விஜய் படத்துக்கு என்ன பிரச்சினை? : பிகில் படத் தயாரிப்பாளர் சிறப்புப் பேட்டி!

மின்னம்பலத்தில் வெளியான பிகில் திரைப்படத்தின் சர்ச்சைகள் குறித்து மின்னம்பலத்தில் தொடர்ந்து எழுதியிருந்தோம். அந்தத் தகவல்கள் முழுவதையும் படித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் தரப்பில் மின்னம்பலத்தை தொடர்புகொண்டு நேரில் பார்க்கவேண்டும் என்று கேட்டிருந்தனர்.
மின்னம்பலம் நிருபர் குழு தியாகராய நகரில் உள்ள ஏ.ஜி.எஸ் அலுவலகத்தில், அந்நிறுவத்தின் சி.இ.ஓ திரு. ரங்கராஜன் அவர்களை நேரில் சந்தித்தது. பிகில் திரைப்படத்தின் பிரச்சினைகள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பதாக அவர்கள் கூறியிருந்தனர்.
அவர்கள் அழைப்பின் பேரில், இன்று(அக்டோபர் 11) மதியம் 1.30 மணியளவில் தியாகராய நகரிலுள்ள அவர்கள் அலுவகத்தின் கான்ஃபரன்ஸ் ரூமில், இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த மக்கள் தொடர்பாளர் நிகில் மற்றும் மின்னம்பலம் நிருபர் குழு காத்திருந்தபோது அங்கு வந்து சேர்ந்தார் ரங்கராஜன்.
அனைவரிடமும் நலம் விசாரித்த பிறகு, “பிகில் திரைப்படம் குறித்த உங்களது சந்தேகங்கள் குறித்து கேட்பதற்கு முன்பு, இதில் மாநில அரசின் தலையீடு பற்றி நான் விளக்கிவிடுகிறேன்” என்று தொடங்கினார் ரங்கராஜன்.
“ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு எத்தனையோ தொழில்கள் இருக்கின்றன. இருந்தாலும், நாங்கள் திரைப்பட தயாரிப்புக்கு வந்ததன் அடிப்படைக் காரணம் சினிமாவின் மீதான ஈடுபாடு. கல்பாத்தி குடும்பம் முழுவதுமே சினிமாவின் மீது அலாதி பிரியம் கொண்டவர்கள். தரமான சினிமாவை உருவாக்கவேண்டும் என்பதில் சமரசம் செய்யாதவர்கள். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த நிலைப்பாட்டிலிருந்து எப்போதும் மாறாது. அப்படித்தான் ஃபுட்பால் சம்மந்தமான இந்த கதையைத் தேர்ந்தெடுத்து அதை படமாக்கியிருக்கிறோம். விளையாட்டு தொடர்பான கதையாக இருந்தாலும், குடும்பங்கள் சேர்ந்து பார்த்து போற்றக்கூடிய நெகிழ்ச்சியான தருணங்கள் பலவற்றை உள்ளடக்கிய பேக்கேஜாக வந்திருக்கிறது பிகில். இந்தப் படத்தை முடிந்த அளவு பெரியளவில் கொண்டு சேர்க்கவேண்டிய பொறுப்பில் இருக்கிறோம். இந்த நிலையில் தான் மாநில, மத்திய அரசுகளின் மூலம் பிகில் படத்துக்கு பிரச்சினை ஏற்படுவதாக சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதற்கு பதில் சொல்லவேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. நான் முன்பு சொன்னது போலவே, ஏஜிஎஸ் நிறுவனம் பல தொழில்களை செய்துவருகிறது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கக்கூடிய ஒரு புராஜெக்டில் மாநில அரசுடன் சேர்ந்து வேலை செய்துவருகிறோம். அதில், அவர்கள் கொடுக்கக்கூடிய ஒத்துழைப்பும், ஆதரவும் பாராட்ட வேண்டிய ஒன்று. நாங்கள் ஒரு வாரம் தாமதித்தாலும், உடனே எங்களைத் தொடர்புகொண்டு ஏதாவது பிரச்சினையா என்று அதிகாரிகள் கேட்கின்றனர். தொழில் செய்பவர்களுக்கு இவ்வளவு மதிப்பு கொடுக்கும் அரசாக இருக்கும்போது எங்களது தயாரிப்புத் தொழிலை பாதிக்கக்கூடிய வகையில் செயல்படுவார்களா? என யோசித்துப் பாருங்கள். மாநில அரசின் மூலம் இதுவரை எந்தப் பிரச்சினையும் வரவில்லை; இனியும் வராது” என்று பிகில் படத்தை மாநில அரசு எந்தவிதத்திலும் தடுக்கவில்லை என உறுதியாகக் கூறினார்.
