விமர்சனம்: பெட்ரோமாக்ஸ்!

வீடு வெறும் சொத்து மட்டுமில்லை என்பதை உணர்த்தும் பாசப் பேய்களின் கதையே ‘பெட்ரோமாக்ஸ்’.

கேரளா மழை வெள்ளத்தில் தொலைந்து போன தனது பெற்றோரைத் தேடி, மலேசியாவில் இருக்கும் பிரேம் இந்தியா வருகிறார். வெள்ளத்தில் பெற்றோர் இறந்தது தெரிய வர சென்னை அருகிலுள்ள தங்கள் பூர்வீக வீட்டை விற்க முயல்கிறார். அந்த வீட்டில் தான் தமன்னா தனது குடும்பத்தினருடன் பேயாக அலைந்து வருகின்றார். அதனால், வீடு பார்க்க வருபவர்களை தமன்னா விரட்டி அடிக்கிறார்.
வீட்டில் பேய்கள் இருக்கின்றது என்ற நம்பிக்கையை உடைக்க ஒரு 4 பேர், 4 நாட்கள் தங்கிவிட்டு கிளம்பினால் போதும் வீட்டை விற்று விடலாம் என கமிஷனுக்காக முனீஷ்காந்த் பிரேமிடம் கூறுகிறார். எதிர்பார்த்ததை விட அதிக கமிஷனை தருகிறேன் என பிரேம் கூற, பணத்தேவை அதிகமிருக்கும் முனீஷ்காந்த், காளி வெங்கட், சத்யன், திருச்சி சரவணகுமார் ஆகிய 4 பேரும் அந்த வீட்டில் 4 நாட்கள் தங்க முடிவெடுக்கின்றனர். பேய் வீட்டிற்குள் நுழைந்த பின்னர் அவர்களது கதி என்ன? தமன்னா குடும்பத்தோடு பேயாக ஏன் அந்த வீட்டில் அலையவேண்டும்? அவர்கள் எப்படி இறந்தார்கள்? பிரேம் தனது பூர்வீக வீட்டை விற்க முடிந்ததா? என பல்வேறு கேள்விகளுக்கான விடை தான் பெட்ரோமாக்ஸ்.
ஒரு சினிமாவாக பெட்ரோமாக்ஸ் எப்படி?
படத்தின் கதையை ‘ஓபன்’ செய்யும் விதத்திலிருந்தே பெட்ரோமாக்ஸ் வழக்கமாக பயமுறுத்தும் பேய்ப் படம் மட்டுமில்லை என நம்மை நிம்மதியாக உட்கார வைக்கிறது. ஹாரர் படம் என்பதையும் கடந்து அடிப்படையில் மனித உணர்வுகளையும், பந்த பாசத்தின் முக்கியத்துவத்தையும் பேசும் குடும்ப படமாக வந்திருக்கிறது பெட்ரோமாக்ஸ். முதல் பாதியில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும், இரண்டாம் பாதியில் ஸ்கோர் செய்து விடுகிறது பெட்ரோமாக்ஸ்.
ஹாரர் படங்களை அதிகம் தேர்வு செய்து பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வரும் தமன்னா, தேவி 2, காமோஷி(இந்தி) ஆகிய படங்களின் தோல்விக்குப் பின் கட்டாய வெற்றிக்காக காத்திருக்கும் சமயத்தில், பெட்ரோமாக்ஸ் எனும் சரியான படம் தமன்னாவிற்கு கைகொடுக்க வந்திருக்கிறது. அமைதியும் அழகும் கொண்ட குடும்பப் பெண்ணாகவும், பின்னர் பேயாகவும் ஏற்ற கதாபாத்திரத்திற்கு, மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார் தமன்னா.
பிரதான கதாபாத்திரம் என்றாலும், படம் முழுவதுமே தமன்னா முகம் காட்ட வேண்டும் என்றில்லாமல், திரைக்கதையின் தேவைக்கேற்ப தமன்னாவை சரியான இடங்களில் பயன்படுத்தியிருப்பது இயக்குநர் கதையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது.
