சிவாஜிலிங்கத்திற்கு மனநோய் ஏற்படுகின்றது - பிரசன்னா இந்திரகுமார்!

எந்த தேர்தல்கள் வந்தாலும் சிவாஜிலிங்கம் போன்றவர்களுக்கு மனநோய் ஏற்படுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.


இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பட்டிருப்புத் தொகுதியின் முன்னாள் தலைவருமான சீ.மு.இராசமாணிக்கத்தின் 45வது நினைவு தினம் நேற்று (திங்கட்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரசன்னா இந்திரகுமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தவிசாளர் சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரனுடன் இணைந்து நடைபெறப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கலும் செய்துள்ளார் என அறிகின்றோம்.

நாங்கள் பல நெருக்கடியான காலகட்டத்தில் பல்வேறு தேர்தல்களைச் சந்தித்துள்ளோம். 2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் போர்வைக்குள் வந்தவர்கள் அவர்களின் தனிப்பட்ட சுயலாபங்களை நோக்கமாகக் கொண்டு பல்வேறு செயற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கின்றார்கள்.

சிவாஜிலிங்கம் இதேபோன்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டார். அப்போதே இவருக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள கட்சியினால் முடிவெடுக்கப்பட்டது.

இருப்பினும் எமது சகோதர கட்சிகளைச் சேர்ந்த சில தலைவர்களின் ஆலோசனைக்கமைவாக அச்செயற்பாடு நிறுத்தப்பட்டது. ஆனால் அவர் திரும்பவும் இவ்வாறானதொரு செயற்பாட்டினைச் செய்திருக்கின்றார்.

இதனை இவ்வாறே விட்டுவிட முடியாது இவருக்கான தகுந்த நடவடிக்கை எடுத்தே தீருவோம். எந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்ற ஒருவகையான மனநோய்க்கு சிவாஜிலிங்கம் உள்ளாகியுள்ளாரோ தெரியவில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.