சீன அதிபர் வருகை: 34 சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

சீன அதிபர் ஜீ ஜின்பிங் வருகையை முன்னிட்டு தமிழக அரசு 34 சிறப்பு அதிகாரிகள், 10 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ளது.
மாமல்லபுரத்தில் வரும் 11,12 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்தியா - சீனா இடையேயான முறைசாரா உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் கலந்துகொள்கின்றனர். இதனால் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாமல்லபுரத்தில் இரு நாட்டு அதிகாரிகளும் முகாமிட்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தி வருகின்றனர்.
சீன அதிபர் வரும் நேரம், போகும் நேரங்களில் விமானம், ஆளில்லா விமானம் உள்ளிட்ட அனைத்தும் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை தவிர முட்டுக்காட்டிலிருந்து மாமல்லபுரம் வரையிலான பகுதி, மாமல்லபுரத்தில் தங்குமிடம் என காஞ்சிபுரம் மாவட்ட போலீஸார் 5,000க்கும் மேற்பட்டோர் இந்தப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் மாமல்லபுரம் வருவதால் பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள 34 சிறப்பு அதிகாரிகளைத் தமிழக அரசு நேற்று (அக்டோபர் 9) நியமித்து உள்ளது. தலைமைச் செயலாளர் கே.சண்முகம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக்காக 34 சிறப்பு அதிகாரிகளையும் மேற்பார்வையிட 10 ஐஏஎஸ் அதிகாரிகளையும் நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சீன அதிபர் ஜீ ஜின்பிங் வரும் 11ஆம் தேதி சென்னை விமான நிலையம் வழியாக கிண்டியில் உள்ள ஐடிசி சோழா நட்சத்திர ஹோட்டலுக்கு வருகை தருகிறார். அங்கிருந்து அவர் சாலை மார்க்கமாக மாமல்லபுரம் செல்கிறார். மாமல்லபுரத்தில் 12ஆம் தேதி வரை தங்கியிருக்கும் ஜீ ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடியுடன் பல்வேறு விவகாரங்களை ஆலோசிக்க உள்ளார். எனவே, இரு முக்கிய தலைவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விழா ஏற்பாடுகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மாமல்லபுரத்தின் முக்கிய சாலைகள் அனைத்தும் சிசிடிவி கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகளில் தங்குபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. 22 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதித்து மீன்வளத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈஞ்சம்பாக்கம் முதல் புதுப்பட்டினம் வரையிலான மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு மறு உத்தரவு வரும் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.