முனீஷ்காந்த், காளி வெங்கட், சத்யன், திருச்சி சரவணகுமார் ஆகிய 4 பேரும் வீட்டிற்குள் நுழைந்தவுடன் தான் உண்மையாகவே படம் ஆரம்பிக்கிறது. இரண்டாம் பாதியின் துவக்கத்திலிருந்து பேய்கள் இருக்கும் வீட்டில் இவர்கள் செய்யும் ரகளை சிரிக்க வைக்கிறது. முனீஷ்காந்துக்குத்தான் இந்தப் படத்தில் அதிகக் காட்சிகள். மிக அழகாக அந்த பணியை செய்திருக்கிறார் முனீஷ்காந்த். இதயத்தில் ஓட்டை இருக்கும் இவர், பயம் வந்தால் பதட்டப்படாமல் சிரிக்க வேண்டும் என டாக்டர் சொல்லியிருப்பதால், பேய்களைப் பார்த்து அவர் சிரிக்கும் இடங்களில் நம்மாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
நீண்ட நாட்களுக்குப் பின் சத்யனுக்கு நல்ல பாத்திரம் கிடைத்திருக்கிறது. மாலைக் கண் நோய், காது கேட்காது ஆகிய குறைகள் தெரியாமல் இருக்க அவர் செய்யும் ‘லூட்டி’ ரசிக்க வைக்கிறது. காளி வெங்கட் சரியாக 9 மணிக்கு குடித்து விட்டு செய்யும் அலப்பறைகள், சினிமா நடிகனாக ஆசைப்படும் திருச்சி சரவணகுமார் விதவிதமான கெட்டப்களில் தோன்றி வசனம் பேசும் காட்சிகள் என நகைச்சுவை காட்சிகள் முத்திரை பதிக்கின்றன. யோகி பாபு சில நேரமே வந்தாலும், தன்னுடைய வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.
ஒரு சில காட்சிகளை நீண்ட நேரம் நீட்டித்திருக்க வேண்டாம். குறிப்பாக இந்த நால்வரின் ‘பிளாஷ்பேக்’ காட்சி, முதல் பாதியில் வீடு விற்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் ஆகிய காட்சிகளை இன்னும் ‘ட்ரிம்’ செய்திருக்கலாம். அதன் சிக்கல், கடைசி 15 நிமிடங்களில் அனைத்தையும் சொல்லிவிட வேண்டும் என அவசரம் காட்டியதில் தெரிகின்றது.
தெலுங்கில் வெளியான ‘அனந்தோ ப்ரம்மா’ படத்தைத் தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் ரோஹின் வெங்கடேசன். நகைச்சுவைக்கு அளித்த முக்கியத்துவத்தை பாத்திர வடிவமைப்பிலும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.
படத்தின் பெரும்பான்மையான இடமும் வீட்டிற்குள்ளேயே இருந்தாலும், சலிப்பை ஏற்படுத்தாமல் படம் நகர்கிறது. டேனி ரேமண்டின் ஒளிப்பதிவு பெட்ரோமாக்ஸ் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. ஜிப்ரானின் இசையில் பாடல்களை விட பின்னணி இசை மனதில் தங்குகிறது.
குறைகளை தவிர்த்து விட்டு பார்த்தால், குடும்பத்தோடு ரசிக்கக் கூடிய நல்ல பொழுதுபோக்கு படமாக வந்திருக்கிறது பெட்ரோமாக்ஸ்.
ஈகிள்ஸ் ஐய் தயாரிப்பில் தமன்னா, முனீஷ்காந்த், யோகி பாபு, காளி வெங்கட், சத்யன், மைனா நந்தினி, பிரேம், வெங்கடேஷ், மைம் கோபி, பேபி மோனிகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இயக்கம்: ரோஹின் வெங்கடேசன். இசை: ஜிப்ரான், ஒளிப்பதிவு: டேனி ரேமண்டின், படத்தொகுப்பு: லியோ ஜான் பால்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.