உலக மனநல தினம்: பின்பற்ற வேண்டிய 4 தெரபிக்கள்!

ஆண்டுதோறும் அக்டோபர் 10ஆம் தேதியான இன்று உலக மனநல தினமாக கொண்டாடப்படுகிறது. இத்தினம் மனநலக் கல்வி, அது குறித்த விழிப்புணர்வு, வழிமுறைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாளாக கருதப்படுகிறது. 1992ஆம் ஆண்டு முதல் இத்தினத்தை உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் நாம் கொண்டாடுகிறோம்.
இத்தினம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது
இத்தினத்தின் தனித்துவம் என்னவெனில், ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட கருப்பொருளில் உலக மனநல நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 2015ஆம் ஆண்டு மனநலத்தில் கண்ணியம், 2016ஆம் ஆண்டு உளவியல் முதலுதவி, 2017ஆம் ஆண்டு பணியிடங்களில் மனநலம், 2018ஆம் ஆண்டு மாறிவரும் உலகில் இளைஞர்களும் மன ஆரோக்கியமும் என இதன் கருப்பொருள் ஆண்டுக்கு ஆண்டு மாறிக்கொண்டே வரும்.
இவ்வருடம், மனநல மேம்பாடு மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வுக்காக கடைபிடிக்கப்படுகிறது.
மன ஆரோக்கியம் குறித்த விவாதங்களும், விழிப்புணர்வுகளும் கடந்த சில ஆண்டுகளில் அதன் முக்கியத்துவம் கொண்ட நல்ல காரணத்திற்காக மைய நிலைக்கு வந்துள்ளது. ஆரம்பத்தில் மனநலன் குறித்த தங்கள் சந்தேகங்களை நண்பர்களுடன் தெரிவிக்க தயங்கியவர்கள் கூட சமீப காலங்களில் தயக்கம் எனும் எதிரியை வீழ்த்தி பகிரத் தொடங்கியிருக்கிறார்கள். மக்கள் மெதுவாக தங்களைச் சுற்றியுள்ள மனநல பிரச்சினைகளின் களங்கத்தைத் துடைத்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுகிறார்கள்.
சமீப காலங்களில் முன்னணி இடத்தில் வலம் வரும் பிரபலங்கள் கூட தாங்கள் சந்தித்த மனநலப் பிரச்சனைகளை பொது வெளியில் பகிரும் போது, இது அனைவருக்குமான பிரச்சனையாக பார்க்கப்படும் ஆரோக்கியமான மனப்பான்மை நம் சமூகத்தில் வளரத் துவங்கியிருக்கிறது. தீபிகா படுகோனே, ஷரத்தா கபூர், ஆண்டிரியா போன்ற நடிகைகள் தாங்கள் சந்தித்த மனநல சிக்கல்கள், அவற்றிலிருந்து சிகிச்சை மூலமும், குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோரிடம் பகிர்ந்ததன் மூலமும் எவ்வாறு அவற்றிலிருந்து வெளியே வந்தோம் என சமூக வலைதளங்கள் பகிர்ந்ததை இங்கே முக்கியமானதாக குறிப்பிட்டுக் கூற வேண்டும்.
நல்ல மன ஆரோக்கியத்திற்கான சற்று சுவாரஸ்யமான பாதைகளை தேடுபவர்களுக்காக, சில முக்கியமான உளவியல் சிகிச்சைகள் இங்கே பார்க்கலாம்.
செல்லப்பிராணி சிகிச்சை
பெட் தெரபி என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சிகிச்சை, உண்மையில் பல நல்ல ஆரோக்கியமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது. வீட்டுப் பிராணிகளான நாய்கள் அல்லது பிற விலங்குகளை வளர்க்கும் போதும், அவற்றுடன் நேரத்தை செலவிடும் போதும்: நம்முடைய கவலை, மனச்சோர்வு ஆகியவை அதிகளவில் குறைவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பெரும்பாலும் இந்த சிகிச்சையைப் பயன்படுத்தி நீண்டகால சிகிச்சையில் உள்ளவர்களுக்கு உதவுகிறார்கள்.
கலை சிகிச்சை
கலை உளவியல் சிகிச்சையின் கருவிகள் ஆக: ஓவியம் வரைதல், களிமண்ணில் கலைப் பொருட்கள் செய்வது, பொம்மைகள் செய்வது என எதுவாகவும் இருக்கலாம். சிகிச்சையாளர்கள் உணர்ச்சிகரமான சிக்கல்களை வெளிப்படுத்தவும் உரையாற்றவும் ஒரு ஊடகமாக கலையைப் பயன்படுத்துகிறார்கள். மிகவும் துன்பகரமான நிலை அல்லது குழப்பமாக இருக்கும் போது இவற்றை முயற்சி செய்து பார்க்கும் போது, ஒரு நிம்மதி உணர்வை நம்மால் அடைய முடியும். இந்த நடைமுறை, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது, சமூக திறன்களை மேம்படுத்துகிறது மற்றும் சுயமரியாதையை வளர்க்கிறது.
இசை சிகிச்சை
மியூசிக் தெரபி எனப்படும் இது, இயலாமையால் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கும், வளர்ச்சி மற்றும் உணர்ச்சி சிக்கல்களைக் கொண்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் உதவியாக இருக்கும். புற்றுநோய் மையங்கள், ஆல்கஹால் மற்றும் போதைக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மையங்களில் மருத்துவ இசை சிகிச்சையாளர்கள் இந்த இசை சிகிச்சையை பயன்படுத்துகிறார்கள்.
எழுத்து சிகிச்சை
எழுத்து சிகிச்சை மிக எளிமையான ஒன்று, ஜர்னல் தெரபி என்று இது அழைக்கப்படுகிறது. அதாவது உங்கள் அனுபவங்கள், எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைப் பற்றி எழுதுவது உங்களை அறிந்து கொள்ளவும் மன சிக்கல்களில் இருந்து வெளியேறவும் உதவும். பொதுவாக மனநல மருத்துவர்கள் இந்த சிகிச்சைகளை பரிந்துரைப்பது உண்டு.
ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மற்றவர்களின் வாழ்க்கையுடன் பெரிதும் வேறுபடுகிறது, எனவே மன ஆரோக்கியத்திற்கான பாதையும் ஒரே மாதிரி அமைவதில்லை என்பதை நாம் உணரவேண்டும். நமக்குப் பிடித்த பல சிகிச்சை முறைகள் இருக்கும் நிலையில், நம் வாழ்வு முறைக்கு ஏற்ற சிகிச்சை வடிவத்தை முயற்சிப்பதில் நாம் எப்போதும் தயங்கக்கூடாது என்பதைத் தான் இந்த உலக மனநல தினம் நம்மிடம் கூறுகின்றது.
Powered by Blogger.