அந்த மஞ்சள் நுணா மரத்தடி - சிறுகதை!


மேகங்களினிடையே பயணித்தது அந்த வெள்ளை விமானம். ஆசனத்தில் சாய்ந்து அமர்ந்திருந்தான் பகலவன். எங்கோ ஓர் உலகத்தில் சஞ்சரிப்பது போன்ற பிரமையிலும் மனம் கனத்துப்போயே கிடந்தது. 



நாளும் பொழுதும் அவன் நினைவுகளில் நின்று நர்த்தனம் ஆடியவளின் கல்லறை காணப்போகிறான், உழுது கிடக்கும் அந்த ஒப்பற்ற மண் துணிக்கைகளில் அவளது ஸ்பரிசங்களை உணரப்போகிறான், ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு அவனுக்குள் தோன்றி மறைந்தது. 

உள்ளம் கவலைகளால் அடைந்துகிடந்தது. வானவெளியின் வண்ணங்களை அவனால் ரசிக்கமுடியவில்லை. நினைவுகளை நிறைத்திருந்தது கொடிய வலி. அவன் அவனாக மாற காரணமானவள், ஒரு பெண், அவன் உள்ளமெங்கும் அவளுக்காய் கோர்த்துவைத்திருந்த நினைவுகள் ஏராளம், அவளைக் காணும் போது, அவள் அவனது கைகளுக்குள் சிறைப்பட்டிருக்கும் போது பேசவேண்டுமென அவன் சேமித்துவைத்த வார்த்தைகள் எண்ணிலடங்காதவை. அவளைக் கண்ட நொடியில் இருந்து அத்தனை நினைவுகளையும் பொக்கிஷமாக பூட்டிவைத்திருந்தான், அவளோடு பகிர்ந்து கொள்வதற்காய், ஆனால் அவளில்லாத உலகில் அந்த நினைவுகளோடு மட்டுமே வாழவேண்டி வரும் என அவன் கனவிலும் எண்ணியதில்லை. ஆனாலும் இன்று வரை அப்படியே வாழ்ந்துகொண்டிருக்கிறான்...


“பரிதி” வாய் அவனையுமறியாது அவளது பெயரை உச்சரித்தது. நினைவின் கீலங்களோ புரவியின் வேகத்தில் பாய்ந்தன பல ஆண்டுகள் முன்னோக்கி. 2006 காலப்பகுதி. அப்போது அவன் உயர்தரத்தில் படித்துக்கொண்டிருந்தான். வகுப்பில் அவன் பயங்கரமான குழப்படி. அவனைக் கண்டால் ஆசிரியர்கள் கூட விலகி நடந்துவிடுவார்கள். அப்போதைய நாட்டுச் சூழலும் அவனுக்கு ஏற்றவாறே இருந்தது. யாழ், தன் வசமிழந்து கொண்டிருந்த காலம் அது. வன்னி மக்கள் தமக்கான நிர்வாக கட்டமைப்புடன் வாழ்ந்து கொண்டிருந்தனர். பகலவனுக்கு அக்கா, இரண்டு அண்ணா, எல்லோரும் வெளிநாட்டில் இருந்தனர். அவன் மட்டுமே வீட்டில் பெற்றவர்களுடன் இருந்தான். அவனுக்கென ஒரு கூட்டம் இருந்தது. அவர்கள், அவன் என்ன செய்தாலும் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள். அந்த ஆரவாரமே அவனை மேலும் உசுப்பிவிடும். தான் அன்று செய்ததை விட இரண்டு மடங்கு அதிகமாய் மறுமுறை செய்துவைப்பான். அவன் கையில் எப்போதும் கலகலத்த பணம் அவனைச்சுற்றி தவறான விடயங்களை அனுமதித்தது.

