ஜொலித்த மாமல்லபுரம்: மோடி-ஜின்பிங் சந்திப்பு ஹைலைட்ஸ்!

இந்தியா , சீனா இடையேயான முறைசாரா உச்சி மாநாடு மாமல்லபுரத்தில் இன்று (அக்டோபர் 12) நடைபெறுகிறது. இதற்காகப் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் தமிழகம் வந்துள்ளனர்.

முதலில், நேற்று மதியம் 12 மணியளவில் சென்னை வந்த மோடி அங்கிருந்து கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்குச் சென்றார். சரியாக மதியம் 1.48 மணிக்குச் சீன அதிபரின் ஏர் சீனா விமானம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தது. அப்போது, தமிழக பாரம்பரிய முறைப்படி அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மூலம் சீன அதிபரை வரவேற்றனர். மேள தாளங்களுடன், கரகம், பரத நாட்டியம் என அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளைச் சிறிது நேரம் கண்டு களித்த சீன அதிபர் அங்கிருந்து கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஓட்டலுக்குச் சென்றார்.
சிறிய ஓய்விற்கு பின்னர் மாலை 4மணியளவில் மாமல்லபுரம் புறப்பட்டுச் சென்றார். அங்கு தமிழரின் உடையான வேட்டி சட்டை அணிந்து சீன அதிபரை பிரதமர் மோடி வரவேற்றார். அப்போது மாமல்லபுரத்தில் இருந்த அனைத்து சுற்றுலா இடங்களையும் இரு நாட்டு தலைவர்களும் சுற்றி பார்த்தனர். சிற்பங்கள் குறித்து சீன பிரதமருக்கு மோடி விளக்கினார்.
வெண்ணை உருண்டை அருகில் கைகளை உயர்த்திக் கோர்த்து ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதன் பிறகு இளநீர் பருகியபடியே இருவருக்கும் இடையே சிறிது நேரம் பேச்சுவார்த்தை நடந்தது.
ஜொலித்த கடற்கரை கோயில்
இதன்பின்னர் இருள்கட்டும் நேரத்தில் மோடியும், சீன அதிபரும் அலங்கார விளக்குகளால் ஜொலித்து கொண்டிருந்த கடற்கரை கோயிலுக்குச் சென்றனர். அப்போது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் முக்கிய அதிகாரிகளை மோடி, சீன அதிபருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து கடற்கரை கோயிலில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை இருவரும் கண்டுகளித்தனர். இதற்காக அங்கு இரண்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு அரங்கத்தில் பிரதமர் மோடியும், ஜீ ஜின்பிங்கும் அமர்ந்து பேசியவாறே அருகில் உள்ள மற்றொரு அரங்கத்தில் நடைபெற்ற கலாஷேத்ரா குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சியையும், நாடகத்தையும் பார்த்து ரசித்தனர். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு கலை நிகழ்ச்சிகள் குறித்து சீன மொழியில் எடுத்துரைக்கப்பட்டது.
தமிழகத்தின் பாரம்பரிய நிகழ்ச்சியான பரதம், கேரளாவின் கதகளி, என இந்தியாவின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் அணிவகுத்தன. இதனைப் பிரதமர் மோடி அவர் அமர்ந்திருந்த சேரில் தாளம் போட்டவாறே கண்டு ரசித்தார். அப்போது ராமாயண காட்சிகளை கலைஞர்கள் நடன வடிவில் அரங்கேற்றினர்.
வாலி வதை படலம், ராமர் சேது பாலம் அமைக்கும் காட்சிகளை நடனக் கலைஞர்கள் நடித்துக் காட்ட, அப்போது இதுகுறித்து சீன அதிபருக்கு, மோடி எடுத்துரைத்துள்ளார். அனைத்து நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களும் நாட்டிய கலைஞர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து நினைவுப் பரிசாகச் சீன அதிபருக்கு மோடி, நாச்சியார் கோயில் அன்னம் விளக்கு. நடனமாடும் சரஸ்வதி ஓவியம் மற்றும் தமிழ்நாடு கைவினை பொருட்கள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வழங்கினார்.
அதன் பின்னர் இரவு உணவு விருந்து நடைபெற்றது. இதில் தென்னிந்திய உணவு வகைகளுக்கு, குறிப்பாகத் தமிழக உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தக்காளி ரசம், அரைத்துவிட்ட சாம்பார், கடலை குருமா, கவனரிசி அல்வா போன்றவையும், செட்டிநாடு உணவு வகைகள் என சைவ, அசைவ உணவுகளும் பரிமாறப்பட்டது. 7 மணியளவில் தொடங்கிய விருந்து இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றதால் , ஐடிசி ஓட்டலுக்கு ஜீ ஜின்பிங் வருவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.இரவு 10.30 மணியளவில் கிண்டி திரும்பியுள்ளார் ஜீ ஜின்பிங். இந்நிலையில் இன்று இரு நாட்டு தலைவர்களும் கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
நேற்றைய சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆங்கிலம், தமிழ், சீன மொழிகளில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், மாமல்லபுரம், இந்தியாவின் பேரழகு வாய்ந்த இடங்களுள் ஒன்று. உயிர்த்துடிப்பு மிக்க ஊர். வாணிபம் மற்றும் ஆன்மிகத்துடன் தொடர்பு கொண்டிருந்த இடம். தற்போது உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. யுனெஸ்கோ பாரம்பரியத் தலங்களுள் ஒன்றான இந்தக் கவின் மிகு இடத்தை, அதிபர் ஜீ ஜின்பிங்குடன் சுற்றிப் பார்த்து, நேரத்தைச் செலவிட்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மாமல்லபுரத்தில் காணவேண்டிய பிரம்மாண்டமான இடங்களுள் ஒன்று அர்ஜுனன் தவம். இது மகாபாரதக்கால வாழ்க்கையை உயிர்ப்பித்து காட்டுகிறது.
பல்லவர் காலத்துச் சிற்பக்கலையின் சிறப்பை, குறிப்பாக இயற்கையையும் விலங்குகளையும் அர்ஜுனன் தவம் காட்சிப்படுத்துகிறது. அதிபர் ஜீ ஜின்பிங்கும் நானும் அதி அற்புதமான ஐந்து ரதங்களைக் கண்டு களித்தோம். ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு தர்ம ராஜன் ரதம், பீமன் ரதம், அர்ஜுனன் ரதம், நகுலன்- சகாதேவன் ரதம் மற்றும் திரௌபதி ரதம் ஆகியவை ஆகும்” என்று மாமல்லபுரத்தின் பெருமையை வெளிப்படுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.