பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றம்!!

தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வுகளை வழங்க வேண்டும் என்பதனை விட இதனை சொன்னால் தாங்கள் பகிரங்கமாக தேர்தலில் தாக்கப்படுவோம் தாங்களுக்கு எதிராக அமைந்துவிடும் என்ற பயத்தில் எல்லா வேட்பாளர்களும் ஒழிந்து விளையாடும் நிலைமையே காணப்படுகின்றது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.


யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களுக்கு  மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினை சார்ந்த விடயம் எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை.

அதில் தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வு தொடர்பிலோ புதிய அரசியலமைப்பு பற்றியோ தெளிவாக எவையும் குறிப்பிடப்படவில்லை.

குறிப்பாக தெற்கில் தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வுகளை வழங்க வேண்டும் என்பதனை விட இதனை சொன்னால் தங்கள் பகிரங்கமாக தேர்தலில் தாக்கப்படுவோம் தங்களுக்கு எதிராக அமைந்துவிடும் என்ற பயத்தில் எல்லா வேட்பாளர்களும் ஒழித்து விளையாடும் நிலைமையே காணப்படுகின்றது.

தமிழர்களின் தீர்வுகள் தொடர்பில் குறிப்பிடப்படாமல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவர் வெற்றி பெறுவாராக இருந்தால் அவர் சிங்கள தேசத்தின் ஜனாதிபதியாக மட்டுமே செயற்படுவார்.

தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகள் அல்லாத ஏனெனில் கோட்டாபயவுக்கு ஆதரவு கொடுக்கும் தரப்பின் சிறு வாக்குகள் கிடைக்கலாம் ஆனால் அவர்கள் வாக்களித்து வந்தால் கூட வேட்பாளர் வென்றால் அது தனி சிங்கள ஜனாதிபதியாகவே இருப்பார். தமிழ் மக்களின் மனங்களை வென்றவராக இருக்க மாட்டார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இப்போது அல்ல தேர்தலில் போட்டியிட ஆரம்பித்த போதே தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமல் தான் ஜனாதிபதி தேர்தலிலே போட்டியிடுவேன் என்று கூறியிருக்கின்றார். ஆகவே அந்த அடிப்படையில்தான் அவருடைய தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கின்றதோ என்று புரியவில்லை.

எனினும் தாம் ஜனாதிபதியானால் நிர்வாக விடயங்களை மட்டுமே கவனிப்பேன் அரசியல் விடயங்களை மஹிந்த ராஜபக்ஷவே கவனிப்பார் என்றும் கூறியுள்ளார்.

ஆகவே சிலவற்றை வெளிப்படையாக கூறாமல் தவிர்த்துக் கொண்டாரா என்று அவருக்குத்தான் தெரியும். தமிழ்க் கட்சிகளினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என இரண்டு பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களும் கூறியிருப்பதாக அறிகின்றேன்.

எனினும் நாம் திட்டமிட்டபடி அவர்களுடன் பேசுவோம். அதன் பின்னர் அடுத்து என்ன செய்வது என்று அனைவரும் கூடி முடிவெடுப்போம். தற்போது நாம் இணைந்து பலமான அணியாக செயற்படுவதால் தான் பேரம் பேசுவதிலும் பலமான தன்மை ஏற்பட்டுள்ளது.

ஆனால் இதில் இருந்து வெளியேறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்த முயற்சியிலும் இந்தியாதான் பின்னணி என்று கூறுவது நகைப்புக்குரிய விடயமாகும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு எடுத்ததுக்கு எல்லாம் இந்தியா பின்னணி, இந்தியாவின் ஆட்கள் என்று கூறுவது வழக்கமாகிவிட்டது.

எமது நாட்டினை பொறுத்தவரையில் அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களை பொறுத்தவரையில் அயல் நாடான இந்தியாவினை பகைத்துக்கொண்டு எமக்கான தீர்வுக்கு எப்போதும் சாத்தியமில்லை. எனவே அவர்களின் ஆதரவு தேவை அதற்காக இந்த முயற்சிக்கும் இந்தியாதான் பின்னணி என கூறுவது நகைப்புக்குரியது என்றார்.

(நிருபர் பிரதீபன்)
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.