சொல்லு உனக்குப் பின்னாடி யாரு இருக்கா? விஷாலின் ஆக்ஷன் !
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் ஆக்ஷன் திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று (அக்டோபர் 27) மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது
‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ திரைப்படத்தைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கியிருக்கும் ஆக்ஷன் திரைப்படத்தில் விஷால் - தமன்னா நடித்துள்ளனர். மத கத ராஜா, ஆம்பள திரைப்படங்களைத் தொடர்ந்து சுந்தர்.சியுடன் விஷால் இணையும் மூன்றாவது திரைப்படம் ஆக்ஷன்.
பெயருக்கேற்ற விதத்தில் டிரெய்லர் தொடங்கியதிலிருந்து ஆக்ஷன் காட்சிகளே அதிகமாக உள்ளது. கதாநாயகி தமன்னா மாடியின் மேல் இருந்து குதிப்பது போன்ற ஸ்டண்ட் காட்சிகளில் துணிச்சலுடன் நடித்திருக்கிறார். இரு நாடுகள் சம்பந்தப்பட்ட சர்வதேச பிரச்சினை குறித்து ஆக்ஷன் திரைப்படத்தின் கதை இருக்கும் என டிரெய்லரின் மூலம் தெரிகிறது. ‘சொல்லு, உனக்குப் பின்னாடி யாரு இருக்கா? இது எல்லாம் யாரோட வேல’ என்று விஷால் கேட்கும் காட்சியில் மட்டும் தமிழ் ராக்கர்ஸ் ஞாபகத்துக்கு வந்து செல்கிறது.
விஷாலின் திரை வாழ்க்கையில் நிச்சயம் இது ஒரு முக்கியமான படமாக அமையும் எனத் தெரிகிறது. சுந்தர்.சி இயக்கத்தில் இப்படி ஒரு படமா என்று வியக்கும் அளவுக்கு முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளுடன் டிரெய்லர் அமைந்துள்ளது. நேற்று மாலை டிரெய்லர் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஹிப் ஹாப் தமிழா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆர்.ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். வரும் நவம்பர் மாதம் படம் ரிலீஸாக உள்ளது.
கருத்துகள் இல்லை