கடிதம் கண்டேன், மகிழ்ச்சி. ஆனால் நீ எழுதியிருந்த விடயங்கள் கவலையைத்தான் கொடுத்தன. உன் கணவர் உன்னை சந்தேகப்பட்டு திட்டிவிட்டார் என்றும் அதனால் சகல விதத்திலும் அவரை விட்டு விலகி வாழ்வதாகவும்  இங்கு இது ஒரு பெரிய விடயம் அல்ல என்றும் எழுதியிருந்தாய்,

அத்துடன், பாசத்தை   யாசிப்பதிலும், கேட்டோ கெஞ்சியோ பெறுவதிலும்  உடன்பாடில்லை எனவும் எழுதியிருந்தாய். உன் கருத்து உண்மைதான், அன்பை கேட்டு கெஞ்சி பெறுவதில் அர்த்தமில்லை தான், ஆனால் நீ  அன்பை அலட்சியப்படுத்திவிட்டு, பிரிவை நேசித்ததும், அவசரமாய் அதை செயற்படுத்திய விதமும் தான் தவறு. 

எல்லாவற்றையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என செய்வதிலும்  அர்த்தமில்லைதான் மகளே,
உங்களுக்குள் இது முதல் பிரச்சினைதானே, இத்தனை நாட்களாக அவர் இப்படி நடந்துகொள்ளவில்லையே,  இன்றைய அவரது எண்ணத்திற்கு என்ன காரணம் என யோசித்தாயா,  அறியாமல் நீ செய்த தவறாகவும் இருக்கலாம் கண்ணே, ஒருவர் மீது கோபம் வரும்போது, அவர் செய்த நல்லவைகளைவிட்டுவிட்டு  கெட்டவைகளை மட்டும் யோசிப்பது மனித இயல்பு,  உன் அன்பானவர் உனக்காக செய்த நல்லவைகளை யோசித்துப்பார்,

உன் கணவர் ஒன்றும் படுமோசமானவர் அல்லவே.  அவர் செய்தது தவறாகவே இருப்பினும் அதனைத் திருத்திக்கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை வழங்கவேண்டியது உன் கடமையல்லவா. தொடர்ந்து தவறு செய்யும் ஒருவர் என்றால் நீ கொடுத்திருக்கும் தண்டனை நியாயமானது தான். ஆனால் மாப்பிள்ளை அப்படிப்பட்டவர் இல்லை என்றே நான் நினைக்கின்றேன். சந்தேகப்படாத ஆண்கள் உலகில் மிகச்சொற்பமானோரே.  ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஆண்களுக்கு அந்த எண்ணம் வந்தே விடுகிறது. அதில் உன் அப்பா கூட விதிவிலக்கல்ல.

அடுத்து, ஒரு தவறுக்கு பலதவறு ஒருபோதும் தண்டனை ஆகாது. அவர் செய்தது தவறுதான், ஆனால் திருந்தும் சந்தர்ப்பத்தை கொடாமல் திருத்தும் பணியிலிருந்து நீ பின்வாங்கிவிட்டாய். அது மாபெரும் தவறு. அதனை நீ செய்து பார்த்திருக்கவேண்டும். அதன் பின்னரும் இதே நிலைப்பாடு தொடர்ந்தால் உனது முடிவு சரியானதே. எல்லா  மனிதர்களும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தவறுசெய்யவே செய்கின்றனர். எல்லா தவறுகளும் திட்டமிடப்பட்டவை அல்ல.   சந்தர்ப்பம், சூழ்நிலை போன்றவையும் காரணமாகிவிடுகின்றது. என் மகளான நீ இதனைப் புரிந்துகொள்வாய் என நினைக்கின்றேன்.

சிறுவயதில் இருந்து உனக்காக ஒவ்வொன்றையம் பார்த்துப்பார்த்துச் செய்த   உன் தாய் நான், இப்போது மட்டும் உன் நலன் பற்றி யோசிக்காமல் இருப்னோ? 

 உன் மகளின் எதிர்காலம் என்பதை நீ கேள்விக்குறியாக்கிவிடாதே, உன் அவசரம் அவளது வாழ்வையும் பாதித்துவிடும். உன் அப்பாவின் அவசரக்குணம் உனக்கும் உள்ளதென்பது எனக்குத்தெரியும், நீ எனது மகள் தானே, எனது பொறுமையும் நிதானமும் உனக்கும் இருக்கத்தானே வேண்டும். அப்பாவின் குணம் மட்டும்தான் இருக்கவேண்டுமா? அம்மாவின் குணம் இருக்கக்கூடாதா?
என் அன்பு மகளே! உன் வாதங்கள் சரியானவையே, ஆனால் அவை இன்னும் ஆழமாய் யோசிக்கப்படவேண்டியவை, புரிந்துகொள்வாய் என நினைக்கின்றேன். உன் பதில் மடலை ஆவலுடன் எதிர்பார்த்தபடி.

அன்புடன்
உன் அம்மா.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.