கோட்டாவின் உரைகள் சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளன – வேலுகுமார்!!

தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஒட்டுமொத்த அடக்கு முறைகளையும் கட்டவிழ்த்துவிட்ட ராஜபக்சக்களும், அவர்களின் சகாக்களும் இன்று சிறுபான்மையின மக்களின் நலன்களை பற்றி கதைப்பதானது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

வாக்குவேட்டைக்காக பேரினவாதத்தையும், சிங்கள, பௌத்த மேலாதிக்கத்தையும் மட்டுமே முன்னிலைப்படுத்தி அரசியல் நடத்தும் கூட்டு எதிரணியின் பக்கம், அரசியல் கைக்கூலிகளாக சில தமிழ், முஸ்லிம் பிரமுகர்கள் செயற்படுவது வெட்கி தலைகுனியவேண்டிய விடயமாகும் என்றும் வேலுகுமார் எம்.பி. குறிப்பிட்டார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவுதிரட்டி கண்டி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் இன்று (11.10.2019) காலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“தேர்தல் பரப்புரைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக வழமைபோல் ‘நல்லவர்கள்’ வேடம் பூண்டு ராஜபக்சக்களும், அவரின் சகாக்களும், பல்வேறு உறுதிமொழிகளை வாரி வழங்கிவருகின்றனர்.

அவர்களின் சொல் ஜாலங்களைக்கண்டு ஏமாந்து வாக்குகளை வாரி வழங்குவதற்கு தமிழ் பேசும் மக்கள், கொண்டைகட்டிய சீனர்கள் அல்லர் என்பதை ராஜபக்ச படையணி புரிந்துகொள்ள வேண்டும்.

அதேபோல் பிறப்பால் மட்டுமே தமிழர்களாக இருந்துகொண்டு மக்களை காட்டிக்கொடுத்து வயிறு வளர்க்கும் சில அரசியல் கைக்கூலிகள், தமிழர்களின் வாக்குகளை கூறுபோடுவதற்கு புது விதத்தில் வியூகம் வகுக்க ஆரம்பித்துள்ளனர்.

தாங்கள் ராஜபக்சக்களுக்கு எதிரானவர்கள் என அடையாளப்படுத்திக்கொண்டு மறைமுகமாக கூட்டு எதிரணியை வலுப்படுத்தவதே அவர்களின் உள்நோக்கமாகும். மறுபுறத்தில் தமிழ், முஸ்லிம் வாக்குளை சிதறடிப்பதற்காக சிலர் வேண்டுமென்றெ ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

எனவே, வழமையைவிடவும் மக்கள் இம்முறை விழிப்பாகவே இருக்கவேண்டும். நமது கண்முன்னே பல கறுப்பாடுகள் உலாவித்திரிகின்றன.

அதேபோல் தமிழ் மக்களை கொத்துக்கொத்தாக கொன்றுகுவித்தவர்கள் இன்று வடக்குக்குசென்று அலுவலகங்களை திறந்து, தாங்கள்தான் தமிழர்களின் மீட்பார் என காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றனர். எந்த முகத்தை வைத்துக்கொண்டு வடக்கு மக்களிடம் ராஜபக்ச படையணி வாக்கு கோருகின்றது?

அதேவேளை, 10 வருடங்கள் ஆட்சி அதிகாரம் கையில் இருந்தபோது மலையக மக்கள் தொடர்பில் துளியளவும் சிந்திக்காத ராஜபக்சக்களுக்கு தற்போதுதான் சுடலை ஞானம் பிறந்துள்ளது. நித்திரையில் இருந்து திடீரென விழித்தெழுந்தவர்கள்போல் பல வாக்குறுதிகளை வழங்கிவருகின்றனர்.

அவர்கள் கூறும் விடயங்களில் பெரும்பாலானவற்றை தமிழ் முற்போக்கு கூட்டணி செய்துமுடித்துவிட்டது. குறிப்பாக மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு சஜித்தால் மட்டுமே முடியும். அவரை ஜனாதிபதியாக்கி லயன் யுகத்துக்கு நாம் நிச்சயம் முடிவு கட்டுவோம்.

அதுமட்டுமல்ல எம்மிடம் மேலும் பல திட்டங்கள் உள்ளன. அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றுவோம். எனவே, சமூக மாற்றத்துக்காக சஜித்துடன் சங்கமிக்குமாறு அனைத்து மக்களிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.” என்றார்.
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.