எனக்கு சுவிஸ் வங்கியில் கணக்கா? ஸ்டாலின் பதில்!

சுவிஸ் வங்கிக் கணக்கு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

நாங்குநேரி தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற இன்னும் நான்கு நாட்களே மீதமுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அங்கு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு நாங்குநேரி பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் வங்கியில் பணம் டெபாசிட் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தியாவிலிருந்து சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்திருப்பவர்களின் பட்டியலைப் பிரதமர் பெற்றுள்ளார். அந்தப் பட்டியலில்கூட திமுக இடம்பெற்றிருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது” என்று குற்றம்சாட்டியிருந்தார்.


இந்த நிலையில் அதே நாங்குநேரி பிரச்சாரத்தில் நேற்று (அக்டோபர் 16) பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், இதற்குப் பதில் கூறியுள்ளார்.
ரெட்டியார்பட்டியில் திறந்த வேனில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஸ்டாலின், “தோல்வி பயம் வந்துவிட்டதால்தான் ஒரு முதல்வர் என்பதை மறந்து ஏதேதோ பேசிவிட்டுச் சென்றிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. என்னைத் தனிப்பட்ட முறையில் இவ்வளவு விமர்சனம் செய்கிறார் என்றால் தமிழ்நாட்டுக்கு நான்தான் முதல்வரா என்னும் சந்தேகம் எனக்குள் எழுந்துள்ளது. முதலீடு பெறுவதற்காக வெளிநாடு செல்கிறேன் என்ற பெயரில் கொள்ளையடித்த பணத்தைப் பதுக்கி வைப்பதற்காக வெளிநாடு சென்றீர்கள் எனப் பட்டவர்த்தனமாகக் கூறினேன். ஆனால், ஸ்டாலின் வெளிநாடு செல்லவில்லையா என்று கேள்வி எழுப்புகிறார். நான் வெளிநாடு சென்றேன்.


ஒகேனக்கல் கூட்டுக் குடீநீர் திட்டம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதியுதவி பெறுவதற்காகத்தான் வெளிநாடு சென்றேன். முதல்வர் தனிப்பட்ட முறையில் சென்றுவந்தால் அதுகுறித்து நான் கவலைப்பட மாட்டேன். அரசுப் பணத்தில் சென்றுவந்ததால்தான் கேள்வி எழுப்புகிறேன்” என்று தெரிவித்தார்.
“வெளிநாட்டில் சுவிஸ் வங்கியில் எனக்குப் பணம் இருப்பதாக முதல்வர் குற்றம்சாட்டுகிறார்” என்று தெரிவித்த ஸ்டாலின், “எனது பெயரில் சுவிஸ் வங்கியில் கணக்கு இருக்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிரூபித்துவிட்டால் என்ன தண்டனை அளித்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயார். அப்படி நிரூபிக்கவில்லை என்றால் நான் கொடுக்கும் தண்டனையை முதல்வர் ஏற்றுக்கொள்ளத் தயாரா? நிரூபித்துவிட்டால் நான் அரசியலை விட்டே விலகத் தயாராக இருக்கிறேன். அப்படி நிரூபிக்கவில்லை என்றால் அவர் இந்த ஊரை விட்டே ஓடிவிட வேண்டும்” என்றும் சவால் விடுத்தார்.
மேலும், “நான் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஏனெனில் நான் முதல்வர் இல்லை. அப்படி இருந்தும் அடக்கத்தோடு பேசுகிறேன். ஆனால், முதல்வர் என்பவர் அடக்கத்தோடு பேச வேண்டும். அவர் வாய்க்கு வந்தபடி ஏதேதோ பேசுகிறார்” என்றும் விமர்சித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.