கூட்டணியை ஒதுக்கி ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை !

ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாட்டைத் தட்டிக்கேட்கும் தகுதியும் துணிவும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு உள்ளதாக கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.


தமிழர் விடுதலைக் கூட்டணியால் ஊடகங்களுக்கு வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியை ஒதுக்கி வைத்து முன்னெடுக்கப்பட்ட ஏதேனும் நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளதா எனவும் வீ.ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டணியை ஒதுக்கும் தமிழ் அமைப்புகள் இந்த விடயத்தை சிந்திக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பதவி மோகம் கொண்ட சிலரின் திட்டமிட்ட துரோகம் கலந்த சதியால் 2004 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி முடக்கப்பட்டதாகவும் வீ.ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.

இதேவேளை, 1972 ஆம் ஆண்டு தொடக்கம் 2004 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில் நடத்தப்பட்ட தேர்தல்களில் பெரும்பான்மையான தமிழர்கள் உதய சூரியன் சின்னத்திற்கே வாக்களித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழர் விடுதலைக் கூட்டணியை ஒதுக்கி வைத்துவிட்டு, ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

2004 ஆம் ஆண்டு இதேபோல் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மிக உக்கிரமாக செயற்பட்டமையால், ஜனநாயக விழுமியங்ளை மீறி, தேர்தல் விதிமுறைகளை மீறி ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக விருப்பு வாக்குகளை சிலருக்கு பெற்றுக் கொடுத்ததாகவும் வீ.ஆனந்தசங்கரி குற்றஞ்சாட்டியுள்ளார். இதே செயற்பாட்டை தற்போதும் மாணவர் ஒன்றியம் முன்னெடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் அத்துமீறல்கள் மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை ஜனநாயகத்திற்காக போராடும் அமைப்பினால் மாத்திரமே தட்டிக்கேட்க முடியும் என்பதை பல்கலைக்கழக மாணவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புபவதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணி சுட்டிக்காட்டியுள்ளது.

தெரிந்தோ, தெரியாமலோ அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு பல்கலைக்கழக மாணவர்களும் ஏனைய அமைப்புகளும் செயற்படுவதாக கூட்டணியின் செயலாளர் நாயகம் கூறியுள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி பலமடைவதை இந்த அமைப்புகளும் அரசாங்கமும் விரும்பாததன் காரணத்தினாலேயே தமது கட்சி திட்டமிட்டு ஒதுக்கப்படுவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியால் ஊடகங்களுக்கு வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில், கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.