அமெரிக்காவுக்கு வடகொரியா நிபந்தனை!

அமெரிக்காவுடன் அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக பேசுவதற்கு வடகொரியா புதிய நிபந்தனையை விதித்துள்ளது.

அசர்பைஜான் நாட்டின் தலைநகரான பாகுவில் நடந்த அணிசேரா இயக்க மாநாட்டில், வடகொரியா நாடாளுமன்ற சபாநாயகர் சோ ரியாங் ஹே உரையாற்றியிருந்தார்.
அவர் கூறுகையில், “அணு ஆயுதங்களைக் கைவிடுவது பற்றி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார். ஆனால் அமெரிக்கா, எங்கள் மீதான விரோத நிலைப்பாட்டை கைவிட வேண்டும். எங்கள் மீதான இராணுவ, அரசியல் அச்சுறுத்தல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும். அதன் பின்னர்தான் பேச முடியும்” என்று குறிப்பிட்டார்.
ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை மீறி அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் வடகொரியா சோதித்து வந்தது. இதன் காரணமாக அந்த நாட்டின் மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே முரண்பாடு இருந்து வருகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னும் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். இதில், அணு ஆயுதங்களை கைவிடுவது பற்றி தொடர்ந்து பேச இரு தலைவர்களும் முடிவு எடுத்தனர்.
அதைத் தொடர்ந்து வியட்நாமில் 2ஆவது முறையாக இரு தலைவர்களும் மீண்டும் சந்தித்துப் பேசினர். அந்த பேச்சு வார்த்தை இணக்கமாக நடைபெறாமல் முறிந்தது.
வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட்டால்தான் அந்த நாட்டின் மீதான தடைகள் விலக்கப்படும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது.
ஆனால் பகுதி அளவாவது பொருளாதாரத் தடைகளை விலக்க வேண்டும் என்று வடகொரியா கோரி வருகிறது. இதன்காரணமாக இரு தரப்பு தொடர் பேச்சு வார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.