ரங்கராஜன் கொடுத்த விளக்கத்தை அடுத்து சமீபத்தில் ஏற்பட்ட சென்சார் சர்ச்சை குறித்த கேள்விகளை முன்வைத்தோம். “பிகில் படத்துக்கு சென்சார் சர்டிஃபிகேட் கேட்டு மனு கொடுத்த பிறகு, தமிழக சென்சார் அதிகாரி மும்பைக்குக் கிளம்பி சென்றிருக்கிறாரே! இதை எப்படி பார்க்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு மக்கள் தொடர்பாளர் நிகில் ஒரு உதாரணம் கூறினார். “தமிழக தலைமை சென்சார் அதிகாரியாக பதவி வகித்தவர்களில் தற்போது பதவியில் இருக்கும் லீலா மீனாட்சி வித்தியாசமானவர். திரைப்படங்களை தணிக்கை செய்வதிலும், அவற்றின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதிலும் கராராக செயல்படக்கூடியவர். தணிக்கைக்காக திரைப்படம் திரையிடப்படும்போது, அந்தப் படத்துக்கு தொடர்பில்லாதவர்கள் யாரும் தியேட்டருக்குள் இருப்பதைக்கூட அனுமதிக்கமாட்டார். படம் பற்றிய தகவல்கள் எந்தவிதத்திலும் வெளியேறிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்” என்று கூறினார் நிகில். சென்சார் பிரச்சினை குறித்து, பிகில் சென்சார் சர்ச்சை: மும்பைக்குப் பறந்த அதிகாரி! என்ற பெயரில் வெளியான செய்தியில், மின்னம்பலமும் ‘நேர்மையான அதிகாரி’ என்றே லீலா மீனாட்சி அவர்களைக் குறிப்பிட்டிருந்ததை எடுத்துக் கூறியபோது, ரங்கராஜன் குறுக்கிட்டார். “அதுதான் முக்கியமானது. அவர் மிகவும் நேர்மையானவர். நாங்களும் எவ்வித ஒளிவு மறைவுமின்றி படம் எடுத்திருக்கிறோம். எனவே, எந்தக் குறுக்கு வழியிலும் திரைப்படத்தை சென்சார் செய்ய நாங்கள் விரும்பவில்லை. சென்சாருக்கான அப்ளிகேஷனைக் கொடுத்திருக்கிறோம், எங்களுக்கு முன்பு பதிவு செய்த படங்கள் எப்போது தணிக்கை செய்யப்படுகிறதோ, அதற்கு அடுத்ததாகவே பிகில் திரைப்படம் சென்சார் செய்யப்படும். சனிக்கிழமை சிறப்பாக திரையிட்டு சென்சார் பெறப்போவதாக சிலர் பேசுகின்றனர். அப்படியொரு முயற்சியை நாங்கள் எடுக்கவே இல்லை. சனிக்கிழமை சென்சார் அதிகாரிகள் படம் பார்க்கமாட்டார்கள். எனவே, திங்கள் கிழமை வரை சென்சாருக்கான நேரம் நீளும் வாய்ப்பிருக்கிறது” என்றார் ரங்கராஜன்.
அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்தி தமிழ் சினிமாவை கட்டுப்படுத்த நினைப்பவர்களை வெளிப்படுத்த மின்னம்பலம் எடுக்கும் முயற்சிகளைப் பற்றிக் கூறியதை கேட்ட ரங்கராஜன், “நானும் சில காலம் பத்திரிகைத் துறையில் இருந்திருக்கிறேன் என்பதால் எனக்கு புரிகிறது. நாங்களும் சினிமாவின் மீதான காதலினால் தான் தயாரிப்புக்கு வந்திருக்கிறோம். எனவே, நாங்கள் வெற்றிபெறுவதைப் போல மற்ற தயாரிப்பாளர்களும் வெற்றிபெறவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். பிகில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ரிலீஸாகும். அதற்கு மாநில அரசின் உதவியும் முழுமையாக கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்று கூறினார்.
பிகில் படத்துக்கு பல நெருக்கடிகள் இருக்கும் நிலையிலும், எந்தப் பிரச்சினையும் இல்லை என்கிறார் ரங்கராஜன். அப்படி எந்த நெருக்கடியும் இல்லாமல் திரைப்படங்கள் வெளிவருவது தான் தமிழ் திரையுலகத்துக்கு ஆரோக்கியமானது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.