சாதாரண தரத்தில் எல்லாப் பாடங்களிலும் திறமைச்சித்தி பெற்று உயர்தரத்தில் கணிதப்பிரிவில் கல்விகற்ற அவனுக்கு, தான், கெட்டிக்காரன் என்ற மமதையும் இருந்தது. சில மாணவர்கள் அவனுக்கு பின்பாட்டு பாட சிலர் அவனை விட்டு தூரமாக ஒதுங்கிப்போயினர். அவ்வேளையில் அந்தப் பாடசாலைக்கு புதிதாக வந்து இணைந்த மாணவிதான் பரிதி.

கருகருவென்ற நீண்ட கூந்தலும் பாம்மை சுருட்டியது போல அதை அவள் மடித்து கட்டியிருந்த விதமும் நிலவை ஒத்த அவள் முகமும் வில்லாய் வளைந்த புருவங்களும் வெண்குளத்தில் கருமீனாய் அமிழ்ந்து கிடந்த நயனங்களும் அவளை ஒரு தேவதையாக காட்டியது என்றால் மிகை அல்ல. அவளது புருவங்கள் இரண்டும் இணைந்திருந்த அழகோ அவளை உற்றுப்பார்க்காமல் யாரும் சென்றுவிட முடியாத அளவிற்கு கட்டிவைத்திருந்தது. சிரித்தால் கன்னங்களில் விழுந்த குழி இன்னும் அழகூட்டியது அவளுக்கு. முதல் முதலாக அவள் வகுப்பிற்குள் காலடிவைத்தபோது எதிரே வந்த பகலவன் கூட அவளது பிணைந்திருந்த புருவங்களையே உற்றுப் பார்த்தான். வகுப்பில் எல்லோரையும் விட அவள்தான் கெட்டிக்காரியாய் விளங்கினாள். யாரோடும் எதுவும் பேசாத அவளது அமைதி அனைவரையும் அவள் பால் ஈர்த்தது.

அவள் முல்லைத்தீவில் இருந்து படிப்பதற்காக வந்திருக்கின்றாள் என்பதையும் உறவினர் வீட்டில் தங்கியிருக்கிறாள் என்பதையும் ஆசிரியர்களிடம் அவள் கூற, கேட்டனர் அனைவரும். ஆசிரியர்களின் செல்லப்பிள்ளையாக மாறிப்போன அவளை ஏனோ பகலவனுக்கு பிடிக்கவே இல்லை. அப்படித்தான் அவன் எண்ணிக்கொண்டான். ‘வன்னியில் இருந்து வந்தவளாம்’ எனக் கேலி செய்யவும் தவறவில்லை அவன்.

வகுப்பில் சின்னச்சின்ன பிரச்சினைகளில் அவனும் அவளும் மோதிக்கொள்ள நேர்ந்த பல தருணங்களில் அவள் அமைதியாக விட்டுவிடுவாள். அவனுக்குத்தான் ஏதோ போல ஆகிவிடும். அவளை எப்படியாவது அவமானப்படுத்த எண்ணிய பகலவன், யாருமில்லாத போது அவளது படத்தை கரும்பலகையில் வரைந்து ஒரு தொலைபேசி இலக்கத்தையும் எழுதிவிட்டான். அதன் விளைவு பாரதூரமாய் இருக்கும் என எண்ணியும் அவன் செய்த அச்செயல் அவனது வீம்பை மற்றவர்களுக்கு காட்டியது. வகுப்பிற்குள் வந்த மாணவர்கள் சிலர் அவளைப்பார்த்து நக்கலாய் சிரிக்க, சிலர் ஆசிரியரிடம் கூற, “யார் கீறியது?” என்ற கேள்விக்கு பதில் வரவில்லை.

