ஞானசாரதேரரின் திமிர்த்தனமான கருத்துக்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை!
அவரது கருத்து குறித்து ஈபிஆர்எல்எவ்வின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விபரம் வருமாறு:
அரசியல் சாசனத்தின் பிரகாரம் ஜனநாயக சோசலிச குடியரசாக இலங்கை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது சிங்கள பௌத்த நாடு என்று எந்தவொரு சட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை.
இலங்கை என்பது பல மொழி, மத, இனங்களைக் கொண்டநாடு என்றும் வடக்கு - கிழக்கு தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுப் பூர்வமான வாழ்விடம் என்றும் 1987ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்டுள்ள இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் முதலாவது வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியும் இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் ஏற்றுக்கொண்டே கையொப்பமிட்டனர். ஞானசாரதேரரின் திமிர்த்தனமான கருத்துக்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை.
விஜயன் இந்த நாட்டிற்கு வந்தபொழுது இந்தநாட்டில் தொன்மமான ஒரு நாகரிகம் இருந்ததென்பதும், இங்கு இயக்கர், நாகர் என்னும் இனக்குழுமங்கள் இருந்ததாகவும் தீவின் நான்கு பகுதிகளிலும் சிவாலயங்கள் இருந்ததாகவும் சிங்கள வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
அசோகச் சக்கரவர்த்தியின் காலத்தில் அவரது மகளான சங்கமித்திரையின் மூலமாகவே இலங்கைக்கு பௌத்தம் கொண்டுவரப்பட்டது. அவ்வாறான பௌத்தம் வருவதற்கு முன்னர், இங்கு சிவாலயங்கள்தான் இருந்தன என்பது வரலாற்றாசிரியர்களும் ஆய்வாளர்களும் ஏற்றுக்கொண்ட உண்மை.
அதேபோல் சிங்கள மொழியும் ஆறாம் நூற்றாண்டு காலத்திலேயே தோற்றம் பெற்றது. அதன் பின்னரே தமிழ், பாளி, சமஸ்கிருதம் ஆகியவற்றின் துணையுடன் சிங்கள மொழி செழுமைப்படுத்தப்பட்டது. இவையாவும் வரலாறு.
இராவணபலய என்ற ஒரு அமைப்பு சிங்கள பௌத்த தீவிரவாதிகளால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெயரில் இருக்கும் இராவணன் யார்? இலங்காபுரியின் மன்னனாக இருந்த இராவணன் என்பது குறிப்பிடத்தக்கது.
இராமாயணம் நடந்த கால கட்டம் ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவ்வாறிருக்குமாக இருந்தால் சிவபக்தனான இராவணனின் காலகட்டமும் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவே இருக்கமுடியும்.
எனவே, விஜயன் வருவதற்கு முன்பும், பௌத்தம் வருவதற்கு முன்பும் சிங்கள மொழி தோன்றுவதற்கு முன்பும் இங்கு சிவபக்தர்கள் இருந்தார்கள் என்பதும் சைவசமயத்தைச் சார்ந்தவர்கள் இருந்தார்கள் என்பதும் வெளிப்படையானது.
பிரிட்டிஷார் இந்த நாட்டிற்கு வந்தபோதும் கூட, கண்டிராச்சியத்தின் நீதிமன்ற மொழியாகத் தமிழே இருந்ததென்ற வரலாற்றை பார்க்கின்றபோது இந்நாட்டின் வரலாற்றுப் பூர்வமான பூர்வீகக் குடிகள் தமிழர்களே என்பதும் நிதர்சனமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை