ஏன் சம்பந்தர் ஐயா ஒருமுறை ஜேவிபியுடன் பேசிப் பார்க்க கூடாது?

இவர் அனுர குமார திசநாயக்கா. இவர் ஜேவிபி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்.

இவரிடம் “உங்களுக்கு அயர்லாந்தில் ஒரு சொகுசு பங்களா இருக்குதாமே?” என்று ஒரு நிருபர் கேட்டபோது கொஞ்சம்கூட தயக்கமின்றி “ அப்படியா? அது எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து கூறுங்கள். அதை உங்களுக்கே தந்துவிடுகிறேன்” என்று பதில் அளித்தார்.

உண்மையில் இப்படி ஒரு பதிலை அளிக்கக்கூடிய தமிழ் தலைவர் யாராவது இருக்கிறார்களா என தேடிப் பார்க்கிறேன். தமிழ் தலைவர்கள் எல்லோரும் ஒன்றல்ல இரண்டு மூன்று பங்களாக்களை வைத்திருக்கிறார்கள்.

இவரை 1998ல் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியிருந்தது. பொதுவாக என்னை சந்திக்கும் சிங்களவர்கள் எல்லாரும் புலிகள் பற்றியே கேட்பார்கள். ஆனால் இவர் என்னுடன் பேசியபோது ஒருமுறைகூட புலிகள் பற்றி கேட்காதது எனக்கு ஆச்சரியம் தந்தது.

அதைவிட ஆச்சரியம் என்னவெனில் அவர் என்னுடன் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் விவசாயம் பற்றியே பேசினார். அப்போது எனக்கே தெரியாத பல விபரங்களை புள்ளிவிபரங்களுடன் கூறிக் கொண்டிருந்தார்.

உண்மையில் தமிழ் விவசாயிகள் பற்றி  இந்தளவு விபரங்கள் எமது தமிழ் தலைவர்களுக்கே தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே.

கோத்தபாயா ராஜபக்சா தான் பதவிக்கு வந்தால் அடுத்த நாளே சிறையில் இருக்கும் படை வீரர்களை விடுதலை செய்வேன் என்கிறார்.

ஆனால் அனுரா தான் பதவிக்கு வந்தால் உடனடியாக எவ்வித நிபந்தனையும் இன்றி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் என்கிறார்.

அதுமட்டுமல்ல காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்படும் என்றும் இடம்பெயர்ந்தோரின் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட்டு கையளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

ஆனால் இங்கு வருத்தத்திற்குரிய விடயம் என்னவெனில் தமிழ் மக்களுக்கு எந்த வாக்குறுதியும் அளிக்காத சஜித் மற்றும் கோத்தாவுடன் பேச தயாராக இருக்கும் சம்பந்தர் ஐயா அனுராவுடன் பேசுவதற்கு தயாராக இல்லை என்பதே.

“ரணிலுடன் பேசினோம் - ஏமாற்றிவிட்டார். மைத்திரியுடன் பேசினோம் - ஏமாற்றிவிட்டார்” என்று கூறும் சம்பந்தர் ஐயா ஒருமுறைகூட ஜேவிபி யுடன் பேசுவதற்கு தயார் இல்லை.

இது ஏன் என்று கேட்டால் “ஜேவிபி யும் சிங்கள கட்சிதான். அவர்களையும் நம்ப முடியாது” என்கிறார்கள்.

சரி, ஜேவிபி யும் ஏமாற்றினால், தமிழ் மக்கள் ஜேவிபிக்கும் சந்தர்ப்பம் கொடுத்தார்கள். ஆனால் ஜேவிபியும் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது என்று வரலாற்றில் இடம் பெறும் அல்லவா?

அதுமட்டுமல்ல, அனுர பதவிக்கு வந்தாலும் சரி வரவிட்டாலும் சரி இதன்மூலம் அனுரவை ஆதரிக்கும் சிங்கள மக்களின் மனதில் தமிழ் மக்கள் குறித்த ஆதரவு மனப்பான்மை உருவாகும் அல்லவா?

ஏன் சம்பந்தர் ஐயா ஒருமுறை ஜேவிபியுடன் பேசிப் பார்க்க கூடாது?
Powered by Blogger.