கோபத்தில் நின்றார் ஆசிரியர். அவ்வேளை மெல்ல எழுந்த பரிதி “ சேர், பரவாயில்லை விடுங்க, இது அவமானமா இருந்தாலும், அதை பெரிதுபடுத்த நான் விரும்பவில்லை, இது தெரிஞ்சா தங்கவிட்டுள்ள உறவினர் என்னை வீட்டுக்கே அனுப்பிவிடுவார்கள், நான் படிக்கவேணும் ” என்றாள் கண்ணீரோடு. ஆசிரியரின் இதயம் வலித்தது, ஏனோ பகலவனுக்கும் வலித்தது. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
இன்னொரு நாள் வகுப்பிற்குஅலைபேசி கொண்டு வந்திருந்தான், பகலவன். ஆசிரியர் இல்லாத போது தனது நண்பர்களிடம் காட்ட நண்பர்களாய் படங்களும் எடுத்துக்கொண்டனர். விடயம் ஆசிரியரை எட்டிவிட அவர் வந்து கோபமாக விசாரித்த போது அனைவரும் தயங்கினர். பரிதி அவனைப் பார்ப்பதும் ஆசிரியரைப் பார்ப்பதுமாய் இருந்தாள். ‘அவள் சொல்லிவிடுவாள்’ என்றே எண்ணிய பகலவன் ஒற்றைவிரலால் அவளை எச்சரித்தான். சட்டென்று எழுந்தவள், பகலவன் தான் வைத்துள்ளான் என்பதையும் அவனது பையில் உள்ளது என்பதையும் கூறிவிட்டாள். அவளது அந்த தைரியம் அவனை ஏதோ செய்தது. அதன் பின்னர் அவன் அலுவலகம் அழைக்கப்பட்டதும் பெற்றோர் அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டதும் தொடர்ந்த விடயங்கள். அவள் மீதான அவனது கோபம் உச்சத்தில் இருந்தது.

அன்று மைதானத்தில் அவன் விளையாடிக்கொண்டிருந்த போது அவள் தனியே சென்றுகொண்டிருந்தாள். எங்கோ அடிக்கவேணடிய பந்தை அவளைக்குறி பார்த்து அடித்தான். பந்து வேகமாய் அவளது தலையைத் தாக்கியது. அந்த இடத்திலேயே மயங்கிச்சரிந்தாள் அவள். ஓடிச்சென்று தாங்கியவனும் அவனே, ஆசிரியர்கள் தண்ணீர் தெளித்து எழுப்ப நினைவு வந்ததும் அவள் வலியில் துடித்தாள், அவன் தவித்தான், நண்பர்கள் நடிப்பதாகச் சொன்னார்கள், அவனுக்கு மட்டுமே, ‘தான் நடிக்கவில்லை’ என்பது புரிந்தது. இதயம் நின்று போனது போல இருந்த உணர்வை அவனால் அடையாளம் காணமுடியவில்லை. அவள் கரங்களை பற்றியபடி அழவேண்டும் போல தோன்றியது அவனுக்கு. நிமிர்ந்து அவளைப் பார்க்க அவளும் அவனைத்தான் பார்த்தாள். அவன் வேண்டுமென்று அடித்தது அவளுக்குத் தெரியும் என்றாலும் அவனைக் காட்டிக்கொடுக்கவில்லை. அவனை பார்த்த பார்வையில் ஆறதல் தான் இருந்தது, வெறுப்பு இல்லை.

