தேர்தல் காலத்தில் கட்டவிழ்த்து விடப்படும் பொய்ப் பிரசாரங்களில் மலையக மக்கள் விழிப்புடன் இருந்து கொள்ள வேண்டும்!!

தேர்தல் காலத்தில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை திசை திருப்புவதில் கைதேர்ந்த மலையக அரசியல்வாதிகள் இருகின்றார்கள். அவர்களின் பேச்சில் மயங்கி விடாமல் மக்கள் விழிப்பாக இருந்து சுயமாக சிந்தித்து செயற்பட வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

   கந்தப்பளை பார்க் தோட்டம் மற்றும் பூப்பனை தோட்டங்களில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் எஸ். யோகநாதன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டங்களில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

   கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கலாத்தில் தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாபநிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றை ஐக்கிய தேசியக் கட்சியின் யானை விழுங்கி ஏப்பம் விட்டு விட்டதாக போலியான பியாசாரத்தை மேற்கொண்டிருந்தார்கள். அதயும் உண்மையென நம்பி எமது மக்கள் ஏமாந்து விட்டார்கள். ஆனால், யானை விழுங்கி விட்டதாகக் கூறியவர்கள் அதே நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதியமைச்சர் பதவியையும், மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர் பதவியையும் பெற்றுக் கொண்டு நாடகம் ஆடியதை நாம் மறந்து விட முடியாது.

   அதுமட்டுமா, எந்த அரசாங்கதியும் பிரதமரையும் குறைகூறி வாக்குகளைப் பெற்றார்களோ அதே அரசாங்கத்தின் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டபோதும், வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோதும் அரசாங்கத்துக்கு ஆதரவாகவே வாக்களித்திருந்தார்கள். அரசாங்கத்துக்கு விரோதமாக மக்களை திசை திருப்பி விடுவதிலும், அரசாங்கத்தின் சலுகைகளைப் பெற்றுக் கொண்டு சுகம் அனுபவிப்பதிலும் மலையக அரசியல்வாதிகள் கைதேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க இதை விட வேறு காரணங்கள் தேவையில்லை. அவர்களின் இரட்டை வேடம் எத்தகையது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

   பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் நாம் 5000 ரூபாவை மேலதிக பண்டிகை முற்பணமாக தேயிலை சபையின் ஊடாகப் பெற்றுக் கொடுக்க முயற்சித்த நேரத்தில் சில தொழிற்சங்கங்கள் அதற்கு முட்டுக் கட்டை போட்டு தொழிலாளர்களுக்கு துரோகம் இழைத்து விட்டன. அதற்கு எதிர்வரும் தேர்தலில் தொழிலாளர்கள் தகுந்த பதிலடியை நிச்சயம் கொடுப்பார்கள்.

   அதேபோல், இந்த் முறை ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் புளுகு மூடைகளை அவிழ்த்து விட்டு தொழிலாளர்களை திசை திருப்பி அவர்களின் வாக்குகளை சூறையாடும் வகையில் எத்தகைய பொய்யை சொல்லி  தொழிலாளர்களை ஏமாற்றலாம் என்று சிலர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இதில் ஏமாந்து விடாமல் தொழிலாளர்கள் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டும்.

   அதேநேரம், தமிழ் முற்போக்கு கூட்டணி இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்து வருகின்றது. சஜித் பிரேமதாஸ இது வரை எந்த விதமான ஊழல் மற்றும் குற்றசாட்டுகள் இல்லாத ஒரு தூய்மையான உள்ளம் கொண்ட மனிதர் ஆவார். மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக எமது தலைவர் அமைச்சர் திகாம்பரம் கோரிக்கைகளை அவரிடம் முன்வைத்துள்ளார். அதன் அடிப்படையில் அவருக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளோம். அவர் ஆட்சிக்கு வரும்போது நாட்டுக்கும் மக்களுக்கும் சுபிட்சமான எதிர்காலம் நிச்சயம் அமையும். எனவே, ஜனாதிபதித் தேர்தலில் “அன்னம்” சின்னத்துக்கு வாக்களித்து சஜித் பிரேமதாஸவை அமோக வெற்றிபெற வைக்க வேண்டும் என்றார்.
Soma Sridharan

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.