ஏனையோரின் நலன்கள் தொடர்பாகவும் கவனஞ் செலுத்த வேண்டும் என தீபாவளி எடுத்தியம்புகிறது!!

"மானிடம் மேலோங்கி, சமாதானம் நிலைபெற்று மனிதன் தனது தனிப்பட்ட அபிலாசைகள் தொடர்பாக மாத்திரம் கவனஞ் செலுத்தாது, ஏனையோரின் நலன்கள்; தொடர்பாகவும் கவனஞ் செலுத்த வேண்டும் எனத் தீபாவளி எடுத்தியம்புகிறது."


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளர்.

பிரதமர் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:

இருளிலிருந்து வெளிச்சத்திற்கும், தீமையிலிருந்து நன்மைக்கும் மீண்டு, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று அனைத்து அம்சங்களிலும் தனிப்பட்டரீதியிலும், பொது சமூகரீதியிலும் ஆன்மீக விடுதலைக்கான போராட்டத்தை வெற்றிகொள்வதனை அடையாளப்படுத்தும் வகையில் உலக முழுவதும் இந்து பக்தர்கள் விளக்குகளை ஏற்றி, சமயச் சடங்குகளில் ஈடுபட்டு தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

இந்துக்களுக்கு கேடு விளைவித்த நரகாசுரனைத் தோற்கடித்த தினம் மற்றும் இராமன் வனவாசத்திலிருந்து மீண்டு சீதையுடன் மீண்டும் அயோத்திக்கு வருகை தந்தமை என்பன விசேடமாக தீபாவளி தினத்தில் நினைவுபடுத்தப்படுகின்றன. இந்த அனைத்து புராணக் கதைகள், சம்பிரதாயங்கள், சமயச் சடங்குகள் ஊடாகவும் மனிதனிடமும் சமூகத்திலும் காணப்படும் தீமை எனும் இருளை விரட்டியடித்து நன்மை எனும் வெளிச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே முக்கியமாக வலியுறுத்தப்படுகிறது.

தீபாவளிச் சடங்குகள் ஊடாக தன்னிடமுள்ள அகங்காரம், பேராசை, பொறாமை போன்ற தீய எண்ணங்களை நீக்கி நலன்மிகுந்த அம்சங்களை உருவாக்கிக்கொள்ள முடியும் என்பது இந்து சமய நம்பிக்கையாகும். மானிடம் மேலோங்கி, சமாதானம் நிலைபெற்று மனிதன் தனது தனிப்பட்ட அபிலாசைகள் தொடர்பாக மாத்திரம் கவனஞ் செலுத்தாது, ஏனையோரின் நலன்கள்; தொடர்பாகவும் கவனஞ் செலுத்த வேண்டும் எனத் தீபாவளி எடுத்தியம்புகிறது.

பிளவுபட்டுப் பிரிந்து செல்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருப்பினும், தமது உள்ளங்களிலுள்ள ஞானத்தின் ஒளி அகன்று விடாது பேணிச் சென்று ஐக்கியத்துடனும், சமாதானமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்வது நம் அனைவரினதும் பொறுப்பு என்பதை நினைவுபடுத்துவதுடன், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் சகோதர இந்து மக்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.