அந்தச் சம்பவத்தின் பின்னர் அவன் தலைகீழாக மாறிவிட்டிருந்தான். யாரோடும் அதிகம் பேசாமல், படிப்பும் தானுமாக இருந்தான். எப்போதாவது பரிதி நிமிர்ந்து பார்த்தால் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருப்பான், அன்றுறொருநாள், பரிதியைப்பற்றி பாடசாலை மதிலில் யாரோ எழுதியிருப்பதாக கூற, ஆசிரியர்கள் இவனையே சந்தேகமாய் பார்த்தனர். அப்போதும் பரிதி அந்த ஆறுதல் பார்வையைத் தான் பார்த்து வைத்தாள். அவன் பேசத்துடிக்கும் வார்த்தைகளை அவள் பார்வையில் கண்டுகொள்வது அவனுக்கு விசித்திரமாய் இருந்தது, திரும்பி நடந்தவளை ஆழமாய் பார்த்தவனிடம், நண்பன் தூயவன், ‘தானே அப்படி எழுதினேன் எனக்கூற’, “பளார்” என அறைந்துவிட்டான்.
“என்னடா---முன்னெல்லாம் நீ தானே அவளைக் கலாய்ப்ப, இப்ப மட்டும் என்ன?” என்றவனுக்கு “இதோ பார் தூயவன், இனிமே பரிதியைப்பற்றி ஏதாவது எழுதினே, நம்ம நட்பு கலைஞ்சிடும்” என்றான். பருவம் தந்த அந்த போதையை நண்பர்கள் புரிந்துகொண்டனர்.
“விடுடா---அவ, இன்னும் ரெண்டு மாசத்தில போய்டுவா, அதோட எல்லாம் போயிடும்” என்ற தூயவனிடம்
“இல்லை---நான் வாழும் வரைக்கும் அவளும் என் மனசில இருப்பா” என்றான்.

பரீட்சை முடிந்தது, பரிதி வீட்டிற்குச் செல்வதற்காக பேரூந்து தரிப்பிடத்தில் நின்றாள், அங்கே வந்தவன், “பரிதி”
என்றான்.
ஆச்சரியமாய் நிமிர்ந்தாள்.
“எப்ப திரும்ப வருவீங்க?” என்றான்.
“இனி இங்க வரமாட்டன்” அவள் சொல்ல, “நான் காத்திட்டிருப்பன்” என்றான். அவசரமான அவனது பேச்சு அவளை ஏதோ செய்தது. “ஏன்?” அவள் கேட்க, “உனக்காக” என்றான்.

“வேண்டாம் -----என் பயணம் வேற, நீங்க போங்க” சொல்லிவிட்டு அவள் சென்றுவிட்டாள். அதன் பின்னர் அவளை தேடாத நாளில்லை. நாட்டுச்சூழல் தடுமாற்றமாக இருக்க பெற்றோர் அவனை வெளிநாடு அனுப்பிவிட்டனர். பின்னர் தூயவன் மூலம் அறிந்துகொண்டான், அவள் ஒரு போராளி என்பதையும் படிப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்டவள் என்பதையும்.

யுத்தம் நடந்தபோது அவன் உயிர் அவனிடம் இல்லை, ஒரு நாள் கூட அவளோடு தனித்துப் பேசியதில்லை, ஆனாலும் அந்தப் பார்வை அவனை விட்டுவிலக மறுத்தது, அவளுக்காய் தினமும் பிரார்த்தித்தவன், உடனே வரமுடியாத சூழலில் இருந்தான். பத்து ஆண்டுகளின் பின்னர் தான் சொந்த மண்ணுக்குச்செல்ல அவனுக்கு அனுமதி கிடைத்தது, இதோ புறப்பட்டு விட்டான், அவனுடைய அவளைத்தேடி., இல்லை அவளது கல்லறை தேடி. எண்ணங்கள் அறுபட்டது அவனுக்கு. நிமிர்ந்து அமர்ந்தான்.

அவசரமாக அந்த துயிலுமில்லம் விரைந்தவன், “ தூயவன், எந்த இடமடா?” என்றான். “அந்த நுணா மரத்தடியிலதான்,” என்றான் , அவன். உழுதுவிடப்பட்ட அந்த இடத்தில் சட்டென அமர்ந்தவன், மண்ணை கைகளால் மெல்லத் தடவினான். அந்த மண்ணை அள்ளிக்கொண்டவன், “பரிதி-----பரிதி-----பரிதி” என ஓலமிட்டபடி கதறினான்.

அருகில் நின்ற நண்பன் அவனது கரங்களைப் பற்றிய போது “என் பரிதிடா” குழந்தையாய் குலுங்கிக் குலுங்கி அழுதான் பகலவன்.

கோபிகை.
தமிழருள் இணையத்தளம். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.