நான் சொல்கிறேன், ஜெகன் செய்கிறார் : சீமான்!

ஆந்திராவில் காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்படும் என்று ஜெகன் மோகன் ரெட்டியின் அறிவிப்புக்கு சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 13 நாட்களே உள்ளதால் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிடவில்லை. அதிமுக, திமுகவை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் நாங்குநேரியில் ராஜநாராயணன் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் நாங்குநேரி நாம் தமிழர் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று (அக்டோபர் 8) மூலக்கரைப்பட்டி திருவள்ளுவர் திடலில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “உலகத்திலேயே பொழுதுபோக்கிற்கும் கேளிக்கைக்கும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்த இனம் தமிழினம்தான். நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைக்கிறார்கள். நல்லக்கண்ணுவை தோற்கடித்துவிட்டு ரஜினிகாந்தை ஜெயிக்க வைக்க வேண்டும் என நினைக்கும் கூட்டத்தை என்ன செய்ய முடியும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சினிமா திரையிடப்படுகிறது. மற்ற மாநிலங்களில் தமிழகத்தைப் போலதான் நடிகர்களை அரசியலுக்கு அழைக்கிறார்களா” என்று கேள்வி எழுப்பி, தலைவனை திரையில் தேடுவதை நிறுத்துங்கள். மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபடும் தலைவனை தரையில் தேடி கண்டுபிடியுங்கள் என்று வலியுறுத்தினார்
.
ஜெகன்மோகன் ரெட்டி செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து பேசிய சீமான், “நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி செயல்படுத்திவருகிறார். அனைவருக்கும் விடுமுறை உள்ளது. ராணுவ வீரனுக்குக் கூட இரண்டு மாத விடுமுறை உள்ளது. ஆனால், காவல் துறைக்கு இல்லை. அவர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என நான் பலமுறை கூறிவிட்டேன். இதனை ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி செயல்படுத்துகிறார். என்னுடைய புத்தகம் அவர் கைகளில் உள்ளது போல” என்று குறிப்பிட்டார்.
தமிழ் தேசிய கொள்கைகளை பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் சீமான், தமிழகத்தில் வசிக்கும் மற்ற மாநிலத்தவர்களை தெலுங்கர், கன்னடர் என்று விமர்சித்துப் பேசிவருகிறார். இந்த நிலையில் தெலுங்கு பேசும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் அறிவிப்புகளை பாராட்டித் தள்ளியுள்ளார். மேலும், தெலுங்கு மட்டுமே தெரிந்த ஜெகன் மோகன் ரெட்டி, தமிழ் மொழியில் எழுதப்பட்ட நாம் தமிழர் கட்சியின் அறிக்கைகளை படித்திருப்பார் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்புகிறார்கள்.
மேலும் நாங்குநேரி பொதுக்கூட்டத்தில், “நாம் தமிழர் கட்சியின் கைகளுக்கு ஒருகாலத்தில் அதிகாரம் வரும். அப்போது, தமிழ் படித்தால்தான் தமிழ்நாட்டில் வேலை என்ற சட்டம் வரும்” என்று குறிப்பிட்ட சீமான், “எங்களிடம் பணம் இல்லை. எங்களது நிகழ்வுகளை காட்டவும் ஊடகங்கள் இல்லை. அதற்கெல்லாம் கவலைப்படாமல் தொடர்ச்சியாக போராடிக்கொண்டிருக்கிறோம். தேர்தல்களை நாம் தமிழர் கட்சி தேர்தலாக மட்டுமே பார்க்கவில்லை. மாறுதலாகவும் பார்க்கிறோம். அதனால்தான் பல கட்சிகளும் இடைத் தேர்தலில் போட்டியிடாதபோது நாங்கள் மட்டும் போட்டியிடுகிறோம்” என்று அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுவதற்கான காரணங்களை விளக்கினார்.
Powered by Blogger.