எழுவர் விடுதலை பாதிக்கப்படுமா? -சீமான்!!

தன்னுடைய கருத்தால் எழுவர் விடுதலை பாதிக்கப்படாது என சீமான் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக விக்கிரவாண்டி பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது கடும் சர்ச்சையை உண்டாக்கியது. இதற்கு எதிராகக் கொதித்தெழுந்த காங்கிரஸ் கட்சியினர், சீமான் உருவப் பொம்மையை எரித்து பல இடங்களில் போராட்டம் நடத்தினர். 


சீமான் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தனது பேச்சை திரும்பப் பெற மாட்டேன் என சீமான் தெரிவித்துவிட்டார். இதற்கிடையே சீமான் இதுபோன்று பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

எழுவர் விடுதலைக்கு தடையாக இருக்கும்

சென்னையில் நேற்று (அக்டோபர் 16) செய்தியாளர்களைச் சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று விடுதலைப் புலிகள் சொல்லவில்லை. இவர்கள், உண்மையாக விடுதலைப் புலிகளோடு பழகியவர்கள் அல்ல. விடுதலைப் புலிகளோடு படம் எடுத்துக்கொண்டு, அரசியல் நடத்தக்கூடியவர்கள். இது அவருக்குக் களங்கம் என்பதைவிட, விடுதலைப் புலிகளுக்கும், ஈழத் தமிழர்களுடைய எழுச்சிக்கும் இது மிகப்பெரிய பின்வாங்கல்” என்று தெரிவித்தார்.

ஏழு தமிழர்கள் விடுதலையாக வேண்டும். குற்றமற்றவர்கள் என்று விடுதலையை எதிர்பார்த்து நிற்கும் ஏழு பேருக்கு, சீமான் பேச்சு எந்த அளவுக்கு உதவும் என்று கேள்வி எழுப்பிய கி.வீரமணி, “தேவையற்ற இதுபோன்ற பேச்சுகளை சீமான் பேசி, அதன்மூலமாகத் தான் பெரிய தலைவராக வேண்டும் என்று நினைக்கக் கூடாது. ஏழு தமிழர்களும் இன்னும் வெளியே வரவில்லை. குற்றமற்றவர்கள் அவர்கள் என்று எல்லோரும் துடிதுடித்துக்கொண்டிருக்கின்ற நேரத்தில், அதை அப்படியே தலைகீழாக்குவதற்கு இந்தப் பேச்சு பயன்படும். ஏழு தமிழர்கள் விடுதலைக்குத் தடையாக இருக்குமே தவிர, வேறு எதற்கும் பயன்படப் போவதில்லை” என்று கருத்து தெரிவித்திருந்தார்.

சீமான் பதில்

இந்த நிலையில் புதுச்சேரியில் நேற்று பேட்டியளித்த சீமான், “என்னுடைய பேச்சால் எப்படி எழுவர் விடுதலை பாதிக்கப்படும். ராஜீவ் காந்தி படுகொலைக்கும் எழுவருக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்று 28 ஆண்டுகளாகச் சொல்லி வந்தோம். ஏன் அவர்களை விடுதலை செய்யவில்லை. இப்போதும் சொல்கிறேன், எங்களுக்கும் ராஜீவ் கொலைக்கும் தொடர்பில்லை. இதை ஏற்கிறார்கள் என்றால், அதன்படி ஏழு பேரையும் விடுதலை செய்யச் சொல்லுங்கள். விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குங்கள். ஏன் அதைச் செய்யவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “என் இனத்தைக் கொன்று குவித்தது காங்கிரஸ். அதற்குத் துணை போனது திமுக. அதிமுகவும் பாஜகவும் வேடிக்கை பார்த்தது. என்னை கைது செய்தால் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டேன். ஆனால், ராஜீவ் காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன்” என்றும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.