அசுரன் படத்திற்கு அடுத்த எதிர்ப்பு!
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அசுரன் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கரூர் மாவட்ட அகில பாரத இந்து மகா சபா போலீஸில் புகார் அளித்துள்ளது.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ் ராஜ், கென் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் அசுரன். பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டது அசுரன் படம். சென்ற வாரம்(அக்டோபர் 4) வெளியான அசுரன் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமூக வலைதளங்களிலும் அசுரன் படத்தில் இடம்பெற்ற வசனங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அதே சமயம், சாதிய அடக்குமுறைக்கு எதிராக இப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளும், வசனங்களும் சர்ச்சையாகியும் வருகின்றன.
அசுரன் திரைப்படத்தின் வசனத்தை மாற்றவேண்டும் என்று முக்குலத்தோர் சமூகத்தை சார்ந்த அமைப்புகளிடமிருந்து வந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவற்றை நீக்கியிருக்கிறார் அசுரன் படத்தின் இயக்குநர் வெற்றிமாறன். அசுரனின் முக்கியமான இடத்தில் வரும் ‘ஆண்ட பரம்பரை’ என்ற வசனத்தை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் பீப் சவுண்டை சேர்த்திருக்கின்றனர்.
இந்நிலையில், அசுரன் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள், மாணவர்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் அமைந்துள்ளதால், அசுரன் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில பாரத இந்து மகா சபாவின் மாவட்ட பொதுச் செயலாளர் எம்.ராஜவேல், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பாண்டியராஜனிடம் நேற்று(அக்டோபர் 9) புகார் மனு அளித்தார். அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்த ‘அசுரன்' திரைப்படத்தில், ஒரு பள்ளி மாணவர் நாட்டு வெடிகுண்டு வீசுவதுபோல காட்சி இடம் பெற்றுள்ளது.
இது அரசுக்கு எதிராக பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட வழிவகுக்கும். தமிழகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக, பழைய ஜாதிய நிகழ்வுகளை வன்முறை கலந்து படமாக்கி இருப்பதைக் கண்டிக்கிறோம். மேலும், நக்சல் மற்றும் மாவோயிஸ்ட்களுடன் இயக்குநர் வெற்றிமாறன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படுகிறோம்.
எனவே, அவரிடம் விசாரணை நடத்தி, அவரது பின்புலத்தை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திரைப்படத்தை தயாரித்து வெளியிட்ட கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் தனுஷ் ஆகியோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை