இனி கவனமாக பேசுவோம்-சீமான்!!

ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக கருத்து தெரிவித்த சீமானுக்கு, திருமாவளவன் அறிவுரை கூறிய நிலையில், அதனை ஏற்றுக்கொள்வதாக சீமான் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில், “ஆமாம், நாங்கள்தான் ராஜீவ் காந்தியை கொன்றது” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சீமான் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், விழுப்புரம் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கோரியிருக்கிறது.ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சீமானை சேர்க்க கோரி வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரியிடம் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சீமான் அப்படி பேசியதை தவிர்த்திருக்க வேண்டும் என பல தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தூத்துக்குடியில் இன்று (அக்டோபர் 16) செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “ராஜீவ் காந்தியை கொன்றது நாங்கள்தான் என எந்த இடத்திலும் விடுதலைப் புலிகள் ஒப்புக் கொண்டதில்லை.ராஜீவ் கொலையில் சர்வதேச சதி இருக்கிறது என்பதை ஏற்கெனவே பலரும் சொல்லியுள்ளனர். விடுதலைப் புலிகளின் மீது அந்தப் பழி சுமத்தப்பட்டுவிட்டது. பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகளின் கருத்தும் இதுதான்” என்று தெரிவித்தார்.https://www.tamilarul.net/
கோபம் சரியானதுதான்
விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டுக்கு எதிரான ஒரு கருத்தை நாம் சொல்வது ஈழத்தமிழர்களின் மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்துவதாக அமையாது என்று குறிப்பிட்ட திருமாவளவன், “இந்திய அமைதிப் படையை அனுப்பக் கோரியது தமிழக மக்களும், ஈழ மக்களும்தான். ஆனால் அமைதிப்படை போன பிறகு அதன் மீது கடுமையான அதிருப்தி ஏற்பட்டது. அமைதிப்படை மீது அனைவருக்குமே அதிருப்தி உண்டு. இந்திய அமைதிப் படையின் மீது சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் கோபம் இருந்தது. தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் கோபம் இருந்தது. அந்த வகையில் சீமானின் கோபம் அதோடு பொருந்தக்கூடியதுதான், சரிதான். இருப்பினும், விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்தை நாம் சொல்லும்போது எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
https://www.tamilarul.net/
தரம் தாழ்ந்த பேச்சு
திமுக பொருளாளர் துரைமுருகனிடம் இதுதொடர்பாக கூறியபோது, “தமிழக அரசியல் எவ்வளவு தரம் தாழ்ந்து போயுள்ளது என்பதற்கு சீமான் பேச்சு உதாரணம். ஒருவர் இறந்துவிட்டால் அவரைப் பற்றிய குறைகளை யாரும் பேசுவதே கிடையாது. இப்படி பேசுபவர்கள் அரசியலில் இருக்கிறார்களே என்பதற்காக வெட்கப்பட வேண்டும். இது போன்றவர்களுக்கு பதில் சொல்லி என்னை தரம் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை” என்று விமர்சித்தார்.
கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்
இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமமுக பொதுச் செயலாளர் தினகரன், “நண்பர் சீமான் இப்படிப்பட்ட கருத்தை தெரிவித்தது தேவையில்லாதது. அவருடைய கருத்துக்கள் மக்கள் மனதை புண்படுத்தக்கூடிய வகையிலும் உள்ளன. அதுவும் ராஜீவ் காந்தியின் கொலை குறித்து பேசியுள்ளது ஏற்கமுடியாதது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே ராஜீவ் கொலையில் தங்களுக்கு சம்பந்தமில்லை என்று மறுத்துவிட்டார். சீமான் தனது கருத்தைத் திரும்பப் பெற்றால் அவருக்கும் எங்களைப் போன்ற அரசியல்வாதிகளுக்கும் நல்லது” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “என் மீதுள்ள அக்கறையில் திருமாவளவன் கவனமாக பேசச் சொல்கிறார். அவருடைய அறிவுரைப்படி கவனமாக பேசுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.