அஜித் 60: ஹீரோயின் இல்லாத படம்?
அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் 60ஆவது திரைப்படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூரின் நிறுவனம் தயாரிக்கிறது. ஸ்ரீதேவி நீண்ட காலத்துக்குப் பிறகு திரையில் தோன்றிய, இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துக் கொடுத்தார் அஜித். அப்போதே, எங்கள் நிறுவனத்துக்கு இரண்டு படங்கள் நடித்துக்கொடுக்கவேண்டும் என ஸ்ரீதேவி கேட்டுக்கொண்டபோது சம்மதித்தார் அஜித்.
காலங்கள் ஓடின, ஒரு நிகழ்ச்சிக்காக வெளிநாடு சென்றிருந்தபோது எதிர்பாராத விதமாக அவர் மரணமடைந்துவிட்டார். அதன் பிறகும் காலங்கள் ஓடின. ஸ்ரீதேவி மறைந்துவிட்டாலும், அவருக்குக் கொடுத்த வாக்கை காப்பாற்ற அதிகாரபூர்வமாக இரண்டு படங்களில் நடித்துக் கொடுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் அஜித். அதன்படி, இந்தியில் மாபெரும் வெற்றிபெற்ற ‘பிங்க்’ திரைப்படத்தை தமிழில் அஜித்தை வைத்து, தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் ரீமேக் செய்தனர். அந்தப் படமும் தமிழில் வெற்றிபெற்றதால், காலம் தாழ்த்தாமல் அடுத்த படத்தை வினோத்தை வைத்து எடுப்பதில் தீவிரமானது போனி கபூரின் ஜீ ஸ்டூடியோஸின் நிறுவனம்.
அதன்படி அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கும் திரைப்படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டு படபூஜையை நடத்தியிருக்கிறார்கள்.
நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய டீம் அப்படியே வலிமை திரைப்படத்திலும் பணியாற்றுகிறது. யுவன் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்தில் ஹீரோயின் இல்லை என்கின்றனர் படக்குழுவினர்.
எச்.வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் இடம்பெற்ற ஹீரோயின் கதாபாத்திரன் வலிந்து திணிக்கப்பட்ட ஒன்று என்ற விமர்சனத்தை மட்டுமே அதிகம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை