விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா? – சீமான் கண்டனம்📷

விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் உள்ளிட்ட எழுவரை மலேசியக் காவல்துறை கைதுசெய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.தீவிரவாத ஒழிப்பு எனும் பெயரில் ஈழ நிலத்தில் ஓர் இன அழிப்பை நிகழ்த்தி இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்களைக் கொன்று குவித்த இந்நூற்றாண்டின் மிகக்கொடிய இனப்படுகொலைக்கு நீதிகேட்டு உலகம் முழுக்க வாழும் தமிழ் மக்கள் போராடிக்கொண்டும், அதற்காகக் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மூலம் தமிழர்களைக் குற்றவாளிகளாகச் சர்வதேசச் சமூகத்தின் கண்முன்னே நிறுத்தும் செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது.தமிழ்த்தேசிய இனத்தின் பாதுகாப்புக் காப்பரண்களாக விளங்கிய தமிழீழ விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகள் எனச் சித்தரித்து அறமற்ற நெறி பிறழ்ந்த ஆயுதப்போரின் மூலம் வல்லாதிக்கங்களின் துணைகொண்டு அவ்வமைப்பை அழித்து முடித்துவிட்டப் பிறகும், புலிகளின் பெயரைச் சொல்லித் தமிழர்களைக் கைதுசெய்வது எந்தவகையிலும் ஏற்புடையதில்லை.


விடுதலைப்புலிகளை அழித்து முடித்துவிட்டதாக அறிவித்துவிட்டப் பிறகு, புலிகள் மீதானத் தடையே தேவையற்றது எனக்கூறி அத்தடையை நாங்கள் நீக்க வலியுறுத்துவது இதனால்தான்.உலகெங்கும் வாழும் தமிழர்களுக்குக் பாதுகாப்புப் பேரரணாக விளங்கி, தமிழர்களின் அடிமை விலங்கொடிக்கப் போராடியப் புலிகளின் பெயராலேயே தமிழர்களைக் கைதுசெய்து அடிமைப்படுத்தும் இப்போக்கு எதன்பொருட்டும் சகிக்க முடியாதப் பெருங்கொடுமையாகும்.பத்தாண்டுகளைக் கடந்தும் தமிழீழத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு இதுவரை நீதிகிடைத்திடாது வஞ்சிக்கப்பட்டு அடிமை நிலையில் இருக்கிற தமிழ்த்தேசிய இன மக்களைக் கைதுசெய்து குற்றவாளிகளாக உலகத்தவரின் பார்வையில் நிறுத்த முற்படுவது மிகப்பெரும் அநீதியாகும்.


ஆகவே, விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உள்ளிட்ட எழுவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #ColomboPowered by Blogger.