கூல் கேப்டனின் சூப்பர் கூல் மகள்!
தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறப் போகிறாரா என்ற கேள்வியே கிரிக்கெட் பிரியர்கள் அனைவருக்கும் பெரும் வருத்தத்தை அளிக்கும் என்றால் அதைக் கொண்டாடப்போகும் ஒரே நபர் அவரது மகள் ஸிவாவாகத்தான் இருக்க முடியும்.
இந்திய கிரிக்கெட் வீரர்களுள் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமாகிய மகேந்திர சிங் தோனிக்குப் பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தமிழக கிரிக்கெட் பிரியர்கள் தங்கள் ‘தல’ தோனி மீது மட்டுமின்றி அவரது குடும்பத்தின் மீதும் தங்கள் பாசத்தைப் பொழிந்து வருகின்றனர். அதிலும் தனது மகளுடன் இணைந்து தோனி செய்யும் சேட்டைகளுக்கு என்றே தனியாக ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன்னர் தோனி தனது மகள் ஸிவாவுக்குத் தமிழ் வார்த்தைகளைக் கற்றுக்கொடுக்கும் வீடியோவும் கட்டிலில் படுத்திருக்கும் தோனியிடம் அவரது செல்ல மகள் ஸிவா, “எப்படி இருக்கீங்க?” எனத் தமிழில் கேட்க, அதற்கு அவர் “நல்லா இருக்கேன்” எனப் பதில் கூறுவதுமான மற்றொரு வீடியோவும் வெளியாகி இணையதளத்தில் வைரலானது.
இந்த நிலையில் அதுபோன்ற தோனி மற்றும் ஸிவாவின் கியூட் வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்திய ராணுவத்தில் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த நிசான் NW73 பிக்கப் வாகனத்தை சில தினங்களுக்கு முன்னர் தோனி வாங்கியிருந்தார். அந்த ஜீப்பை தோனியுடன் இணைந்து ஸிவா கழுவும் வீடியோவைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டார். அதன்கீழ், “இந்த சிறிய உதவிபோதும். பெரிய ஜீப் நீண்ட தூரம் பயணிக்கும்” என்று தன் மகள் மீதான பாசத்தை உணர்த்தி பதிவிட்டுள்ளார்.
அதே போன்று ஸிவாவின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து மற்றொரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் கண்களை மூடி சோர்வாக அமர்ந்திருக்கும் தோனிக்கு ஸிவா தோள்களில் மசாஜ் செய்து கொடுக்கிறார்.
இவ்வாறு தந்தையும் மகளும் ஒருவருக்கொருவர் அன்பைப் பொழியும் வீடியோக்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கருத்துகள் இல்லை