பெயர்பெற்ற பள்ளத்தாக்கின் சகோதரிகள்!!

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா அதன் எண்ணற்ற திராட்சைத் தோட்டங்களுக்கும் பழத்தோட்டங்களுக்கும் பெயர் பெற்றது. ஆனால் இவற்றையெல்லாம் விடவும் இப்போது வட கலிபோர்னியாவின் மெர்சிட் கவுண்டியில் உள்ள ஒரு சாதாரண பண்ணை வீடும் சிறிய பண்ணையும் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.


ஏனெனில் பள்ளத்தாக்கின் சகோதரிகள் (sisters of the valley) எனத் தங்களை அழைத்துக் கொள்ளும் சிறிய கன்னியாஸ்திரிகள் குழுவொன்று தங்களது மிகச்சிறந்த கலிபோர்னியா கஞ்சா தயாரிப்புப் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வது இங்கிருந்துதான்.

கஞ்சா கன்னியாஸ்திரிகள் என அழைக்கப்படும் இவர்கள் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. தாங்கள் எந்தவிதமான மதத்தையும் சாராதவர்கள். சொல்லப்போனால் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் எனச்சொல்லும் இவர்கள், கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாக இருந்த ஆன்மிக நடைமுறைகளைப் பின்பற்ற முயற்சிப்பதாகவும் அமெரிக்க ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளனர்.

மேலும் பைபிளில் சொல்லப்பட்டுள்ள புனித எண்ணெய் கஞ்சா எண்ணெய்தான் எனச் சொல்லும் அவர்கள் யேசு உயிரோடிருந்தது உண்மையென்றால் அவர் கஞ்சா புகைத்திருப்பார் என்று தாம் நம்புவதாகவும் கூறுகின்றனர்.

ஆன்மீகம், பெண்ணியம், சிகிச்சையளித்தல் போன்ற வழிமுறைகளில் தீவிர நம்பிக்கையுள்ள இந்த கன்னியாஸ்திரிகள் கஞ்சா பொருட்களினால் மனிதர்களுக்கு நிறைந்த பயன்கள் உள்ளதெனவும் தீவிரமாக நம்புகின்றனர்.

கஞ்சாவைப் பயன்படுத்திச் செய்யப்படும் சவர்க்காரம், எண்ணெய், மேற்பூச்சு களிம்புகள் போன்ற தங்கள் தயாரிப்புகளுக்கு, மரபணு மாற்றப்படாமல் இயற்கையான முறையில் தங்கள் பண்ணையில் வளர்க்கப்படும் கஞ்சாவையே பயன்படுத்துவதாகவும் இப்பொருட்கள் தூக்கமின்மை, மூட்டுவலி, கவலை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாகும் எனச் சொல்கின்றனர்.

அவர்களது தயாரிப்புகளை அவர்களுடைய இணையத்தளத்தின் மூலம் விற்பனை செய்து ஆண்டுக்கு மில்லியன் டொலருக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.